முப்பரிமாண வருடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறிய பொருளொன்றை வருடும் முப்பரிமாண வருடி.

முப்பரிமாண வருடி என்பது, உலகப் பொருட்களை அல்லது சூழலைப் பகுத்தாய்ந்து அவற்றின் வடிவம், தோற்றம் என்பவை தொடர்பான முப்பரிமாணத் தரவுகளைச் சேகரிப்பதற்கான கருவி ஆகும். இத்தரவுகளைப் பயன்படுத்தி எண்ணிம முப்பரிமாண மாதிரிகளை உருவாக்க முடியும். பல்வேறுபட்ட தொழில்நுட்பங்கள் இவ்வாறான முப்பரிமாண வருடிகளை உருவாக்குவதற்குப் பயன்படுகின்றன. ஒவ்வொரு தொழில்நுட்பமும் அதற்கேயுரிய சாதக பாதகத் தன்மைகளைக் கொண்டுள்ளது.

முப்பரிமாண வருடிகள் பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பொழுதுபோக்குத் துறையில் குறிப்பாக நிகழ்பட விளையாட்டு மென்பொருள் உற்பத்தியில் இது பெரிதும் பயன்படுகிறது. இவற்றைவிட, மாதிரிகளை உருவாக்குதல், ஏற்கனவே இருக்கும் கட்டிடங்களதும், அமைப்புக்களினதும் எண்ணிம மாதிரிகளை உருவாக்கல், அணுகுவதற்கு இயலாத பொருட்களின் விவரங்களைப் பெறுதல், பண்பாட்டுப் பொருட்களை ஆவணப்படுத்தல், தொழிற்றுறை உற்பத்தி, போன்றவற்றில் முப்பரிமாண வருடல் பயன்படுகின்றது.

செயற்பாடு[தொகு]

சுலோவேனியாவில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் உள்ள திமிங்கிலம் ஒன்றின் எலும்புக் கூட்டின் முப்பரிமாண வருடல் (ஆகத்து 2013)

ஒரு முப்பரிமாணப் பொருளின் மேற்பரப்பில் உள்ள புள்ளிகளைக் குறிக்கும் "புள்ளி முகில்" (point cloud) ஒன்றை உருவாக்குவதே முப்பரிமாண வருடலின் நோக்கமாகும். இப்புள்ளிகளைப் பயன்படுத்தி வருடப்பட்ட பொருளின் எண்ணிம மாதிரியை உருவாக்கிக் கொள்ளலாம். அப்புள்ளிகளின் நிறத் தகவல்களையும் பெற்றிருந்தால் அதன் மூலம் அவ்வடிவத்தின் நிறத்தையும் தீர்மானிக்க முடியும்.

முப்பரிமாண வருடிகளுக்கும், ஒளிப்படக் கருவிகளுக்கும் இடையே ஒப்புமைகள் உள்ளன. ஒளிப்படக் கருவிகளைப் போலவே இவற்றுக்கும் கூம்பு வடிவக் காட்சிப்புலம் உண்டு. அத்துடன் ஒளிப்படக் கருவிகளைப் போலவே மறைக்கப்படாத பரப்புக் குறித்த தகவல்களை மட்டுமே முப்பரிமாண வருடியால் திரட்ட முடியும். ஒளிப்படக் கருவிகள் அவற்றின் காட்சிப் புலத்துள் அடங்கக் கூடிய மேற்பரப்பு ஒன்றின் நிறத் தகவல்களைச் சேகரிக்கிறது. ஆனால் முப்பரிமாண வருடியின் முக்கிய நோக்கம் அதன் காட்சிப் புலத்துள் அடங்கும் மேற்பரப்பில் ஒள்ள புள்ளிகளின் தூரத் தகவல்களைச் சேகரிக்கிறது. இதிலிருந்து முப்பரிமாண வெளியில், அம்மேற்பரப்பில் உள்ள ஒவ்வொரு புள்ளியினதும் அமைவிடத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஒரு இடத்தில் இருந்து வருடுவதன் மூலம் ஒரு பொருளின் முழுமையான மாதிரியை உருவாக்க முடியாது. பொருளின் சிக்கல் தன்மையைப் பொறுத்து பல்வேறு புள்ளிகளில் இருந்து வெவ்வேறு திசைகளில் பல வருடல்களைச் செய்ய வேண்டியிருக்கும். இவ்வாறு பெறப்பட்ட தகவல்களில் பொதுப் புள்ளிகளைப் பொருத்துவதன் மூலம் ஒருங்கிணைத்து முழுமையான மாதிரி உருவாக்கப்படும். இவ்வாறு முழு மாதிரியைப் பெறும் முறை "முப்பரிமாண வருடல் வழிமுறை" (3D scanning pipeline) எனப்படுகின்றது. [1]

குறிப்புகள்[தொகு]

  1. Fausto Bernardini, Holly E. Rushmeier (2002). "The 3D Model Acquisition Pipeline" (pdf). Comput. Graph. Forum 21 (2): 149–172. doi:10.1111/1467-8659.00574. http://www1.cs.columbia.edu/~allen/PHOTOPAPERS/pipeline.fausto.pdf. 

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

3D Scanning - A New View On Things பரணிடப்பட்டது 2013-09-24 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)

"https://ta.wikipedia.org/w/index.php?title=முப்பரிமாண_வருடி&oldid=3717429" இலிருந்து மீள்விக்கப்பட்டது