வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் (திரைப்பாடல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
"வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும்"
பாட்டு by ஏ. ஆர். ரஹ்மான் from the album கன்னத்தில் முத்தமிட்டால்
வெளியீடு2002
பதிவுசென்னை, இந்தியா
வகைதிரைப் பாடல்
எழுதியவர்வைரமுத்து
கன்னத்தில் முத்தமிட்டால் track listing
"ஒரு தெய்வம் தந்த பூவே" "வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும்" "விடை கொடு எங்கள் நாடே"

வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் என்று தொடங்கும் பாடல், கன்னத்தில் முத்தமிட்டால் என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல். வைரமுத்துவின் பாடல் வரிகளுக்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்து அவரே பாடியுள்ளார். 2002 ஆண்டின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய திரைப்பட விருது இப்பாடலையும் உள்ளடக்கி அவர் இப்படத்துக்கு எழுதிய பாடல்களுக்காக வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டது.[1] இந்தப் படத்தின் இசையமைப்புக்காக ஏ. ஆர். ரஹ்மானுக்கும் 2002 ஆம் ஆண்டின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.[2]

சூழ்நிலை[தொகு]

தமிழ் நாட்டில் ஒரு இளம் தம்பதியரால் வளர்க்கப்பட்டுவரும் இலங்கை அகதிப் பெண்ணொருத்திக்குப் பிறந்த சிறுமி ஒருத்தியை மையமாகக் கொண்டதே திரைப்படத்தின் கதை. கதைப் போக்கில் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் கொடுமைகள், அதனால் மக்கள் படும் அவலம் போன்றவை எடுத்துக்காட்டப்படுகின்றன. போரினால் தனது தாய் தந்தையரை விட்டுப் பிரிக்கப்பட்டவளான அந்தச் சிறுமி ஒரு கட்டத்தில் தான் யார் என்பதை அறிந்து தனது பெற்றோரைப் பார்க்க வேண்டும் என்று துடிக்கிறாள். அவளது பெற்றோரைத் தேடி இலங்கைக்குச் செல்லும் அவளும் அவளது வளர்ப்புப் பெற்றோரும் போர்ப் பகுதிக்குள் அகப்பட்டுப் பெரும் துன்பங்களுக்கு ஆளாகின்றனர். இவ்வாறான ஒரு பின்னணியில் உலகம் எங்கும் போர் ஒழிந்து அமைதி பிறக்க வேண்டும் என்னும் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறது இப்பாடல்.

பாடல் சிறப்பு[தொகு]

இப்படத்தில் வரும் எல்லாப் பாடல்களுமே மிக்சிறப்பாக அமைந்துள்ளன. வழமையான திரைப் பாடல்களுக்கும் மேலாக இப்படப் பாடல்கள் கவிதைத் தரத்துக்கு உயர்ந்துள்ளதாக தேசிய திரைப்பட விருதுக் குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.[3]

"வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலர்கள் சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே பிள்ளையின் சிறுமுக சிரிப்பில்"

என்னும் பாடல் வரிகள் மூலம் உலக அமைதிக்கான ஏக்கத்தைக் கவிதை நயத்துடன் பாடலாசிரியர் வெளிப்படுத்தியுள்ளார்.

இசை[தொகு]

இப்பாடல் கர்நாடக இசையின் இராகங்களில் ஒன்றான ஹம்சத்வனியில் அமைந்துள்ளது.[4]

குறிப்புகள்[தொகு]

  1. 50 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் நிகழ்வு 2003, பக். 60.
  2. 50 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் நிகழ்வு 2003, பக். 58.
  3. 50 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் நிகழ்வு 2003, பக். 60.
  4. Charulatha Mani, A bright start, The Hindu, March 1, 2013

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]