விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஏப்பிரல் 7, 2014

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐ. மாயாண்டி பாரதி (1917, தமிழ்நாடு) இந்திய விடுதலைப் போராட்ட வீரர், பொதுவுடைமைப் போராளி, இதழாளர், எழுத்தாளர், நகைச்சுவைப் பேச்சாளர், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் சமிதியின் தலைவர். இவர் உப்புச் சத்தியாகிரகம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உட்புகுதல் போராட்டம், இரண்டாம் உலகப்போருக்கு எதிரான போராட்டம், ஆகத்து புரட்சி, 1950 களில் பொதுவுடமைவாதிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அடக்குமுறைகளை எதிர்த்த போராட்டங்கள் ஆகிய வரலாற்று முக்கியத்துவம் வாழ்ந்த போராட்டங்ககளில் பங்கெடுத்துவர். இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் 13 ஆண்டுகள் சிறையில் தனது வாழ்க்கையைக் கழித்தவர். தனது 70 ஆண்டுகாலப் பொதுவாழ்வில் தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஊர்களுக்குச் சென்று பொதுக்கூட்டங்கள், திருமண விழாகள் உள்ளிட்ட பல்வேறு கூட்டங்களின் வழியாக பொதுவுடமைக் கருத்துகளைப் பரப்பியவர்; பரப்பி வருபவர். மாயாண்டி பாரதி பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகள் நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அவையானவை: படுகளத்தில் பாரதமாதா (1939), தூக்கு மேடைத் தியாகி பாலுவின் இறுதி நாட்கள், போருக்குத் தயார்! , விடுதலைப் போரில் வெடிகுண்டுகளும் வீரத் தியாகங்களும் (2012), அரசு என்றால் என்ன?. மேலும்...


இன்சுலின் சாராத நீரிழிவு அல்லது முதுமை தொடக்க நீரிழிவு என்று முன்பு அழைக்கப்பட்ட இரண்டாவது வகை நீரிழிவு (Diabetes mellitus type 2), இன்சுலின் எதிர்ப்பு, ஒப்பீட்டளவில் இன்சுலின் குறைபாடு ஆகியவற்றின் காரணமாக நம் இரத்தத்தில் சர்க்கரை அளவுகளை அதிகப்படுத்தும், ஒரு வளர்சிதைமாற்ற நோயாகும். அடிக்கடி சிறுநீர் கழித்தல் (polyuria), அதிகமாக தாகமெடுத்தல் (polydipsia), அளப்பரிய பசி (polyphagia) ஆகியவை இந்நோயின் மரபார்ந்த அறிகுறிகளாகும். மொத்த நீரிழிவு நோயாளிகளில் இரண்டாம் வகை நீரிழிவு உள்ளவர்கள் தொண்ணூறு சதவிகிதமும் (90%), மற்ற பத்து சதவிகிதத்தினர் (10%) முதன்மையாக ஒன்றாம் வகை நீரிழிவு (Diabetes mellitus type 1), கர்ப்பகால நீரிழிவு (gestational diabetes) கொண்டவர்களாகவும் உள்ளனர். இந்நோய் உருவாவதற்கு, மரபியல் முன்னிணக்கம் கொண்டவர்களில், உடற் பருமன் ஒரு முதன்மைக் காரணியாக விளங்குகிறது.