நடுகல் (வெள்ளாளங்கோட்டை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நடுகல் என்பது போரில் வெற்றி கண்டு பட்டுப்போனவர்களுக்கு நினைவுச் சின்னமாக ஏனையோரால் நடப்படும் கல். இதனை ஒருவகை வெற்றித்தூண் எனலாம். தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம் வெள்ளாளங்கோட்டை [1] என்னும் ஊரில் கயத்தார் - கழுகுமலைச் சாலைப் பகுதியில் கயத்தார் ஊரிலிருந்து எட்டுக் கிலோமீட்டர் தொலைவில் கி.பி. எட்டாம் நூற்றாண்டினதாக மதிக்கப்படும் நடுகல் ஒன்று உள்ளது.

இந்தக் கல்லை அங்குள்ள ஊர் மக்கள் கடுவக்கல் என்கின்றனர். கடுவன் என்றால் ஆண்குரங்கு. இதில் உள்ள உருவத்தை அவர்கள் குரங்கு எனப் பார்க்கின்றனர். [2] [3] இந்த ஊர்ப்பகுதி மக்கள் ஆண்-பூனையைக் கடுவன் என்னும் சொல்லால் வழங்கிவருவதாகத் தெரிகிறது. உண்மையில் கல்லில் பொறிக்கப்பட்டிருக்கும் உருவம் ஆண்-குரங்கோ, ஆண்-பூனையோ அன்று. புலி என்பதனைக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்களால் அறியமுடிகிறது.

பாண்டிச்சேரிப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை ஆசிரியர் ஜி. பால்துரை என்பவர் இதனைக் கண்டறிந்து வெளிப்படுத்தினார். வரலாற்றுக் காலத்தில் ஒன்றாகக் குறிப்பிடப்படும் தமிழ்நாட்டு இரும்புக்காலம் [4] முதலாகவே நடுகல் நினைவுச் சின்னங்கள் தமிழகத்தில் கிடைத்துள்ளன எனக் கல்வெட்டியல் டாக்டர் இராசன் குறிப்பிடுகிறார்.

கல்வெட்டுச் செய்தி[தொகு]

  • எழுத்து - வட்டெழுத்து
  • உருவம் - நடுவில் புலி. இருபுறமும் தந்தையும் மகனும் புலியோடு போரிடும் காட்சி.
  • பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் - பெருவாலியூர் கண்ணன் சேந்தன் கண்ணன் கோவனும் தொழ இ[ப்] புலி கலாய்[ற்]றுப் பட்டான்
  • இக் கல்வெட்டில் உள்ள மூன்று வரிகளைக் கல்வெட்டு ஆய்வாளர் இராசகோபால் சுப்பையா இவ்வாறு படிக்கிறார்.
பெரூராலியார் சேந்தங் கண்
ணனு கண்ணங் கோவனுந் தொழஈ பு
லி கலாய்த்துப் பட்டார் 
  • பொருளோட்டத் தொடர் பேரூர் ஆலியர் சேந்தங்கண்ணனும் கண்ணங்கோவனும் தொழ (தொழப்பட) ஈ (ஈங்கு) புலி கலாய்த்துப் பட்டார்.
  • பொருள் பொதிவு - கண்ணன் சேந்தன் மகன் கண்ணன் கோவன் எனப் இரு பெயர்களை விளக்கிக் கூறுவது தமிழ் மரபு. இவர்கள் பெருவாலியூர் என்னும் ஊரினர். [5] இவர்கள் தொழப்பட்டனர். கலாய் என்பது கலாம் என்னும் பெயர்ச்சொல்லின் வினை வடிவம். கலாம் என்பது கலகம். இங்குக் கலாய்ற்று என்னும் சொல் போரிட்டு என்னும் பொருளைத் தரும். பட்டான் என்னும் சொல் போரில் மாண்டவனைக் குறிக்கும். [6]

மேற்கோள்[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. நடுகல் சான்றால் வெல்லாளன்கோட்டை எனத் தெரியவரும் இந்த ஊரின் பெயர் இக்காலத்தில் வெள்ளாளன்கோட்டை < > வெள்ளாளங்கோட்டை என மருவி வழங்கப்படுகிறது.
    வெல் ஆளன் - வெல்லாளன்.
    கோட்டை என்னும் பெயரை ஊருக்கு இடுவது தென்-தமிழகப் பகுதிகளில் மிகுதி.
  2. குரங்கினுள் ஏற்றைக் கடுவன் என்றலும் (தொல்காப்பியம், மரபியல் நூற்பா 69
  3. இது அனுமானுக்குக் கோயில் கட்டும் பழக்கத்தால் தோன்றிய எண்ணம்
  4. கி.மு. 1000 - 600
  5. பெரு ஆலியூர் - பெருமழையூர் (ஆலி - அத்திக்கட்டி ஆலங்கட்டியாகப் பொழியும் மழை
  6. படு = துன்புறு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடுகல்_(வெள்ளாளங்கோட்டை)&oldid=3452474" இலிருந்து மீள்விக்கப்பட்டது