பரமசாயிகம் (சிற்பநூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியச் சிற்ப மரபில் பரமசாயிகம் அல்லது பரமசாயிபதம் என்பது, 32 வகைகளாகச் சொல்லப்படும் தள அமைப்புக்களில் ஒன்று. "இது ஒவ்வொரு பக்கமும் ஒன்பதாகப் பிரிக்கப்பட்டு மொத்தம் எண்பத்தோரு (9 x 9) பதங்களைக் (நிலத்துண்டு) கொண்டது. இந்த அமைப்பில், நடுவில் வரக்கூடிய ஒன்பது பதங்கள் பிரம்மாவுக்கு உரியன. இதைச் சுற்றி. ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு வளையங்களாகப் பதங்கள் அமைந்துள்ளன. பிரம பதத்துக்கு அடுத்துள்ள வளையம் இரண்டு பதங்கள் அகலம் கொண்டது. இவை மொத்தம் எட்டு தேவர்களுக்கு உரியவையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வெளிப்புற வளையம் ஒரு பதம் அகலம் கொண்டது. இதில் அமைந்துள்ள 32 பதங்கள் ஒருவருக்கு ஒன்றாக 32 தேவர்களுக்கு உரியவை.

உட்சுற்றில், பிரம பதத்துக்கு நேர் கிழக்கே உள்ள ஆறு பதங்களை உள்ளடக்கிய பகுதி பூதரனுக்கு உரியது. இதுபோல் கிழக்கு, தெற்கு, மேற்கு ஆகிய திசைகளில் உள்ள பதங்கள் முறையே ஆரியகன், விவசுவதன், மித்திரன் ஆகிய தேவர்களுக்கும், உரியவை. நான்கு மூலைகள் ஒவ்வொன்றும் இரண்டிரண்டு தேவர்களுக்கானவை. உட்சுற்றில் வடகிழக்கு மூலையில் அபவத்சன், ஆபவத்சன் ஆகிய தேவர்களுக்கும், தென்கிழக்கு மூலையில் சவித்திரன், சாவித்திரன் ஆகியோருக்கும், தென்மேற்கு மூலையில் இந்திரன், இந்திரஜயன் ஆகியோருக்கும், வடமேற்கு மூலையில் உருத்திரன், உருத்திரஜயன் ஆகியோருக்கும் இரண்டிரண்டு பதங்கள் உள்ளன.[1]

வெளிச் சுற்றில், வடகிழக்கு மூலையில் ஈசனுக்கும், அங்கிருந்து வலஞ்சுழியாக பர்சன்யன், சயந்தன், மகேந்திரன், பானு, சத்தியன், பிருசன், அந்தரிக்சன், அக்கினி, பூசன், விததன், கிருகக்சதன், யமன், கந்தர்வன், பிருங்கராசன், மிருசன், பிதிரர், தௌவர்கன், சுக்ரீவன், புட்பதந்தன், வருணன், அசுரன், சோசன், ரோகன், மாருதன், நாகன், முக்கியன், பல்லாடன், சோமன், மிருகன், அதிதி, உதிதன் ஆகிய 32 தேவர்களுக்கும் தலா ஒவ்வொரு பதம் உள்ளது.[2] இவர்கள் ஒவ்வொரு பதத்துக்கு அதிபதிகள் ஆகையால் இவர்களை ஏகபதாதிபதிகள் என்பர்.[3]

குறிப்புகள்[தொகு]

  1. Acharya, Prasanna Kumar., 2010. பக் 26.
  2. Acharya, Prasanna Kumar., 2010. பக் 27.
  3. பவுன்துரை, இராசு., 2004 பக் 47.

உசாத்துணைகள்[தொகு]

  • Acharya, Prasanna Kumar., Architecture of Manasara, Translated from Original Sanskrit Text, New Barathiya Book Corporation, Delhi, 2010.
  • பவுன்துரை, இராசு., தமிழகக் கோயிற்கட்டடக்கலை மரபு - மயன் அறிவியல் தொழில்நுட்பம், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2004.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரமசாயிகம்_(சிற்பநூல்)&oldid=3850412" இலிருந்து மீள்விக்கப்பட்டது