இரு சகோதரர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரு சகோதரர்கள்
இயக்கம்எல்லிஸ் ஆர். டங்கன்
தயாரிப்புகோயமுத்தூர் பரமேஸ்வர் சவுண்ட் பிக்சர்ஸ்
கதை"பாலபாரதி" ச. து. சு. யோகி
இசைஅனந்தராம், கோபால்சுவாமி
நடிப்புகே. பி. கேசவன்
டி. எஸ். பாலையா
கே. கே. பெருமாள்
எஸ். என். கண்ணாமணி
எஸ். என். விஜயலட்சுமி
எம். ஜி. ராமச்சந்திரன்
ராதாபாய்
ஒளிப்பதிவுநவல் பி. பார், ஏ. டி. பவார்
படத்தொகுப்புநாராயணராவ்
வெளியீடு1936
நீளம்16085 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இரு சகோதரர்கள் 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பி. கேசவன், டி. எஸ். பாலையா, எஸ். என். கண்ணாமணி, எஸ். என். விஜயலட்சுமி, எம். ஜி. ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

இந்திய சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்து, போராட்ட நடவடிக்கைகள், கை ராட்டினத்தில் நூல் நூற்பது, அன்னியப் பொருட்கள் மறுப்பு போன்ற நடவடிக்கைகளை அன்றைய அரசு தடை செய்திருந்த காலத்தில் வெளிவந்தத் திரைப்படம்.[2]

குடும்ப ஒற்றுமையின் மூலம் தேச ஒற்றுமை, மதுவிலக்குப் பரப்புரை, அன்றய ஆட்சிக் காலத்தின் வேலையில்லாத் திண்டாட்டம் முதலிய வற்றை முன்னிறுத்திய திரைக் கதையைக் கொண்டது இரு சகோதரர்கள்.[3]

இந்தத் திரைப்படத்தின் ஒளிநாடா இருப்பதாக அறியப்படவில்லை.[4]

நடிகர்கள்[தொகு]

நடிக, நடிகையர்
நடிகர் பாத்திரம்
கே. பி. கேசவன் பசுபதி
கே. கே. பெருமாள் சபாபதி
டி. எஸ். பாலையா கோபால்
கே. நாகராஜன் சமீன்தார்
மாஸ்டர் பி. இரத்தினம் நாகராஜன் (பசுபதியின் மகன்)
எம். கண்ணன் சன்னியாசி, கருணாகரம் (சுந்தரியின் தம்பி)
எம். மாசிலாமணி முருகதாஸ், மகாதேவர்
எம். ஜி. சக்ரபாணி காவல்துறை அதிகாரி
எம். ஜி. இராமச்சந்திரன் மஸ்தான் (கோபாலின் நண்பன்)
பி. ஜி. வெங்கடேசன் மார்வாரி, பொம்மை வியாபாரி
எம். குஞ்சப்பன் மேடை நடிகர்
எம். பழனிசுவாமி மேடை நடிகர்
எம். ராமசுவாமி தபால்காரர்
எஸ். என். கண்ணாமணி சாந்தா
எஸ். என். விஜயலட்சுமி சரசா
ராஜம் சரோஜா (பசுபதியின் மகள்)
கே. கிருஷ்ணவேணி சுந்தரி
அலமேலம்மாள் குப்பிப்பாட்டி
எம். எம். ராதாபாய் பார்வதி (வேலைக்காரி)

படக்குழு[தொகு]

கதைச்சுருக்கம்[தொகு]

இரு சகோதரர்கள் திரைப்படத்தில் டி. எஸ். பாலையா.

மகாதேவர் என்பவர், தான் சாகுந் தருவாயில் சபாபதி, பசுபதி என்ற தன் இரு மகன்களையும் அருகிலழைத்து, தான் இறந்தபின் அவர்கள் மிக்க ஒற்றுமையோடும் அன்போடும் வாழவேண்டும் என்று புத்திமதி கூறி இறந்தார். சபாபதியின் மனைவி சரசா, பொறாமையும் அகம்பாவமும் கொண்டவள். பசுபதியின் மனைவி சாந்தா மிகவும் நற்குணம் உடையவள். சரசா சாந்தாவையும் அவளது பிள்ளைகளையும் படாத பாடுபடுத்தி வந்தாள். தன் கணவனிடத்தில் சாந்தாவைப்பற்றி எப்பொழுதும் பொய்க் குற்றம் சாற்றி அவரது நல்ல மனதைக் கலைத்து வந்தாள். சரசாவுக்குத் தூண்டுதல் செய்துவந்தவள், ஊர் வம்பளக்கும் குப்பிப்பாட்டி என்னும் கிழவி. பசுபதி குடும்பப் பொறுப்பும் கல்வியும் இல்லாதவர். ஆனால் சங்கீத ஞானமும், நடிப்புத் திறமையும் கொண்டவர். அவர் அந்த ஊர் யுவ நாடகசபை யொன்றில் பெரிதும் ஊக்கம் செலுத்தி வந்தார். சபாபதி, அவ்வூர் சமீன்தாரிடம் மேலாளராகப் பணியாற்றி வந்தார். மனைவி சொல் கேட்பவர்.[7]

பசுபதி, நாடக சபைக்காக ஒரு மார்வாடியிடம் கடன் வாங்கி, குறிப்பிட்ட தவணையில் கொடுக்கத்தவறியதை மார்வாடி சபாபதியாரிடம் வந்து முறையிட்டான். சபாபதிக்கும் பசுபதிக்கும் இந்த கடன் காரணமாக வாக்குவாதம் முற்றி, பாகப் பிரிவினை ஏற்பட்டது. வீட்டில் பாதி உரிமையோடும், சில ஓட்டை உடைசல் பாத்திரங்களோடு பசுபதி பிரிந்துகொண்டாராயினும், சாந்தாவும் பிள்ளைகளும் அந்த வீட்டிலேயே குடியிருந்து கொண்டு, சரசாவின் கொடுமைகளை அனுபவித்துக்கொண்டு இருக்கவேண்டியதாயிற்று. இருந்தாலும் அக்குடும்ப தேவதை சாந்தாமீது இரக்கங்கொண்டு பார்வதி என்னும் பணிப்பெண் வேடம்பூண்டு, சாந்தாவுக்குச் சமாதானம் சொல்லிக்கொண்டு, தன்னிடம் இருந்த கொஞ்சம் திரவியத்தினால் குடித்தனச் செலவை நடத்திக்கொண்டு, பசுபதியை ஏதாவது ஒரு வேலைபார்த்து வரும்படி சென்னைக்கு அனும்பினாள்.[7]

பசுபதி, தொடருந்தில் தன் பணத்தைப்பறிகொடுத்து, சென்னையில் ஆண்டியாய்த் திரிந்தான். எங்கேயோ நடந்த களவுப்பழி இவன் மேல் சாற்றப்பட்டு நையப்புடைக்கப்பட்டான். இப்பொழுது தான் நல்ல காலம் வருகிறது. நகைகளைக் களவு கொடுத்த சாம்பசிவ ஐயர் பெரிய உத்தியோகத்தர். அவர் பின்னால் உண்மையான கள்வனைக் கண்டுபிடித்தார். பசுபதியை வீணாகப் புடைத்ததற்கு மனம் வருந்தி அவனுடைய நிலைமைக்கு இரங்கி உதவி செய்யத்தலைப்பட்டார். இசை ஞானமுடைய பசுபதி, ஐயர் உதவியால் வானொலியில் பாடி சம்பாதித்தார். சென்னையில் பிரபல நாடகக் கம்பெனியில் முக்கிய நடிகரானார். மனைவி மக்களுக்கு மாதந்தோறும் செலவுக்குப் பணம் அனுப்பி வந்தார்.[7]

பசுபதி சென்றவுடன், சரசா, தன் தாயார், தம்பி கோபாலன் முதலியவர்களைத் தன் வீடுவந்து இருக்கச் செய்தாள். கோபாலன், பசுபதியின் குடும்பத்தை வேரோடு அழிக்கக் கங்கணம் கட்டினான். பசுபதி அனுப்பும் காசுக்கட்டளைகளை எல்லாம் அவன் தூண்டுதலினால் சரசா சாந்தாவைப்போலக் கள்ளக் கையெழுத்து இட்டு வாங்கி வந்தாள். அந்தவூர் சமீன்தார் ஒரு பெண் லோலன். சுந்தரி யென்னும் விலைமாதோடு காலங்கழித்து வந்தார். அவர் சாந்தாவைக் கண்ணுற்று, அவள்மீது மோகம்கொண்டு அவளைக் கைப்பற்றக் கருதினார். கோபாலனும் இதற்கு உடந்தையானான். அவன் சாந்தாவைத் தன்மனையாள் என்று சொல்லி ரூபாய் 10,000-க்கு சமீன்தாருக்கு விற்றுவிட்டான். எப்படியோ சாந்தாவுக்கு மருந்து கொடுத்து மயக்கி, அவளை சமீன்தார் வீட்டுக்கு அனுப்பிவிட்டான். சாந்தா யாரோடேயோ ஓடிவிட்டாள் என்று ஒரு பொய்த் தந்தியும் பசுபதிக்குக் கொடுத்து விட்டான். சரசாவும் அவ்விதமே ஊரெல்லாம் வதந்தி பரப்பிவிட்டாள்.[7]

தந்தி கிடைத்த பசுபதி, மானம் பொருக்கமுடியாமல் தற்கொலை செய்துக்கொள்ள எந்தனிக்கையில் ஒரு சன்னியாசி வந்து காப்பாற்றுகிறார், இருவரும் உண்மையை விசாரிக்க ஊர் நோக்கி வருகிறார்கள். இதற்குள் சுந்தரி, பார்வதியிடம் உண்மையைக் கூறினாள். பார்வதியும் காவல்துறையினருடன் வந்து சாந்தாவை விடுவித்து, ஐமீன்தார் கோபாலன் முதலியோரைச் சிறையில் அடைப்பித்தாள். சபாபதியாரும் பொய்க்குற்றம் சாற்றப்பட்டு வேலையை இழந்தார். பசுபதி உண்மையனைத்தையும் அறிந்துக்கொண்டான். சாந்தா, சரசாவை மன்னித்தாள். குடும்பம் திரும்பவும் ஒற்றுமைப்படுகின்றது.[7]

திரைப்படத்தில் நகைச்சுவை[தொகு]

வேலையில்லாதார் மகாநாடு நடைபெறுகிறது, ஒரு பட்டதாரி தலைமை வகித்து "வேலை இல்லாதோருக்கு இலவச சாப்பாடு கிடைக்க வேண்டும், எல்லா தொடருந்துகளிலும் இலவசப் பயணம் அனுமதிக்கப் பட வேண்டும்" எனத் தீர்மானம் முன்மொழிந்து பேசும் போதே "எங்கோ 25 ரூபாய் டைப்பிஸ்ட் வேலை காலி" என ஒரு குருவி வந்து சொன்னதும் மகாநாடு கலைந்து எல்லாம் சிட்டாய் பறந்து விடுகிறதுகள்" இந்த விமர்சனம் இரு சகோதரர்கள் படம் குறித்து வந்த அன்றைய செய்தி [8]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்தில் 14 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.[7]

1936 இரு சகோதரர்கள் படப் பாடல்கள்
எண் பாடல் பாத்திரம் இராகம் தாளம்
1 வேடிக்கை பொம்மை - விளையாட்டு பொம்மை பி. ஜி. வெங்கடேசன் சிந்துபைரவி சாபு
2 கபியாவுர்-அலிதோனோ-ஜூமாது ஆயே கே. பி. கேசவன் காபி மிச்சிரசாபு
3 தே தேவ ஜீவசுதா எஸ். என். கண்ணாமணி ஜீவன்புரி தீன் தாள்
4 கஞ்சா - கள்ளுக்கடை மைனர்-வேலைக்காரன் யமன் திருச்ரஏகம்
5 ஓடி விளையாடுவோம் ஆகா ராஜம் மாண்டு தீன் தாள்
6 நாதனே நளின - நயரூபனே எஸ். என். விஜயலட்சுமி கமாசு ஆதி
7 சரணமே தரநேரமா - பாரமா கே. பி. கேசவன் முகாரி ஆதி
8 அடுத்தானை யுரித்தானை கே. பி. கேசவன் காம்போதி திருபடை
9 மதன மதுர மது ரூபனே கே. கிருஷ்ணவேணி ஜில்லா திருதாள்
10 சோதனை போதாதா - பசுபதே எம். எம். ராதாபாய் மிச்சரகாபி திருதாள்
11 தேவ மஹேச் சுரேச பரேசா எம். எம். ராதாபாய் பாலமு ஆய மெட்டு -
12 மாய வாழ்வில் முழுகி வழி தவறியே கே. பி. கேசவன் நாதநாமகிரியை ஆதி
13 போதா பிரேம நாதா தேவ எம். கண்ணன் மிச்ரமாண்டு திருதாள்
14 பாதகம் பலகாலும் செய்தேன் எஸ். என். விஜயலட்சுமி இந்து அசாவேரி தீன் தாள்

மேற்கோள்கள்[தொகு]

  1. ராண்டார் கை. "Iru Sahodarargal (1936)". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 9 செப்டம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. சுதந்திரப் போரில் தமிழ் சினிமா - ஆசிரியர் அறந்தை நாராயணன்- -1988 ஆம் ஆண்டு பதிப்பு
  3. "ஸில்வர் ஸ்க்ரீன்" சினிமா வார இதழ் - 27-02-1937
  4. "bali presentations" (PDF).
  5. "The Hindu : Cinema Plus / Columns : Iru Sahodarargal 1936". web.archive.org. 2013-10-21. Archived from the original on 2013-10-21. பார்க்கப்பட்ட நாள் 2023-05-26.
  6. Film News Anandan (2004). Sadhanaigal padaitha Tamil Thiraipada Varalaaru (in Tamil). Chennai: Sivagami Publications. pp. 28:6.. 
  7. 7.0 7.1 7.2 7.3 7.4 7.5 இரு சகோதரர்கள் பாட்டுப்புத்தகம், 1936
  8. "மணிக்கொடி" இதழ் - சென்னை- 15-01-1937

வெளி-இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரு_சகோதரர்கள்&oldid=3880953" இலிருந்து மீள்விக்கப்பட்டது