வட மாகாண அரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வட மாகாண அரசு (Government of the Northern Province) என்பது இலங்கையின் வட மாகாணத்தை ஆளும் மாகாண அரசைக் குறிக்கும். இலங்கை அரசமைப்புச்சட்டத்தின் படி நாட்டின் ஒன்பது மாகாணங்களும் வேளாண்மை, கல்வி, சுகாதாரம், வீடமைப்புத் திட்டம், உள்ளூராட்சிகள், சாலைவழிப் போக்குவரத்து, சமூக சேவை போன்றவற்றின் நிருவாகங்களைக் கவனிக்கும். இவற்றை விட காவல்துறை அதிகாரம், காணி போன்றவற்றுக்கும் அரசியலமைப்பின் படி இவற்றுக்கு அதிகாரங்கள் உள்ளன, ஆனாலும் நடுவண் அரசு இவற்றுக்கான அதிகாரங்களை மாகாண அரசுக்கு வழங்க மறுத்து வருகின்றது. வட மாகாண அரசின் சட்டவாக்கம் வட மாகாண சபைக்குக் கீழும், நிறைவேற்று அதிகாரம் ஆளுநருக்குக் கீழும் அமைச்சரவைக்குக் கீழும் அடங்கும்.

வரலாறு[தொகு]

ஈழப்போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு, 1987 சூலை 29 இல் கையெழுத்திடப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் படி அதே ஆண்டு நவம்பர் 14 இல் இலங்கை நாடாளுமன்றம் தனது அரசியலமைப்பில் 13வது திருத்தம் மற்றும் மாகாணசபைச் சட்டம் இல. 42 (1987) ஆகியவற்றை அறிவித்தது.[1] இதன் படி, 1988 பெப்ரவரி 3 இல் ஒன்பது மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன. இந்த ஒன்பது மாகாணசபைகளில் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் படி கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு மாகாண அரசின் கீழ் கொண்டுவர இணக்கம் காணப்பட்டது. இவ்விணைப்பு நிரந்தர இணைப்பாக இருப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.[2] 1988 செப்டம்பர் 2 இல் இரு மாகாணங்களும் வடக்கு கிழக்கு மாகாண சபை என்ற பெயரில் இணைக்கப்பட்டன.[3] இந்த இணைந்த மாகாணசபைக்கான முதலாவது தேர்தல் 1988 நவம்பர் 19 இல் நடத்தப்பட்டது. இந்தியாவின் ஆதரவில் இயங்கிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இத்தேர்தலில் வெற்றி பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி இத்தேர்தலில் பங்கேற்கவில்லை.

1990, மார்ச்சு 1 அன்று, இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையை விட்டுப் புறப்படும் தறுவாயில், வடகிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் அ. வரதராஜப் பெருமாள் மாகாணசபைக் கூட்டத்தில் தமிழீழத்தைப் பிரகடனப்படுத்தி விட்டு நாட்டை விட்டு வெளியேறினார்.[4] இதனை அடுத்து அன்றைய அரசுத்தலைவர் பிரேமதாசா வட-கிழக்கு மாகாணசபையைக் கலைத்து, நடுவண் அரசின் நேரடி ஆட்சியைக் கொண்டு வந்தார்.

வட-கிழக்கு இணைப்புத் தொடர்பான பொது வாக்கெடுப்பு நடத்தப்படாமல் ஒவ்வோர் ஆண்டும் அரசுத்தலைவர்களால் தற்காலிக இணைப்பாக நீடிக்கப்பட்டு வந்தது.[5] இவ்விணைப்பு சட்டவிரோதமானது என 2006 அக்டோபர் 16 இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை[3] அடுத்து 2007 சனவரி 1 இல் வடகிழக்கு மாகாணசபை இரண்டாகப் பிரிக்கப்பட்டது. கிழக்கு மாகாணசபைக்கு 2008 மே 10 இல் முதலாவது தேர்தல் நடைபெற்றது. வட மாகாணசபைக்கு முதற்தடவையாக 2013 செப்டம்பர் 21 இல் தேர்தல்கள் இடம்பெற்றன.

சட்டவாக்கம்[தொகு]

இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 9வது அட்டவணையில் பட்டியல் 1 இல் கொடுக்கப்பட்ட சட்டங்களை மாகாண சபைகள் இயற்றலாம்.[6] இப்பட்டியலில் வேளாண்மை, கல்வி, சுகாதாரம், வீடமைப்பு, உள்ளூராட்சி, திட்டமிடல், வீதி அபிவிருத்தி, மற்றும் சமூக சேவை ஆகியவை உள்ளடங்கும்.[7] காவல்துறை, மற்றும் காணி தொடர்பான சட்டங்களை இயற்றுவதற்கான அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. மாகாண சபைகள் 9ம் அட்டவணையில் மூன்றாவது பட்டியலில் உள்ளவற்றுக்கும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் சட்டமியற்றலாம்.[6] இவை: தொல்லியல் களங்கள், வேலை வாய்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மீன்பிடித்துறை, உயர் கல்வி, விலைக் கட்டுப்பாடு, சுற்றுலாத்துறை ஆகியவையாகும்.[7] மாகாண சபை இயற்றுகின்ற சட்டத்தை உயர் நீதிமன்றத்திற்கு ஆற்றுப்படுத்த அரசியலமைப்புச் சட்டம் இடமளிப்பதால் அரசுத்தலைவர் அந்நியதிச் சட்டங்களை உயர்நீதிமன்றத்திற்கு ஆற்றுப்படுத்தி உயர்நீதிமன்றத்தின் அனுமதியும் கிடைத்தாலே சட்டமாக வரும்.[8]

வட மாகாண சபைக்கு 38 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். முதலாவது தேர்தல் 2013 செப்டம்பர் 21 இல் நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ), 30 இடங்களைக் கைப்பற்றியது.[9]

கூட்டணி வாக்குகள் % இடங்கள்
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 353,595 78.48% 30
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 82,838 18.38% 7
  சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு 6,761 1.50% 1
ஏனையோர் 7,380 1.64% 0
மொத்தம் 450,574 100.00% 38

மாகாண சபையின் காலம் அதன் முதலாவது அமர்வு இடம்பெற்ற நாளில் இருந்து ஆகக்கூடியது ஐந்து ஆண்டுகள் ஆகும்.[10]

செயலாட்சி[தொகு]

மாகாண சபை அறிமுகப்படுத்தும் சட்டவாக்கங்களை செயல்படுத்தும் அதிகாரம் ஆளுநரிடம் உள்ளது. இவர் தமது அதிகாரத்தை அமைச்சரவையூடாக செயல்படுத்துவார்.[11]

ஆளுனர்[தொகு]

ஆளுனர் இலங்கை அரசுத்தலைவரால் ஐந்து ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்படுவார்.[12] மாகாணசபையை ஒத்திவைக்கவோ அல்லது கலைக்கவோ ஆளுனருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.[12] மாகாண சபையில் ஆகக்கூடிய உறுப்பினர்களைக் கொண்டிருக்கக்கூடிய கட்சி ஒன்றின் பரிந்துரையின் படி சபை உறுப்பினர்களில் ஒருவரை முதலமைச்சராக ஆளுனர் நியமிப்பார். முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் அமைச்சரவை உறுப்பினர்களை ஆளுனர் நியமிப்பார்.[13]

வட மாகாண சபையின் தற்போதைய ஆளுனர் ஜி. ஏ. சந்திரசிறி அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவினால் 2009 சூலை 12 இல் நியமிக்கப்பட்டார்.[14][15] மேஜர் ஜெனரல் சந்திரசிறி இலங்கை இராணுவத்தின் யாழ்ப்பாணப் பிராந்தியத் தலைவராகப் பணியாற்றியவர்.[16][17] சந்திரசிறியின் இராணுவப் பின்புலமும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கு அவர் வழங்கும் ஆதரவும் காரணமாக, ததேகூ, ஐதேக ஆகிய கட்சிகள் இராணுவப் பின்புலமில்லாத ஒருவரை ஆளுனராக நியமிக்கும் படி கேட்டு வருகின்றன.[18][19]

அமைச்சரவை[தொகு]

மாகாண சபையின் அமைச்சரவை முதலமைச்சரையும், ஆகக் கூடுதலாக மேலும் நான்கு உறுப்பினர்களையும் கொண்டதாக இருக்கும்.[13] ஆளுனர் தமது நிறைவேற்றதிகாரங்களைச் செயல்படுத்த அமைச்சரவை உறுப்பினர்களின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்வார்.[13] வட மாகாண சபைக்கு 2013 செப்டம்பரில் தேர்தல்கள் நடைபெறும் வரை இச்சபைக்கு அமைச்சரவை இருக்கவில்லை.

கட்சி அமைச்சர் பொறுப்பு நியமன நாள் செயலாளர் இணையதளம்
1 தமிழரசுக் கட்சி க. வி. விக்னேஸ்வரன் முதலமைச்சர் 7 அக்டோபர் 2013
நிதி மற்றும் திட்டமிடல், சட்டம் மற்றும் ஒழுங்கு, காணி மற்றும் வீதி அபிவிருத்தி, மின்சாரம், வீடு மற்றும் நிர்மாணம், நீர்வள, கூட்டுறவு அபிவிருத்தி, சமூகசேவைகள் மற்றும் புனர்வாழ்வு, மகளீர் விவகாரம், கைத்தொழில் மற்றும் வர்த்தக மேம்பாடு, சுற்றுலா, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள், நிர்வாக மற்றும் உணவு வழங்கல் மற்றும் விநியோகம் 17 அக்டோபர் 2013
2 ஈபிஆர்எல்எஃப் பொ. ஐங்கரநேசன் வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சர் 11 அக்டோபர் 2013 யூ. எல். எம். ஹால்தீன்
3 டெலோ பா. டெனீஸ்வரன் மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சர் 11 அக்டோபர் 2013 ஏ. ஈ. எஸ். இராஜேந்திரா
4 தமிழரசுக் கட்சி த. குருகுலராஜா கல்வி, கலாச்சார, விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார அமைச்சர் 11 அக்டோபர் 2013 எஸ். சத்தியசீலன்
5 தமிழரசுக் கட்சி ப. சத்தியலிங்கம் சுகாதார, சுதேச மருத்துவத்துறை அமைச்சர் 11 அக்டோபர் 2013 ஆர். ரவீந்திரன் healthnp.org

மேற்கோள்கள்[தொகு]

  1. "Introduction". Official Website of the Government of Sri Lanka. இலங்கை அரசு. Archived from the original on 2009-07-07. பார்க்கப்பட்ட நாள் 2013-10-24.
  2. "Indo Sri Lanka Agreement, 1987". TamilNation.
  3. 3.0 3.1 "North-East merger illegal: SC". LankaNewspapers.com. 17 அக்டோபர் 2006. http://www.lankanewspapers.com/news/2006/10/8947.html. 
  4. Ferdinando, Shamindra (10 செப்டம்பர் 2000). "I'm no traitor, says Perumal". ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2009-05-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090501173226/http://www.priu.gov.lk/news_update/features/20000912no_traitor.htm. 
  5. V.S. Sambandan (14 November 2003). "Sri Lanka's North-East to remain united for another year". த இந்து இம் மூலத்தில் இருந்து 25 பிப்ரவரி 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040225085959/http://www.hindu.com/thehindu/2003/11/14/stories/2003111411881500.htm. பார்த்த நாள்: 10 அக்டோபர் 2009. 
  6. 6.0 6.1 "THE CONSTITUTION OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA - Article 154G". LawNet. Archived from the original on 2015-10-29. பார்க்கப்பட்ட நாள் 2013-10-24.
  7. 7.0 7.1 "Ninth Schedule". இலங்கை அமைச்சரவை. Archived from the original on 2013-07-01. பார்க்கப்பட்ட நாள் 2013-10-24.
  8. வட மாகாண சபை: அங்கத்தவர் தெரிவும் நியதி சட்ட அதிகாரங்களும், வீரகேசரி, 24 சூலை 2013
  9. "Provincial Council Elections 2013 : Northern Province". Department of Elections, Sri Lanka. Archived from the original on 2013-09-22. பார்க்கப்பட்ட நாள் 2013-10-24.
  10. "THE CONSTITUTION OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA - Article 154E". LawNet. Archived from the original on 2013-10-13. பார்க்கப்பட்ட நாள் 2013-10-24.
  11. "THE CONSTITUTION OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA - Article 154C". LawNet.[தொடர்பிழந்த இணைப்பு]
  12. 12.0 12.1 "THE CONSTITUTION OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA - Article 154B". LawNet. Archived from the original on 2013-10-13. பார்க்கப்பட்ட நாள் 2013-10-24.
  13. 13.0 13.1 13.2 "THE CONSTITUTION OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA - Article 154F". LawNet. Archived from the original on 2013-10-13. பார்க்கப்பட்ட நாள் 2013-10-24.
  14. "PART I : SECTION (I) — GENERAL Appointments & c., by the President". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1612/15. 29 July 2009. http://documents.gov.lk/Extgzt/2009/PDF/July/1612_15/G%2011475%20%28E%29.pdf. [தொடர்பிழந்த இணைப்பு]
  15. "New military posts created". பிபிசி Sinhala. 12 சூலை 2009. http://www.bbc.co.uk/sinhala/news/story/2009/07/090712_military_new.shtml. 
  16. "Notorious commander appointed Governor of Northern Province". தமிழ்நெட். 12 சூலை 2009. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29775. 
  17. Perera, Tissa Ravindra (19 சூலை 2009). "Refurbishing the Armed Forces". த நேசன். http://www.nation.lk/2009/07/19/militarym.htm. 
  18. Kamalendran, Chris (29 செப். 2013). "News TNA wants President in Jaffna for CM oaths". சண்டே டைம்சு. http://www.sundaytimes.lk/130929/news/tna-wants-president-in-jaffna-for-cm-oaths-64359.html. 
  19. Ferdinando, Shamindra (28 செப். 2013). "NP Governor invites TNA to finalise CM appointment". தி ஐலண்டு. http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=88944. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வட_மாகாண_அரசு&oldid=3791947" இலிருந்து மீள்விக்கப்பட்டது