ஒட்டுக் கண்ணாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒட்டுக் கண்ணாடியினாலான தானுந்தின் முகப்புக் கண்ணாடி சிலந்திவலை வடிவ வெடிப்புக்களுடன் உடைந்துள்ளது.

ஒட்டுக் கண்ணாடி (Laminated glass) என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கண்ணாடித் தகடுகளை ஒன்றன்மேல் ஒன்றாக ஒட்டி உருவாக்கப்படும் கண்ணாடித் தகட்டைக் குறிக்கும். இது ஒரு வகைக் காப்புக் கண்ணாடி. இவ்வகைக் கண்ணாடியில் கண்ணாடித் தகடுகளுக்கு இடையே இடைப் படலம் எனப்படும் ஒட்டுவதற்கான படலம் இருக்கும். இப்படலம் பாலிவைனைல் பியூட்டிரல் (polyvinyl butyral) எனப்படும் வேதிச் சேர்வையால் ஆனது. இதுவும் கண்ணாடியைப் போல் ஒளியை ஊடுபுகவிடும் தன்மை கொண்டது. இதனால் ஒட்டுக்கண்ணாடியின் ஒளியூடுபுகவிடும் தன்மை பாதிக்கப்படுவதில்லை. இந்த இடைப்படலம் கண்னாடித் தகடுகளை இறுக்கமாகப் பிணைத்து வைத்திருக்கும். கண்ணாடிகள் உடையும் போதும், அவற்றை விழ விடாமல் பிடித்து வைத்திருக்கக்கூடிய தன்மை கொண்டது. இதன் வலுவான ஒட்டும் தன்மை காரணமாக உடையும் கண்ணாடிகள் கூரிய விளிம்புகளோடு கூடிய பெரிய துண்டுகளாக அல்லாமல் சிறு துண்டுகளாகவே உடைகின்றன. ஒரு புள்ளியில் தாக்கம் ஏற்படும்போது சிலந்திவலை வடிவில் வெடிப்புக்கள் ஏற்படுவதைக் காண முடியும்.

மனிதரால் அல்லது பிற வழிகளில் கண்ணாடித் தகடு மீது தாக்கம் ஏற்படக்கூடிய இடங்களிலும், உடையும்போது விழுந்து பாதிப்புக்களை உண்டாக்கக்கூடிய இடங்களிலும் ஒட்டுக் கண்ணாடிகள் பயன்படுகின்றன. கூரைக் கண்ணாடிகள், தானுந்துகளில் பயன்படும் முகப்புக் கண்ணாடிகள் போன்றவை ஒட்டுக் கண்ணாடிகளினாலேயே உருவாக்கப்படுகின்றன. பெரிய அளவில் புயல் தாக்கங்கள் இருக்கக்கூடிய இடங்களில் கட்டிடங்களின் வெளிப்புறம் பயன்படும் பெரிய கண்ணாடித் தகடுகளுக்கு ஒட்டுக் கண்ணாடிகளே பெரும்பாலும் பயன்படுகின்றன. பாலிவைனைல் பியூட்டிரல் இடைப் படலம் கண்ணாடியின் ஒலி ஊடுபுகவிடும் தன்மையையும் குறைக்கிறது. அத்துடன் இப்படலம் 99% புறவூதாக் கதிர்களையும் தடுக்கவல்லது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒட்டுக்_கண்ணாடி&oldid=3770729" இலிருந்து மீள்விக்கப்பட்டது