இரா. எட்வின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரா. எட்வின்
பிறப்பு1963 சூன் 20
கடவூர்
இருப்பிடம்பெரம்பலூர்
தேசியம்இந்தியர்
பணிஆசிரியர்
பணியகம்அருள்மிகு மாரியம்மன் மேல் நிலைப் பள்ளி, சமயபுரம்
பெற்றோர்பொன். இராசரத்தினம் - எலிசபெத்
வாழ்க்கைத்
துணை
விக்டோரியா
பிள்ளைகள்(1) கிசோர்
(2) கீர்த்தனா
வலைத்தளம்
நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை

இரா. எட்வின் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியர், சொற்பொழிவாளர், கவிஞர், எழுத்தாளர், இதழாளர், தொழிற்சங்கத் தலைவர், கலை இலக்கியச் சமூகச் செயற்பாட்டாளர், கல்வியாளர் என்னும் பன்முக ஆளுமைகொண்டவர்.

பிறப்பு[தொகு]

இரா. எட்வின் 1963 ஆம் ஆண்டு சூன் 20 [1] ஆம் நாள் கணக்கு ஆசிரியர் பொன். இராசரத்தினம் - எலிசபெத் இணையருக்குத் தலைமகனாகப் பிறந்தார்.

கல்வி[தொகு]

இரா. எட்வின் திருச்சிராப்பள்ளியில் உள்ள பிசப் கீபர் மேல்நிலைப்பள்ளியில் (Bishop Heber Higher Secondary School) பள்ளிப் படிப்பை 1980ஆம் ஆண்டில் முடித்தார். பின்னர் திருச்சியில் உள்ள பிசப் கீபர் கல்லூரியில் (Bishop Heber College) பயின்று ஆங்கில இலக்கியத்தில் 1983ஆம் ஆண்டில் இளங்கலைப் பட்டமும் 1985 ஆம் ஆண்டில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.[1] புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியில் பயின்று 1986 ஆம் ஆண்டில் கல்வி இளவர் பட்டமும் பெற்றார். அப்பொழுது மேன்மைமிகு மன்னர் கல்லூரியில் பணியாற்றிய புதுக்கவிஞரும் திறனாய்வாளருமான பாலாவிடம் இவர் இலக்கிய நுட்பங்களைப் பயின்றார்.

பணி[தொகு]

பெரம்பலூரில் உள்ள தந்தை ரோவர் கல்லூரியில் விரிவுரையாளராக தனது ஆசிரியப் பணியைத் தொடங்கிய எட்வின், சமயபுரத்தில் உள்ள அருள்மிகு மாரியம்மன் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகவும் உதவித் தலைமையாசிரியராகவும் பணியாற்றுகிறார்.

அரசியல் தொடர்பு[தொகு]

சமுதாய மாற்றத்தில் ஆர்வமுடைய எட்வின், மாணவப் பருவத்திலேயே இந்தியப் பொதுடைமைக் கட்சி (மார்க்சியம்)யால் ஈர்க்கப்பட்டார். நீண்ட காலமாக அக்கட்சியில் உறுப்பினராக இருந்த அவர் கருத்துவேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகிவிட்டார்.

தொழிற்சங்கத் தலைவர்[தொகு]

ஆசிரியர்களின் உரிமைகளைக் காக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ள எட்வின், உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான தொழிற்சங்கத்தில் செயலாளராகப் பொறுப்பு வகிக்கிறார்.

எழுத்துப்பணி[தொகு]

ஆங்கில இலக்கியம் பயின்ற எட்வின் மாணவப் பருவத்திலே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவருடைய படைப்புகள் தீக்கதிர் இதழின் இலக்கியப் பிரிவான வண்ணக்கதிர் பகுதியில் தொடர்ந்து வெளிவரலாயின. இவர் எழுதிய ஐக்கூ ஒன்றினை கவிஞர் மீரா தனக்குப் பிடித்த நவஐக்கூ என்னும் ஒன்பது ஐக்கூகளில் இரண்டாவது ஐக்கூ கவிதை எனக் குறிப்பிட்டு உள்ளார்.

இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிசுடு)யின் கலை இலக்கியப் பிரிவான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தில் இணைந்து செயலாற்றினார். பின்னர் அச்சங்கத்தின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார்.

மின்னணு ஊடகத்தின் பெருக்கத்திற்குப் பின்னர் “நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை” என்னும் வலைப்பூவைத் தொடங்கி தனது படைப்புகளைத் தொடர்ந்து பதிவிடும் பதிவராக (Blogger) வினையாற்றுகிறார். அவ்வாறு அவ்வலைப்பூவில் எழுதப்பட்ட பதிவுகளைத் தொகுத்து பின்வரும் மூன்று நூல்களாக வெளியிட்டுள்ளார்.

வ.எண் ஆண்டு நூல் வகை பதிப்பகம் குறிப்பு
01 2008 அந்தக் கேள்விக்கு வயது 98 கட்டுரை சாளரம், சென்னை
02 2010 பத்துக் கிலோ ஞானம் கட்டுரை சாளரம், சென்னை
03 2012 இவனுக்கு அப்போது மநு என்று பெயர் கட்டுரை சந்தியா பதிப்பகம், சென்னை

குடும்பம்[தொகு]

எட்வின் 1993 மே 5 ஆம் நாள் ஆசிரியர் விக்டேரியாவை மணந்தார்.[1] இவர்களுக்கு கிசோர் என்னும் மகனும் கீர்த்தனாஎன்னும் மகளும் உள்ளனர்.

இதழ்ப்பணி[தொகு]

2011 அக்டோபர் 1 ஆம் நாள் முதல் சென்னையில் இருந்து வெளிவரும் காக்கைச் சிறகினிலே இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராகப் பொறுப்புவகிக்கிறார்.[2]

சான்றடைவு[தொகு]

  1. 1.0 1.1 1.2 https://www.facebook.com/eraaedwin/about
  2. காக்கைச் சிறகினிலே, இறக்கை:1 இறகு:1, அக்டோபர் 2011, பக்.01
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._எட்வின்&oldid=3708163" இலிருந்து மீள்விக்கப்பட்டது