கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சி
பைசாந்திய ஒட்டோமான்கள் போர்கள் மற்றும் ஐரோப்பாவில் ஒட்டோமான்களின் போர்கள் பகுதி

கான்சுடன்டினோப்பிளின் முற்றுகை, 15ம் நூற்றாண்டு பிரெஞ்சு ஓவியம்
நாள் 6 ஏப்பிரல் – 29 மே 1453
இடம் கான்சுடன்டினோப்பிள் (இன்றைய இசுதான்புல்)
பிரிவினர்
தளபதிகள், தலைவர்கள்
பலம்

[a]:
50,000[7][8][9][10]– 80,000[11][12][13]
[b]:
100,000[4]–160,000[14][15]–200,000[2] to 300,000[16]

இழப்புகள்
4,000 கொல்லப்பட்டார்கள் (இதில் படைவீரர்களும் பொதுமக்களும் அடக்கம்)[21][22]

30,000 பொதுமக்கள் அடிமைப்படுத்தப்பட்டார்கள் அல்லது வெளியேற்றப்பட்டார்கள்
[23]

தெரியவில்லை

260 ஒட்டோமான் கைதிகளின் தலை வெட்டப்பட்டது[24]

  • a: சமீபத்திய தகவல் & ஒட்டோமான்களின் பழைய ஆவணங்கள். புவியியல் காரணங்களால் அப்பகுதியில் 80,000 வீரர்களுக்கு மேல் அச்சமயத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை.[25]
  • b: மேற்கத்திய\கிறித்தவ கணிப்பின் படியான மரண தகவல்கள்[25]

வார்ப்புரு:Campaignbox Byzantine–Ottoman Wars

கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சி (Fall of Constantinople; துருக்கிய மொழி: İstanbul'un Fethi; கிரேக்கம் (மொழி): Άλωση της Κωνσταντινούπολης, Alōsē tēs Kōnstantinoupolēs) என்பது கிழக்கு உரோமைப் பேரரசின் தலைநகரான கான்சுடன்டினோப்பிள் ஒட்டோமான் பேரரசால் கைப்பற்றப்பட்ட நிகழ்வாகும். 21 வயது நிரம்பிய ஒட்டோமான் சுல்தான் இரண்டாம் மெகமுத் இந்நகரை முற்றுகையிட்டு கைப்பற்ற ஆணையிட்டான். இந்நகரைக் கிழக்கு உரோமைப் பேரரசு என்றழைக்கப்பட்ட பைசாந்தியத்தின் அரசன் பதினொன்றாம் கான்சுடன்டைன் காத்து நின்றான். இம்முற்றுகை ஏப்பிரல் 6, 1453 முதல் மே 29, 1453 வரை நடந்தது.

கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சி 1500 ஆண்டுகள் நீடித்த உரோமைப் பேரரசுக்கு முடிவு கட்டியது .[26]. இந்நகர வீழ்ச்சி ஒட்டோமான் பேரரசு ஐரோப்பா நோக்கி முன்னேறுவதற்குக் குறுக்கே நின்ற சிறு தடையை நீக்கிவிட்டது. கான்சுடன்டினோப்பிளைக் கைப்பற்றியதும் ஒட்டோமான் சுல்தான் இரண்டாம் மெகமுத் ஒட்டோமான் பேரரசின் தலைநகராக இருந்த ஏடிரியானோபிளை (Adrianople) கான்சுடன்டினோப்பிளுக்கு மாற்றினார் . கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சிக்கு முன்னும் பின்னும் பல கிரேக்க, கிரேக்கரல்லாத அறிஞர்கள் நகரை விட்டு வெளியேறினார்கள். இவர்களில் பெரும்பாலோர் இத்தாலிக்குச் சென்றனர்.

கான்சுடன்டிநோப்பிளின் வீழ்ச்சியும் அதைத்தொடர்ந்து நிகழ்ந்த கிழக்கு உரோமைப் பேரரசின் (பைசாந்தியப் பேரரசு) வீழ்ச்சியும் ஐரோப்பிய இடைக்காலத்தின் முடிவு என சில வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.[27]

பைசாந்தியப் பேரரசின் நிலை[தொகு]

15-ஆம் நூற்றாண்டில் பைசாந்தியப் பேரரசு

கான்சுடன்டினோப்பிள் உரோமைப் பேரரசர் முதலாம் கான்சுடன்டைனால் கிமு 330-இல் நிறுவப்பட்டதிலிருந்து பைசாந்தியப் (கிழக்கு உரோமை) பேரரசின் தலைநகராக இருந்துவந்தது. இந்நகரம் பல முறை முற்றுகைக்கு ஆளாகியிருந்தாலும் நான்காம் சிலுவைப்போரின் போது 1204-இல் ஒரு முறை மட்டும் எதிரிகளால் கைப்பற்றப்பட்டது[28]. அவர்கள் உறுதியில்லாத இலத்தீன் அரசைக் கான்சுடன்டினோப்பிள் மற்றும் அதைச் சுற்றி இருந்த பகுதிகளில் நிறுவினார்கள். எஞ்சியிருந்த பைசாந்தியப் பேரரசு கிரேக்கர்களால் குறிப்பாக நைசியா (Nicaea), எப்பிரசு (Epirus), திரெபிசோந்து (Trebizond) ஆகிய பிரதேசங்களால் கைப்பற்றப்பட்டு ஆளப்பட்டது. மேற்கத்தியரான இலத்தீனரிடமிருந்து 1261-இல் நைசியா பகுதியினர் கான்சுடன்டினோப்பிளைக் கைப்பற்றினார்கள். அதன் பின் இந்நகரம் தொடர்ச்சியாக இலத்தீனர்கள், பல்கேரியர்கள், செர்பியர்கள், ஒட்டோமான் துருக்கியர்களால் தாக்கப்பட்டது.[29][30][31] 1346-1349 வரை நீடித்த கரும் பிளேக்கு நோய் கான்சுடன்டினோப்பிள் நகர மக்களின் எண்ணிக்கையில் பாதி பேரைக் கொன்றது.[32][33] பொருளாதாரச் சரிவு மற்றும் நான்காம் சிலுவைப்போரினால் பெருமளவு நிலம் பறிபோனது போன்றவற்றால் இந்நகரின் மக்கள் தொகை பெருமளவு குறைந்தது. அதனால் 1453-இல் இந்நகரம் பல சுவர்களால் காக்கப்பட்டு, நிலங்களால் பிரிக்கப்பட்ட கிராமத் தொகுதி போன்று இருந்தது. நகரின் பாதுகாப்பு அரணாகத் தியொடோசியசு மன்னன் காலத்தில் கட்டப்பட்ட சுவர் இருந்தது.

மேலும், 1450-ஆம் ஆண்டளவில் பைசாந்தியப் பேரரசு மிகவும் தளர்ச்சியுற்ற நிலையில் இருந்தது. கான்சுடன்டினோப்பிள் நகருக்கு வெளியே ஒரு சில சதுர மைல் நிலப்பகுதி, மார்மரா கடலில் "இளவரசர் தீவுகள்", மிசுத்ராசு நகரை மையமாகக் கொண்ட பெலொப்பொனேசு பிரதேசம், கருங்கடல் கரையில் திரெபிசோந்து பகுதி ஆகிய பிரதேசங்கள் மட்டுமே பேரரசின் நிலப்பகுதியாக இருந்தன.

படை நடவடிக்கை[தொகு]

சுல்தான் இரண்டாம் மெகமுத் 1451-இல் பதவிக்கு வந்தார். அப்போது இவருக்கு 19 வயது என்று நம்பப்படுகிறது. வயதில் இளையவராயிருந்த மெகமுத் ஆட்சியின் போது, கிறித்தவ கட்டுப்பாட்டில் இருந்த பால்கன், எசீயன் (Aegean) பகுதிகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்றுதான் பலர் நினைத்தனர்.[34]. இவரது அரசவைக்கு வந்த தூதுவர்களிடம் மெகமுதுவால் நல்லெண்ண அடிப்படையில் கொடுக்கப்பட்ட உறுதிகளும் அந்த நம்பிக்கையை வளர்த்தது [35]. ஆனால் மெகமுத் மேற்கொண்ட நடவடிக்கைகளோ அவர் தனது அரசை விரிவுபடுத்த முனைந்ததை வெளிப்படையாகக் காட்டின. 1452-இல் மெகமுத் தனது இரண்டாவது உருமேலி (Rumeli) கோட்டையை ஐரோப்பிய பகுதியில் கான்சுடன்டினோப்பிளுக்கு பல மைல்கள் வடக்கே பொசுபோரசு நீரிணையில் கட்டினார். இது இவரது கொள்ளு தாத்தா பயேசித் (Bayezid) என்பவர் ஆசியப்பகுதியில் ஏற்கெனவே கட்டியிருந்த அனாதொலு (Anadolu) கோட்டைக்கு நேர் எதிரே இருந்தது. இரண்டு கோட்டைகளையும் பிரித்தது பொசுபோரசு நீரிணையாகும். இதனால் ஒட்டோமான் துருக்கியர்கள் பொசுபோரசு நீரிணையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இவ்வாறு கருங்கடல் பகுதியிலிருந்து சேனொவா குடியேற்றங்களிலிருந்து (Genoese colonies) எந்த உதவியும் கான்சுடன்டினோப்பிளுக்கு இவர்களை மீறி வராமல் பார்த்துக்கொண்டனர். 1452, அக்டோபரில் இரண்டாம் மெகமுத் தனது படைத்தளபதி துராக்கான் பெக்கை (Turakhan Beg) அழைத்துப் பெலோப்பொனேசுக்கு (Peloponnese) பெரும் படையுடன் சென்று, அப்படையை அங்கேயே நிறுத்தி, பைசாந்தியப் பேரரசனான 11-ஆம் கான்சுடன்டைன் பாலையோலோகோசு என்பவரின் சகோதரர்கள் தாமசு, திமறியசு ஆகிய ஆளுநர்கள் கான்சுடன்டினோப்பிளின் முற்றுகை நடக்கும் போது உதவிக்கு வராமல் இருக்க தடை ஏற்படுத்தினார்.[36].

பைசாந்தியப் பேரரசர் பதினொன்றாம் கான்சுடன்டைன் பாலையோலோகோசு, மெகமுதுவின் நோக்கங்களை அறிந்து கொண்டார். பைசாந்தியத்தையும் கான்சுடன்டினோப்பிளையும் பாதுகாக்க மேற்கு ஐரோப்பாவை உதவிக்கு அழைத்தார். ஆனால் கிழக்கு மற்றும் மேற்கு திருச்சபைகளுக்கிடையே பல நூற்றாண்டுகளாக நிலவிவந்த பகையுணர்வின் காரணமாக, இவர் எதிர்பார்த்த உதவி கிட்டவில்லை. 1054-இல் கிழக்குத் திருச்சபையும் மேற்குத் திருச்சபையும் பிளவுபட்டதன் பின்னர், உரோமையில் இருந்த கத்தோலிக்க மதத்தலைவரான திருத்தந்தை கிழக்கில் இருந்த கிறித்தவர்கள் மீதும் ஆட்சியுரிமை கோரியதால் இரு சபைகளுக்கும் இடையே இழுபறிநிலை ஏற்பட்டிருந்தது. 1274-இல் பேச்சுவார்த்தை மூலம் சிறிய உடன்பாடு ஏற்பட்டது. அதன் விளைவாக, கிழக்குச் சபையைச் சார்ந்த சில பாலையோலோகோய் (Palaiologoi) அரசர்கள் மேற்கு சபையான இலத்தீன் திருச்சபையைச் சேர்ந்தனர். எட்டாம் சான் பாலையோலோகோசு (John VIII Palaiologos) திருத்தந்தை நான்காம் இயூச்சின் (Pope Eugene IV) உடன் பேச்சுவார்த்தை நடத்தி புளோரன்சு மன்றம் மூலம் 1439-இல் இரு திருச்சபைகளும் ஒன்றிணைய ஆதரவு அளிப்பதாக அறிவித்தார். ஆனால் இரு திருச்சபைகளின் ஒன்றிணைவை எதிர்த்தவர்களும் இருந்தார்கள். இவர்கள் கான்சுடன்டினோப்பிளில் பெரும் எதிர்ப்பு பரப்புரையில் ஈடுபட்டனர். கிழக்குத் திருச்சபையின் மக்கள், தலைவர்கள் ஆகியோர் நடுவே திருச்சபை ஒன்றிணைவுக்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு என்று பிரிவு தோன்றியது. 1204-ஆம் ஆண்டு இலத்தீன் சபையினர் கான்சுடன்டினோபுளைச் சூறையாடிய நிகழ்ச்சியை மக்கள் மறக்கவில்லை. எனவே, கிரேக்க சபையினருக்கும் இலத்தீன் சபையினருக்கும் இடையே நிலவிய பகைமையின் காரணமாகத் திருச்சபை ஒன்றிணைவு முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் திருத்தந்தை ஐந்தாம் நிக்கோலசும் மேற்குத் திருச்சபை ஆட்சியாளர்களும் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

சீரமைக்கப்பட்ட கான்சுடன்டினோப்பிளின் சுவர்கள்

1452-இல் சுல்தான் இரண்டாம் மெகமுத் உருமேலி கோட்டையைக் கட்டி முடித்ததும், கான்சுடன்டினோப்பிளைத் தாக்கிக் கைப்பற்றப் போகிறார் என்பது உறுதியாயிற்று. இந்த ஆபத்தை உணர்ந்தார் பைசாந்திய மன்னர் 11-ஆம் கான்சுடன்டைன் பாலையோலோகோசு. உடனே மன்னர் உரோமைக்குக் கடிதம் எழுதி, திருத்தந்தை ஐந்தாம் நிக்கோலாசிடம் உதவி கோரினார். கிழக்கு மற்றும் மேற்குத் திருச்சபைகளின் ஒன்றிணைவுக்குத் தாம் ஆதரவு அளிப்பதாக உறுதிகூறினார். 1452, திசம்பர் 12-ஆம் நாள் கூடிய அரசவை மன்றம் சபை ஒன்றிணைவுக்கு அரைகுறை மனதோடு ஆதரவு அளித்திருந்தது. கான்சுடன்டைன் மன்னன் தம்மிடம் உதவிகோரி வந்ததைக் கண்ட திருத்தந்தை நிக்கோலசுக்கு இது ஒரு நல்ல தருணமாய் அமைந்தது என்றாலும்,[35] பைசாந்தியப் பேரரசர் நினைத்த அளவுக்கு ஐந்தாம் நிக்கோலசுக்கு மேற்கு ஐரோப்பிய அரசர்களிடம் செல்வாக்கு இருக்கவில்லை. திருத்தந்தையின் செல்வாக்கு அதிகரிப்பதை சில நாட்டு ஆளுநர்கள் விரும்பவுமில்லை. மேலும் மேற்கு ஐரோப்பாவில் நிகழ்ந்த பல போர்களின் காரணமாகப் பல நாடுகள் கான்சுடன்டினோப்பிளைக் காப்பாற்ற படைகளை அனுப்ப முன்வரவில்லை. இங்கிலாந்தும் பிரான்சும் நூறாண்டுப் போர் காரணமாகத் தளர்ச்சியுற்றிருந்தன. எசுப்பானியா நாடு முசுலிம்களை எதிர்த்துப் போரிட்டு அவர்களை எசுப்பானியாவிலிருந்து வெளியேற்றும் முயற்சியின் (Reconquista) இறுதிக்கட்டத்தில் இருந்தது. செருமானிய பிரதேசங்கள் தமக்குள்ளேயே சண்டைபோட்டுக் கொண்டிருந்தன. அங்கேரி மற்றும் போலந்து நாடுகள் முசுலிம் படைகளால் வார்னா சண்டையில் (Battle of Varna) 1444-இல் முறியடிக்கப்பட்டிருந்தன. சில படைகள் வடக்கு இத்தாலியின் கடல் வர்த்தகப் பிரதேசங்களிலிருந்து கான்சுடன்டைனுக்கு உதவ வந்தன. ஆயினும், வந்தாலும் அவை ஒட்டோமான்களின் படைபலத்துடன் ஒப்பிடும் போது மிகக்குறைவு ஆகும். செனோவா (Genoa) பகுதியிலிருந்து சோவானி சுசுதினியானி (Giovanni Giustiniani) என்பவர் தாமே முன்வந்து, 700 படை வீரர்களோடு சனவரி, 1453-இல் வந்து சேர்ந்தார்.[37]. இவர் பாதுகாப்புச் சுவர் உள்ள நகரத்தைக் காப்பதில் கைதேர்ந்தவராக இருந்ததால் நகரின் சுவர் சார்ந்த நிலப்பகுதிகளைப் பாதுகாக்கும் பொறுப்பு உடனடியாக இவருக்குத் தரப்பட்டது. இச்சமயத்தில், கான்சுடன்டினோப்பிள் நகர் அமைந்திருந்த துறைமுகப் பகுதியான "தங்கக் கொம்பு" (Golden Horn) பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வெனிசு குடியரசுக் கப்பல்களின் தலைவர்கள், தம் நாடு அனுமதித்தால் தாம் போரில் கான்சுடன்டைனுக்கு ஆதரவாக உதவி செய்வதாக முன்வந்தனர். திருத்தந்தை நிக்கோலசு மூன்று கப்பல்களை உணவுப் பொருள்களோடு அனுப்புவதற்கான வேலைகளில் ஈடுபட்டார். இக்கப்பல்கள் 1453, மார்ச்சு மாத கடைசியில் புறப்பட்டன[38].

இச்சமயத்தில் கான்சுடன்டினோப்பிளுக்கு என்ன வகையான உதவிகள் செய்யலாம் என வெனிசு குடியரசில் ஆலோசனை நடந்தது. குடியரசின் ஆட்சியவை கப்பற்தொகுதி ஒன்றை அனுப்ப முடிவெடுத்தது. இது தாமதமாக ஏப்பிரல் கடைசியில் புறப்பட்டது. இதனால் இப்படை போரில் பங்கேற்க முடியவில்லை [39]. கான்சுடன்டினோப்பிளை காக்க சொவானி சுசுதினியானி வந்து சேர்ந்த சமயத்தில், கான்சுடன்டைனுக்கு உதவுவதாக உறுதியளித்திருந்த சுமார் 700 இத்தாலிய வீரர்கள் தமது ஏழு கப்பல்களோடு கான்சுடன்டினோப்பிளை விட்டுச் சென்றுவிட்டனர். இதுவும் கான்சுடன்டினோப்பிளின் மன உறுதியைக் குலைக்கக் காரணமாயிற்று. கான்சுடன்டைன் அரசன் ஒட்டொமான் பேரரசனான மெகமுத் சுல்தானின் படையெடுப்பைத் தவிர்க்கும் வண்ணம் அரசியல் உத்தியைக் கையாண்டு, பரிசுப் பொருட்களோடு தூதுவர்களை அனுப்பிப் பார்த்தார். ஆனால் அத்தூதுவர்கள் சுல்தானின் ஆணைப்படி கொலை செய்யப்பட்டார்கள் [35].

கான்சுடன்டினோப்பிளின் வரைபடம் ஒட்டோமான்கள் பைசாந்தியர்களின் நிலையைக் காட்டுகிறது

"தங்கக் கொம்பு" நீர்ப் பகுதியில் இருந்து கப்பற்படை தாக்குதல் நிகழக்கூடும் என அஞ்சியதால் கான்சுடன்டைன் ஆணையின் படி துறைமுகத்தில் சங்கிலி கட்டப்பட்டது. இந்தச் சங்கிலி மரத்துண்டுகளில் கட்டப்பட்டு நீரில் மிதக்கவிடப்பட்டது. இது துருக்கிய கப்பல்களைத் துறைமுகத்தில் "தங்கக் கொம்பு" பகுதிக்குள் நுழையவிடாமல் தடுக்கும் அளவு ஆற்றல் மிக்கது. வெளிநாட்டு உதவி வரும் வரை முற்றுகையை தாக்குபிடிக்க இது உதவும் என கருதப்பட்டது [40] 1204-இல் நான்காம் சிலுவைப்போரில் பங்குபெற்ற எதிரிப் படைகள் நகரின் நிலப்பகுதியில் அமைந்திருந்த பாதுகாப்புச் சுவர்களைத் தவிர்த்துவிட்டு, நீர்ப் பகுதியில் "தங்கக் கொம்பு" சுவரை உடைத்துக்கொண்டு உள்நுழைந்தன என்பதால் இந்த உத்தி பின்பற்றப்பட்டது. மற்றொரு உத்தியாக, வடக்குப் பகுதியில் அமைந்த நிலச் சுவர்கள் செப்பனிடப்பட்டு பலப்படுத்தப்பட்டன.

பலம்[தொகு]

கான்சுடன்டிநோப்பிளை பாதுகாத்த படையின் பலம் குறைவு. மொத்தமிருந்த 7000 வீரர்களில் 2000 பேர் வெளிநாட்டு வீரர்கள் [41]. முற்றுகையின் போது நகரத்தில் 50,000 மக்கள் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது [42]. இவர்களில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தஞ்சம் அடைந்தவர்களும் அடக்கம். கான்சுடன்டின்நோபிளில் இருந்தவரும் கான்சுடன்டைன் மன்னனிடமிருந்து சம்பளம் வாங்கியவருமான டோர்கனோ (Dorgano) என்ற துருக்கிய தளபதி கடலைப் பார்த்தபடி இருந்த நகரின் பகுதியைக் காத்து நின்றார். அவருக்குக் கீழ் போரில் பங்கேற்ற பல துருக்கியர்கள் பைசாந்திய அரசனுக்குப் பற்றுள்ளவர்களாக இருந்து நகரைக் காக்க நடந்த போரில் உயிர் இழந்தனர்.

ஒட்டோமான்களிடம் அதிக படை பலம் இருந்தது, அண்மையில் நிகழ்ந்த ஆய்வுகளின்படியும் ஒட்டோமான் ஆவணக் கிடங்கு ஆதாரங்களின் படியும் அவர்களிடம் 50,000 முதல் 80,000 வரையிலான படை வீரர்கள் இருந்திருக்கலாம் எனத் தெரிகிறது. இதில் 5,000 லிருந்து 10,000 வரையானவர்கள் சிறப்பு காலாட்படை வீரர்கள் [2][12]. ஆயிரக்கணக்கான கிறித்தவ வீரர்களும் ஒட்டோமான் படையில் இருந்தனர். அவர்களுள் 1,500 செர்பிய குதிரைப்படை வீரர்களும் உள்ளடங்குவர். செர்பிய ஆளுநராக இருந்த டூரட் பிராங்கோவிச் என்பவர் சுல்தானுக்குக் கடமைப்பட்டிருந்ததால் குதிரைப் படைவீரர்களை அனுப்பி சுல்தானுக்கு உதவிசெய்ய வேண்டியதாயிற்று. அதற்கும் ஒருசில மாதங்களுக்கு முன்னர், அதே செர்பிய ஆளுநர்தான் பைசாந்திய மன்னனுக்கும் உதவி செய்து, கான்சுடன்டினோப்பிள் நகரப் பாதுகாப்புச் சுவர்களைப் பலப்படுத்தப் பணம் கொடுத்தார் என்பதும் கருதத்தக்கது. கான்சுடன்டினோப்பிளின் முற்றுகையை விவரிக்கின்ற சில மேற்கத்திய எழுத்தாளர்கள் சுல்தானின் படைபலத்தை மிகைப்படுத்திக் கூறுவதுபோல் தெரிகிறது. சுல்தானின் படையில் 120 ஆயிரம் வீரர்கள் இருந்ததாக ஓர் ஆசிரியரும், 200 ஆயிரம் வீரர்கள் இருந்ததாக வேறொருவரும், 300 ஆயிரம் வீரர்கள் என்று மற்றொருவரும் கூறுகின்றனர்.

ஒட்டோமான்களின் உத்தி[தொகு]

மெகமுத் கடல் பகுதியிலிருந்து நகர முற்றுகைக்காகக் கப்பல்களை உருவாக்கினான் [12]. அக்காலத்தில் வாழ்ந்தவர்களின் கணக்குப்படி ஒட்டோமான்களின் கடற்படையின் பலம் 100 கப்பல்களிருந்து 450 ஆகும். சமீபத்திய ஆய்வின் படி கப்பற்படையின் பலம் 126 ஆக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதில் 6 பெரிய போர் கப்பல்கள் 10 வழக்கம்போல் அளவுடைய போர் கப்பல்கள் 15 சிறிய போர் கப்பல்கள் 75 பெரிய துடுப்பு படகுகள், 20 குதிரை ஏற்றும் கப்பல்கள் [17]. முற்றுகைக்கு முன் ஒட்டோமான்கள் நடுத்தர ரக பீரங்கிகள் செய்யக்கூடியவர்கள் என அறியப்பட்டிருந்தது. ஆனால் சில பீரங்களின் வீச்சு எதிராளிகள் நினைத்ததை விட அதிகமாக இருந்தது. ஒட்டோமான்களின் இந்தப் புதிய ரக பீரங்கிக்குக் காரணம் அர்பன் என்பர் ஆவார். சிலர் இவர் அங்கேரியர் என்றும் சிலர் செருமானியர் என்றும் கூறுகின்றனர் [43]. அர்பன் வடிவமைத்த பாசில்லா என்ற பீரங்கி 27 அடி நீளமுள்ளது. இது 600 பவுண்டு (272 கிலோ) உடைய பாறையை (பாறை\கல் குண்டை) ஒரு மைலுக்கு அப்பால் தூக்கி வீசும் திறன் உடையதாக இருந்தது [44].

கான்சுடன்டினோப்பிள் முற்றுகையில் பயன்பட்ட அர்பன் வடிவமைத்த பீரங்கியைப் போன்று 1464ல் வார்க்கப்பட்ட பெரிய பீரங்கி; பிரித்தானியாவின் சேகரிப்பு.

அர்பன் முதலில் பைசாந்தியர்களை அணுகி அவர்களுக்குச் சேவை செய்ய முனைந்ததாகவும் அவர்களால் அர்பனை வேலைக்கமர்த்தும் அளவு பணம் இல்லாததால் அவர் மெகமுதை அணுகியதாகவும் சொல்லப்படுகிறது. அவர் தன்னுடைய ஆயுதம் பாபிலோனின் சுவர்களை கூடத் தகர்க்க கூடியது என்று மெகமுதிடம் கூறினார். மெகமுத் அவருக்கு வேண்டிய பணம் மற்றும் பொருட்களைக் கொடுத்தார். மூன்றே மாதத்தில் அர்பன் பீரங்கியை ஏட்டிரினோபிள்ளில் (Adrianople) கட்டிமுடித்தார். இதை 60 எருதுகள் கொண்டு கான்சுடன்டினோப்பிளுக்கு இழுத்து வந்தான். துருக்கியர்களின் முற்றுகைக்கு உதவும் பல பீரங்களையும் அர்பன் உருவாக்கினார் [45]. அர்பனின் பீரங்களில் சில பின்னடைவுகள் இருந்தன. அவற்றை வெடிக்க தயார் செய்ய மூன்று மணி நேரங்கள் ஆனது, பீரங்கிகுண்டுகள் (பீரங்கி குண்டுகளாகப் பயன்பட்ட கற்கள் அல்லது பாறைகள்) குறைந்த அளவே கிடைத்தது. முன்பு ஏற்படுத்தப்பட்ட வார்ப்பாலை 150 மைல்கள் (240 கிலோ மீட்டர்) தள்ளி இருந்ததால் மெகமுத் கடுமையான சிரமங்களுக்கிடையே தன் பெரும் பீரங்கிகளுக்கான பொருட்களைக் கொண்டு வர வேண்டியதாக இருந்தது. அர்பன் வடிவமைத்த பெரிய பீரங்கியுடன் எப்போதும் 60 எருதுகளும் 400 வீரர்களும் இருக்கவேண்டும் [43].

இரண்டாம் மெகமுதும் அவர் ஒட்டோமான் படைகளும் கான்சுடன்டினோப்பிளை பெரிய பீரங்கிகளுடன் அணுகுகின்றனர்

மெகமுத் முதலில் தியடோசியன் (Theodosian) சுவர்களை தாக்கத் திட்டமிட்டார். மேற்கில் இருந்து யாரும் கான்சுடன்டினோப்பிளை தாக்காமல் இருப்பதற்காகப் பல சுவர் தொகுப்புகளும் அகழிகளும் இருந்தன, இதுவே தண்ணீரால் சூழப்படாத இடமாகும். இவருடைய படை வீரர்கள் ஏப்பிரல் 2, 1453 அன்று கான்சுடன்டினோப்பிளுக்கு வெளியே முகாம் அமைத்து தாக்குதலுக்குத் தயார் ஆயினர். தங்க கொம்பு பகுதியில் சுல்தானின் கப்பல் படைகள் சூழ்ந்தன. மேற்கு பகுதியில் தைகசு நகரத்திற்கு தெற்கே தொடங்கி மர்மரா ( Marmara) கடல் பகுதி வரை சுல்தானின் தளபதிகளில் ஒருவரான இசாக் பாசாவின் (Ishak Pasha) படைகள் முகாமிட்டன. மேற்கு பகுதியில் தைகசு (Lycus) ஆற்றிற்கு வடக்கே சுல்தானின் தளபதிகளில் ஒருவரான கர்ச்சா பாசாவின் (Karadja Pasha) படைகள் முகாமிட்டன. சுல்தான் மெகமுத் மெசடேசியோ (Mesoteichion) பகுதிக்கு அருகில் தண்டு இறக்கினார் (முகாமிட்டார்). தங்க கொம்புக்கு வடக்கே சகன் பாசா (Zagan Pasha) முகாம் அமைத்தார். தங்க கொம்பு சதுப்பு நிலத்தில் அமைக்கப்பட்ட சாலை தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தப்பட்டது .[46].

ஒட்டோமான்கள் கப்பல்களை நிலம் வழியே தங்க கொம்பு பகுதிக்கு அனுப்புகின்றனர்.

பைசாந்தியர்களின் உத்தி[தொகு]

நகரம் 20 கிமீ நீள சுவர்களைக் கொண்டிருந்தது. இதில் தியடோசியன் சுவர் 5.5 கிமீ நீளமுடையதாகவும் தங்க கொம்பு பகுதி சுவர் 7 கிமீ நீளமுடையதாகவும் மர்மரா கடல் பகுதி சுவர் 7.5 கிமீ நீளமுடையதாகவும் இருந்தது. அக்காலத்தில் இதுவே பலமான சுவர்களைக் கொண்ட கோட்டையாகும். இச்சுவர்கள் எட்டாம் ஜான் காலத்தில் மராமரத்து செய்யப்பட்டு இருந்தது இந்நகரை காத்தவர்களுக்கு ஐரோப்பியர்களின் உதவி வரும் வரை முற்றுகையைதாக்கு பிடிக்கலாம் என்ற நம்பிக்கையை அளித்தது [47]. மேலும் பைசாந்தியர்களிடம் 26 போர் கப்பல்கள் இருந்தன. இவற்றில் ஐந்து செனோவா நாட்டாராது, ஐந்நு வெனிசு நாட்டாரது, 3 வெனிசியன் கடற்பயணிகளுடையது, ஒன்று அராகன் நாட்டாரது, ஒன்று பிரான்சு நாட்டாரது 10 பைசாந்தியருடையது ஆகும் [6]. ஏப்பிரல் 5 சுல்தான் தன் கடைசி படை வீரர்களுடன் முற்றுகையை தொடங்கினார் [48]. எல்லா சுவர்களையும் காக்க படை வீரர்கள் எண்ணிக்கை போதாது என்பதால் வெளிப்புற சுவரை மட்டும் காப்பது என்று முடிவாகியது. கான்சுடன்டின் மெசடேசியோ பகுதியிலுள்ள நடுபகுதி சுவரைக் கிரேக்க படை வீரர்களுடன் காத்தார். இப்பகுதியில் தைகசு ஆறு குறுக்கிடுவதால் இப்பகுதி சுவரின் காப்பு வலு குன்றியதாகவும் எதிரிகளின் தாக்குதல் பலமாக இவ்விடத்தில் நிகழாம் என்றும் கருதப்பட்டது. செவோனி அரசருக்கு வட பகுதியைக் காத்து நின்றார். முற்றுகை தொடங்கிய பின் இவர் அரசர் காத்து நின்ற பகுதிக்கு மாற்றப்பட்டு அரசருடன் இணைந்து போர் புரிந்தார். தான் காத்துநின்ற சாரியசு (Charisius) கதவு பகுதியைப் போகியார்டி(Bocchiardi) சகோதரர்கள் பொறுப்பில் விட்டு விட்டார். மினோட்டோ, வெனிசிய பயணிகள், தியோடர் கரிசுடோ, லாங்கசுகோ சகோதர்கள், பேராயர் லியனார்டோ ஆகியோர் பிளாசர்னே அரண்மனையை காத்தனர். அரசருக்குத் தெற்கே செனோவா வீரர்களுடன் காடநியோவும்(Cataneo) கிரேக்க வீரர்களுடன் தியோபிளசும் (Theophilus) பேகே கதவை (Pegae Gate) காத்து நின்றார்கள். பேகே கதவிலிருந்து தங்க கதவு வரையான பகுதியைப் பிலிப்போ கான்டரினியும் (Filippo Contarini) திடோசியன் (Theodosian) சுவரின் தென் முனையை டிமெட்ரியசு காடாகுசென்சும் (Demetrius Cantacuzenus)காத்து நின்றார்கள். கடற்கரையோர சுவர்கள் குறைந்த காவலுடன் இருந்தன். கடற்கரை சுவர் பகுதியில் சேகப் கான்டரினி (Jacobo Contarini)சுடோன்டியன் (Stoudion) பகுதியையும் அவருக்கு இடது புறம் கிரேக்க துறவிகளும், இளவரசர் ஓர்கன்(Orhan) எலுதிரியசு (Eleutherius) துறைமுகத்தையும் காடலான் (Catalan) வீரர்கள் பெரிய அரண்மனையையும் கிறுத்துவ மதத்தலைவர் இசடோர் (Cardinal Isidore) தீபகற்பத்தின் முனையையும் காவல் காத்தனர். தங்க கொம்பின் தென்புறத்திலுள்ள சுவர்களைச் செனோவா , வெனிசிய படை வீரகள் காபிரிலே டிவிசனோ (Gabriele Trevisano) தலைமையில் காத்தனர். அல்விசோ டிடோ (Alviso Diedo) கப்பற்படையை தலைமையேற்று நடத்தினார். பைசாந்தியர்களிடமும் பீரங்கிகள் இருந்தன ஆனால் அவை ஒட்டோமான்களின் பீரங்களைவிட சிறியவை. மேலும் அவை வெடிக்கும் போது ஏற்படும் விசையால் பின்நகரும் போது சுவர்களைச் சேதப்படுத்தின.

கான்சுடன்டினோப்பிள் நகருக்குள் நடக்கும் சண்டை, வெள்ளை குதிரையில் இருப்பவர் 16ம் கான்சுடன்டின்

நகர முற்றுகை[தொகு]

கான்சுடன்டின்னோப்பிளின் முற்றுகை 1499ல் வரைந்தது

முற்றுகையின் தொடக்கத்தில் மெகமுத் தன் படைகளை அனுப்பி நகருக்கு வெளியே உள்ள பைசாந்தியர்களின் இடங்களைப் பிடிக்க அனுப்பினார். போரபசு நீரிணையில் உள்ள கோட்டையான திரபியா (Therapia) மற்றும் சிறிய கோட்டைகள் சில நாட்களிலேயே கைப்பற்றப்பட்டன. மர்மரா கடலில் உள்ள இளவரசர் தீவைப் பால்டோகுலு (Baltoghlu) கடற்படை பிடித்தது [49]. நகரின் சுவர்களை உடைக்க மெகமுத்தின் பெரிய பீரங்கிகள் மூலம் சில வாரங்கள் கடுமையாகத் தாக்குதல் நடத்தப்பட்டது. துல்லியமற்ற தாக்குதலாலும் பீரங்கிகளை அடுத்த வெடிக்குத் தயார்படுத்த காலதாமதமானதாலும் பைசான்டியர்கள் தாக்குதலுக்கு இடைபட்ட நேரத்தில் நகர சுவர்களைச் சீரமைத்தது பீரங்கி தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பைக் குறைத்தது [50]. தங்க கொம்பு நுழைவாயிலில் சங்கிலி உள்ள கட்டைகள் போடப்பட்டு இருந்ததால் சுலைமான் பால்டோகுலு (Baltoghlu) தலைமையிலான துருக்கிய கப்பற்படை உள் நுழைய முடியவில்லை. மேலும் இப்படையின் பணியானது எந்தக் கப்பலும் தங்க கொம்புக்குள் நுழையாமல் தடுப்பதே ஆகும். ஏப்பிரல் 20 அன்று கிறுத்துவர்களின் சிறு கப்பல் தொகுப்பு கடுமையான சண்டைக்கிடையில் தங்க கொம்பில் நுழைந்தன [51], இது பைசாந்தியர்களின் மன உறுதியை அதிகரித்தது, மெகமுத்துக்கு மனவுளைவை ஏற்படுத்தியது [50]. பால்டோகுலு (Baltoghlu) கடுமையாகப் போராடினார் என்று மெகமுதிடம் அவரின் கீழ் அதிகாரிகள் கூறியதால் அவரின் உயிர் தப்பியது. இந்நிகழ்வுக்கு பின் சங்கிலியைச் சுற்றி செல்ல முடிவெடுத்த மெகமுத் தங்க கொம்புக்கு வடபுறம் வழவழப்பான கட்டைகள் கொண்ட சாலையை அமைத்துத் தன் கப்பல்களைத் தங்க கொம்பு பகுதிக்கு ஏப்பிரல் 22 அன்று கொண்டு சென்றார் [50]. ஏப்பிரல் 28 அன்று தங்க கொம்பு பகுதியிலுள்ள ஒட்டோமான் கப்பல்களை தீ கப்பல்களை கொண்டு அழிக்கப் பைசான்டியர்கள் முயன்றனர். ஆனால் ஒட்டோமான்களுக்கு இது முன்பே தெரியும் என்பதால் கிறுத்துவ படை பெரியளவிலான சேதத்துடன் பின்வாங்கியது. இதனைல் நகர பாதுகாப்பு படை தங்க கொம்பு பகுதி சுவர்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய சூழலுக்கு ஆளாயினர். ஏப்பிரல் 29 அன்று ஒட்டோமான் கைதிகள் 260 பேரின் தலைகள் சுவர்களில் வைத்து ஒட்டோமான்களின் கண் எதிரே வெட்டப்பட்டது [24]. துருக்கியர்கள் நிலப்பகுதி சுவர் வழியாக உள்நுழைய பல முயற்சிகள் மேற்கொண்டனர். எல்லா முயற்சிகளிலும் கடுமையான சேதத்துடன் முறியடிக்கப்பட்டனர்.

கான்சுடன்டின்னோப்பிளின் வீழ்ச்சி - தியோபிலாசு கைவண்ணத்தில்.

ஒட்டோமான்களின் பல தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டதால் பாதுகாப்பு சுவரைச் சுரங்கம் மூலம் கடப்பது என முடிவாகி மே மத்தியிலுருந்து மே 25 வரை அதற்கான வேலைகள் நடந்தன. சுரங்கம் தோண்டும் பொறுப்பு சகன் பாசா (Zagan Pasha) மேற்பார்வையின் கீழ் நடந்தது. எனினும் பைசாந்தியர்கள் எதிர் சுரங்கம் அமைத்துத் துருப்புக்களை அனுப்பி சுரங்கம் தோண்டிய ஒட்டோமான்களை அழித்தனர். பைசாந்தியர்கள் இரு துருக்கிய அதிகாரிகளைச் சிறை பிடித்துச் சித்தரவதை செய்ததிதன் மூலம் அவர்களிடமிருந்து சுரங்கம் உள்ள இடங்களை அறிந்து அவற்றை அழித்தனர் [52]. மே 21 அன்று சுல்தான் மெகமுத் கான்சுடன்டினோப்பிளுக்கு தூதுவரை அனுப்பி மன்னரைச் சந்தித்து நகரை ஒப்படைத்தால் முற்றுகையை விலக்கிக்கொள்வதாகவும் மன்னரும் நகரில் தங்கி இருப்போரும் அவர்கள் உடைமைகளுடன் தடையின்றி வெளியேறலாம் என்றும் கூறினார். 11ம் கான்சுடன்டின் சுல்தானைப் புகழ்ந்துவிட்டு அவர் பைசான்டியர்களிடமிருந்து கைப்பற்றிய கோட்டைகள், நிலங்கள் எல்லாவற்றுக்கும் அவரே மன்னர் என்றும் ஆனால் கான்சுடன்டினோப்பிளை ஒப்படைக்க முடியாது என்றும் கூறினார் [53].

அச்சமயம் மெகமுத் தன் அமைச்சர்களும் பெரிய அதிகாரிகளும் கூடிய ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அதில் அவர் கருத்துக்குச் சில எதிர்ப்புகள் ஏற்பட்டன. அவரின் அமைச்சர் கலில் பாசா (Halil Pasha) சமீபத்திய தோல்விகளால் முற்றுகையை கைவிடச் சொன்னார். ஆனால் கலிலின் முடிவைச் சகன் பாசா ஏற்காமல் உடனடியாக நகரின் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்றார். கையூட்டு பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு பின்னாளில் கலில் பாசா மரணதண்டனை பெற்றார். நீடித்த முற்றுகையால் பைசான்டியர்களின் பலம் குறைந்திருக்கும் என்றும் தன் படைகளால் சுவர்களைத் தாண்டி நகரை அடைந்து விடலாம் என்றும் தன் படைவீரர்கள் வெகுவாகக் குறையும் முன் இறுதி தாக்குதலைத் தொடங்க சுல்தான் விரும்பினார்

இறுதி தாக்குதல்[தொகு]

சுல்தான் இரண்டாம் மெகமுது
கான்சுடன்டின்னோப்பிளில் நுழையும் சுல்தான், வரைந்தவர் பாசுட்டோ

மே 26 மாலையில் இறுதி தாக்குதலுக்கான ஏற்பாடுகள் தொடங்கின. இது மறு நாள் காலை வரை நீடித்தது [54]. ஒட்டோமான்கள் தங்கள் படைவீரர்களைத் தாக்குதலுக்கு நன்கு தயார்படுத்தினர் [54]. ஏசியோ (Aegean) கடல் பகுதிக்குச் சென்று வந்த சிறிய வெனிசிய கப்பல்கள் வெனிசின் பெரிய கப்பல் ஏதும் கடல் பகுதியில் காணப்படவில்லை என்று கான்சுடன்டினிடம் தெரிவித்தன [55] . மே 29 அன்று இறுதி தாக்குதல் நடந்தது. ஒட்டோமான் படையில் இருந்த கிறுத்துவ படைகள் முதல் தாக்குதலை நடத்தின. அனடோலியன்கள் (Anatolians) வடமேற்கு பகுதி சுவரைத் தாக்கினார்கள், 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இச்சுவர் பகுதி பீரங்கி தாக்குதலுக்கு உட்பட்டு வலு இழந்து காணப்பட்டது. அனடோலியன்கள் சுவரைத் தகர்த்து உள்நுழைந்தனர் ஆனால் அவர்கள் நகர படைகளால் தாக்கப்பட்டு பின்வாங்கினார்கள். சுல்தானின் சிறப்பு படைகள் நகர சுவர்களைத் தாக்க ஆரம்பித்தன. செனோவா (Genoese) தளபதி சோவானி கூசுடினிஆனி (Giovanni Giustiniani) அத்தாக்குதலில் படுகாயமடைந்தார் [2][56][57] அவரைப் போர்களத்தை விட்டுச் சையோசு (Chios)க்கு கொண்டு செல்லப்பட்டார். காயம் காரணமாகச் சில நாட்களில் அவர் உயிர் பிரிந்தது. படைத்தளபதி இல்லாததால் நகரை காத்து நின்ற செனோவா படைகளில் குழப்பம் ஏற்பட்டது. அவரின் படைகள் பின்வாங்கித் துறைமுகப்பகுதியை அடைந்தன. துணையற்ற நிலையில் கான்சுடன்டினும் அவர் படைகளும் சுல்தானின் சிறப்பு படையின் முன்னேற்றத்தைத் தடுக்க முடியவில்லை. துருக்கிய கொடி முக்கிய இடத்தில் பறப்பதை கண்டதும் குழப்பமும் பயமும் சூழ்ந்ததால் நகர பாதுகாப்பு முற்றிலும் குழைந்தது. ஒட்டோமான் படைகள் நகர் முழுதும் பரவி நின்றனர். நகரின் பல மன்றங்கள், புனித தேவாலயங்கள் காக்கப்பட்டன. அவற்றை கிறுத்துவர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவக்கூடிய திருச்சபை முதல்வருக்கு உரியதாக்க மெகமுத் முடிவு செய்திருந்தார். மெகமுத் நகரின் முக்கிய இடங்களையும் கட்டடங்களையும் புனித தேவாலயங்களையும் காக்க ஆட்களை நியமித்தார். முற்றிலும் சீரழிந்த நகரத்தில் அவர் தன் புதிய தலைநகரை உருவாக்கு விரும்பவில்லை என்பது இதற்கு காரணமாகும். அவரது படைவீரர்கள் ஆகியா சோபியா (Hagia Sophia) தேவாலயத்தின் முன் உள்ள பரந்த இடத்தில் கூடினர். அத்தேவாலயத்தின் வெண்கலக்கதவுகளுக்கு உள்ளே பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இருந்தனர். ஏதாவது அதியசம் நடந்து தாங்கள் காப்பாற்றபடுவோம் என்று நம்பிக்கை கொண்டிருந்தனர். கதவு உடைக்கப்பட்டதும் அங்கிருந்த மக்கள் அடிமை சந்தையில் விலை உள்ளதற்கு தக்கவாறு பிரிக்கப்பட்டனர். அந்நாளைய வழக்கப்படி வெற்றி பெற்ற நகரை மூன்று நாட்கள் சூறையாட தன் படைகளுக்குச் சுல்தான் அனுமதி வழங்கினார் [58]. வெனிசிய மருத்துவர் நிகோலோ பார்பரோ துருக்கியர்கள் பெரும் எண்ணிக்கையிலான கிறுத்துவர்களை கொன்றார் என்கிறார் [59]. ஆனால் பிரித்தானிய வரலாற்று ஆய்வாளர் தேவிது நிகோலே நகர மக்களைச் சிலுவைப்போராளிகள் 1204ல் நடத்தியதை விட ஒட்டோமான்களால் நன்றாகவே நடத்தப்பட்டதாகக் கூறுகிறார் [21]. 4000 கிரேக்கர்கள் முற்றுகையின் போது இறந்தனர். ஒட்டோமான்களின் இழப்பு பற்றித் தெரியவில்லை, ஆனால் பல தோல்வி தாக்குதல்களில் பெருமளவு படையினரை இழந்ததால் அவர்கள் இழப்பு அதிகமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

நகரம் வீழ்ந்த பின் உள்ள நிலை[தொகு]

ஆகியா சோபியா (Hagia Sophia) தேவாலயம் மசூதியாக மாற்றப்பட்டது

நகரை கைப்பற்றிய மூன்றாவது நாள் சுல்தான் தம்படைகள் கொள்ளையடிப்பதை நிறுத்தி நகரின் சுவர்களுக்கு வெளியே இருக்குமாறு ஆணையிட்டார் [21]. ஆகியா சோபியா (Hagia Sophia) தேவாலயம் மசூதியாக மாற்றப்பட்டது. கிரேக்க மரபுவழி திருச்சபை கான்சுடன்டினோப்பிளில் பாதிப்பு ஏதுமில்லாமல் இருந்தது அதற்கு செனாடியசு இசுகாலரியசு (Gennadius Scholarius) தலைவராக நியமிக்கப்பட்டார். மொரி (Morean) கோட்டையில் இருந்து கான்சுடன்டின் சகோதரர்கள் தாமசும் டிமட்டிரியசும் ஆட்சி புரிந்தனர். மெகமுத் படையெடுத்து இக்கோட்டையை கைப்பற்ற வருவார் என்று தெரிந்திருந்தும் இருவரும் ஓயாது சண்டையிட்டுக்கொண்டனர். கான்சுடன்டினோப்பிள் வீழ்வதற்கு வெகு காலம் முன்னரே டிமட்டிரி அரச தலைமை பதவிக்காகத் தாமசு, கான்சுடன்டின் அவர்களின் மற்ற சகோதரர்கள் ஜான், தியோடர் உடன் சண்டையிட்டார் [60]. ஓட்டோமான்கள் மொரியை தாக்கிய போது தாமசு ரோமுக்கு தப்பியோடிவிட்டார். டிமட்டிரியசு மொரியை ஒட்டோமான்களுக்கு அடங்கி அரசு செலுத்துவார் என்று எதிர்பார்த்ததுக்கு மாறாக அவர் சிறை பிடிக்கப்பட்டு வாழ்நாள் முழுதும் சிறையிலேயே கழித்தார். நாடில்லா பைசாந்திய பேரரசர் என்ற முறையில் 1503 வரை பாப்பரசரும் சில ஐரோப்பிய அரசர்களும் தாமசுக்கு பொருள் உதவி செய்தனர். பைசாந்தியப் பேரரசு வீழ்ந்தது ஓட்டோமான்கள் ஐரோப்பா நோக்கிப் படையெடுப்பதில் இருந்த சிறு தடையை நீக்கிவிட்டது. இந்நகரின் வீழ்ச்சி கிறுத்துவ உலகுக்கு கிடைத்த பெரும் பாதிப்பாகும். இந்நகரின் வீழ்ச்சி ஐரோப்பிய நாடுகளைக் கிழக்கில் இருந்து கடுமையான எதிரி தாக்குவதற்கு வழி ஏற்படுத்திக்கொடுத்தது. பாப்பரசர் ஐந்தாம் நிக்கோலசு உடனடியாக ஒட்டோமான்கள் மீது சிலுவைப்போர்கள் போல் தாக்குதல் நடத்த அழைப்பு விடுத்தார். ஆனால் ஐரோப்பிய அரசர்கள் சிலுவைப்போரை முன்னின்று நடத்த முன் வரவில்லை. அதனால் ஐந்தாம் நிக்கோலசு தானே போரை நடத்துவது என்று முடிவு செய்தார். அவர் சில ஆண்டுகளில் இறந்ததால் அத்திட்டம் நிறைவேறவில்லை. பல கிரேக்க அறிஞர்கள் இத்தாலிய நகர நாடுகளில் தஞ்சம் அடைந்தனர். 1396ல் கொலுச்சியோ சலுட்டாடி (Coluccio Salutati) அழைப்பின் பேரில் பைசான்டிக் அறிஞர் மானுவல் கிரிசுசோலரசு (Manuel Chrysoloras) புளோரன்சு பல்கலைக்கழகத்தில் உரையாற்றினார் .[61]. பைசாந்தியப் பேரரசின் பல கிரேக்க அறிஞர்கள் லத்தின் நாடுகளில் தஞ்சம் அடைந்தது ஐரோப்பிய மறுமலர்ச்சி காலத்துக்கு அடிகோழியது [62][63]. நகரத்திலேயே தங்கிவிட்ட கிரேக்கர்கள் நகரின் பானார் (Phanar), கலட்டா ( Galata) மாவட்டங்களில் தங்கினர். பானார்கள் என்று அழைக்கப்பட்ட அவர்கள் ஒட்டோமான் அரசர்களுக்குச் சிறந்த முறையில் அறிவுரை கூறுவோர்களாக இருந்தனர். கான்சுடன்டிநோப்பிளின் வீழ்ச்சி இடைக்காலத்தின் முடிவாகப் பல வரலாற்று அறிஞர்களால் பார்க்கப்படுகிறது. ஐரோப்பாவில் மறுமலர்ச்சி காலம் தொடங்கியது பீரங்கிகளும் துப்பாக்கி மருந்துகளும் பயன்படுத்தப்பட்டது இதற்கு காரணமாகும், நகர வீழ்ச்சியின் காரணமாக ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்குமான நிலவழி பாதை துருக்கியர்களின் கையில் வந்தது, இதனால் ஐரோப்பியர்கள் ஆசியாவுக்கு கடல் வழியாகவே செல்ல முடியும் என்ற முடிவுக்கு வந்தனர் [64].

நிலவு மறைப்பு[தொகு]

மே 1452 ல் இடைக்காலத்திய வானியல் அறிஞர்கள் நிலவு மறைப்பை கண்டார்கள். அப்போது இரண்டிலிருந்து மூன்று பகுதி நிலவு பூமியின் நிழலால் மறைக்கப்பட்டிருந்தது. அன்று நிலவு சிவப்பு நிறத்தில் காணப்பட்டது. இது நகரின் அதிகாரம் கை மாறுவதை குறிக்கும் தெய்வ வாக்குக்கு அறிகுறி என்று நம்பப்பட்டது.

நிலவு மறைவு - சிவப்பு நிற நிலவு

கலாச்சார குறிப்புகள்[தொகு]

செவி வழிக் கதைகள்[தொகு]

கான்சுடன்டின்நோப்பிளின் வீழ்ச்சி பற்றிப் பலவிதமான கதைகள் கிரேக்கத்தில் சொல்லப்படுகிறது. மே 22, 1453 ல் தோன்றிய நிலவு மறைப்பு நிகழ்வுக்குப் பின் நகரம் அழியும் என்று தெய்வ வாக்கு சொன்னபடி நடந்ததாகக் கூறப்படுகிறது [65] . நான்கு நாட்களுக்குப் பின் நகரத்தைப் பெரிய அளவில் பனிமூட்டம் பகல் முழுவதும் சூழ்ந்தது, இது மே மாதத்தில் அப்பகுதியில் நிகழாத நிகழ்வாகும். மாலையில் பனிமூட்டம் விலகும் போது ஆகியா சோபியா தேவாலயத்தின் குவிமாடத்தின் மேல் இனந்தெரியாத வெளிச்சம் தெரிந்தது. இந்த வெளிச்சம் மேற்குப்பகுதியில் வெகு தூரத்துக்குத் தெரிந்தது. இவ்வெளிச்சம் இறைசக்தி தேவாலயத்தை விட்டு வெளியேறிவிட்டதற்கு அறிகுறியாகக் கருதப்பட்டது. சிலர் இது நகரை காக்க வரும் ஜான் உன்யாடியின் (John Hunyadi) படைவீரர்கள் முகாம்களின் வெளிச்சமாக இருக்கலாம் என்று நம்பினர். மற்றொரு கதை ஒட்டோமான்கள் நகருக்கள் நுழைந்ததும் 16ம் கான்சுடன்டினை தேவர்கள் காப்பாற்றி அவரைப் பளிங்கு சிலையாக மாற்றித் தங்க கதவு அருகே உள்ள குகையில் வைத்ததாகவும் அங்கு அவர் மீண்டும் மனித உயிர் பெற காத்திருப்பதாகவும் கூறுகிறது [66][67].

மறுமலர்ச்சியில் தாக்கம்[தொகு]

கான்சுடன்டின்நோப்பிளின் வீழ்ச்சிக்குப் பிறகு பைசாந்திய நாட்டின் அறிஞர்கள் பெருமளவில் வேறு நாடுகளுக்குச் சென்றனர். இவர்கள் தங்களோடு கிரேக்க நாகரிகத்தின் அறிவையும் கொண்டு வந்தனர். இவர்கள் வருகையால் கிரேக்கர்கள் மற்றும் ரோமர்கள் பற்றி அறிந்து கொள்ளும் ஆவல் அதிகரித்து மக்கள் அவற்றைப்பற்றி நிறைய தெரிந்துகொள்ளமுற்பட்டார்கள். இதனால் ஐரோப்பாவில் மறுமலர்ச்சி ஏற்பட்டது.

மெகலி எண்ணம்[தொகு]

முதலாம் உலகப்போரில் தோற்று வலுவிழந்து இருந்த ஒட்டோமான்களிடம் இருந்து கிரேக்க அரசியல்வாதி எல்ப்திரியாசு வெனிசோலசு (Eleftherios Venizelos) கான்சுடன்டினோப்பிளை ஒட்டோமான்களிடம் இருந்து கைப்பற்றும் மெகலி திட்டத்தின் படி 1919 - 1922 காலத்தில் துருக்கியுடன் கிரேக்கம் போர் தொடுத்தார். இதில் துருக்கி வெற்றி பெற்றது, வெனிசோலசு தேர்தலில் தோற்று வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார்.

நகரின் பெயர் மாற்றம்[தொகு]

கொன்ஸாந்திநேபிள் நகரை சுல்தான் கைப்பற்றிய பிறகு இதன் பெயர் இசுதான்புல் என்று மாற்றப்பட்டுவிட்டது.

அதேநேரம் ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் ஒட்டோமான்களின் ஆவணங்களில் அவர்கள் கான்சுடன்டின்நோப்பிளின் அரபு மொழிபெயர்ப்பையே பயன்படுத்தி வந்தார்கள் என்கிறார்கள்.

இசுதான்புல் என்பது கிரேக்க சொல்லான "நகருக்கு" என்பதில் இருந்து பெறப்பட்டதாக இருக்கலாம் என அவர்களால் புதிய கோணத்தில் நம்பப்படுகிறது.

ஒட்டோமன் பேரரிசின் வீழ்ச்சிக்குபின் உருவாகிய புதிய துருக்கிய அரசாங்கத்தின் தலைவரான அத்தாதுர்க்கின் சீர்திருத்ததின்படி துருக்கிய தபால் சட்டத்தை திருத்தும் போது 1930ம் ஆண்டு இந்நகருக்கு இசுதான்புல் என்ற பெயர் உறுதிப்படுத்தப்பட்டு அதிகாரபூர்வமாகமாக்கப்பட்டது [68][69][70].

மேற்கோள்கள்[தொகு]

  1. Constantine XI (1449–1453) and the capture of Constantinople
  2. 2.0 2.1 2.2 2.3 Pertusi, Agostino, ed. (1976). La Caduta di Costantinopoli. Fondazione Lorenzo Valla: Verona. (An anthology of contemporary texts and documents on the fall of Constantinople; includes bibliographies and a detailed scholarly comment). 
  3. Steven Runciman (1965). The Conquest of Constantinople, 1453. Cambridge: Cambridge University Press. பக். 85. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-521-39832-0. 
  4. 4.0 4.1 Merle Severy. Byzantine Empire. National Geographic. Vol. 164, No. 6 December 1983, p. 755?.
  5. A Global Chronology of Conflict: From the Ancient World to the Modern Middle ... , Spencer C. Tucker, 2009, p.343
  6. 6.0 6.1 Nicolle, David (2000). Constantinople 1453: The end of Byzantium. Oxford: Osprey Publishing. பக். 45. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-84176-091-9. 
  7. J. E. Kaufmann, Hanna W. Kaufmann: The Medieval Fortress: Castles, Forts, and Walled Cities of the Middle Ages, Da Capo Press, 2004, ISBN 0-306-81358-0, page 101
  8. Ikram ul-Majeed Sehgal: Defence Journal (Issue 8), 2005, page 49
  9. Daniel Goffman: The Ottoman Empire and Early Modern Europe, Cambridge University Press, 2002, ISBN 0-521-45908-7, page 52
  10. James Patrick: Renaissance And Reformation, Marshall Cavendish, 2007, ISBN 0-7614-7650-4, page 618
  11. Norwich, John Julius (1997). A Short History of Byzantium. New York: Vintage Books. 
  12. 12.0 12.1 12.2 Nicolle 2000.
  13. İnalcık, Halil (2008), Osmanlı İmparatorluğu Klasik Çağ (1300–1600)
  14. Chronicles of George Sphrantzes; Greek text is reported in A. Mai, Classicorum auctorum e Vaticanis codicibus editorum, tome IX, Romae 1837, pp 1–100
  15. The Destruction of the Greek Empire, Edwin Pears
  16. Leonardo di Chio, Letter,927B: "three hundred thousand and more".
  17. 17.0 17.1 Nicolle 2000, p. 44.
  18. Uyar, Mesut; Erickson, Edward J. (2009). A military history of the Ottomans: from Osman to Atatürk. Santa Barbara: Praeger. பக். 37. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-275-98876-0. https://archive.org/details/militaryhistoryo0000uyar. 
  19. Michael Lee Lanning: The Battle 100: The Stories Behind History's Most Influential Battles, Sourcebooks, Inc., 2005, ISBN 1-4022-2475-3, pg 139-140
  20. Saul S. Friedman: A history of the Middle East, McFarland, 2006, ISBN 0-7864-5134-3, page 179
  21. 21.0 21.1 21.2 Nicolle, David (2007). The Fall of Constantinople: The Ottoman Conquest of Byzantium. New York: Osprey Publishing. பக். 237, 238. 
  22. Ruth Tenzel Fieldman, The Fall of Constantinople, Twenty-First Century Books, 2008, p. 99
  23. "Constantinople City of the World's Desire 1453-1924". பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2012.
  24. 24.0 24.1 The Fall of Constantinople 1453,Steven Runciman, page 108, 1990
  25. 25.0 25.1 Steven Runciman: The Fall of Constantinople 1453, ISBN 1-107-60469-9, Cambridge University Press, 2012, page 215.
  26. Momigliano & Schiavone (1997), Introduction ("La Storia di Roma"), p. XXI
  27. Crowley, Roger (2006). Constantinople: The Last Great Siege, 1453. Faber. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-571-22185-8.  (reviewed by Foster, Charles (22 செப்தெம்பர் 2006). "The Conquestof Constantinople and the end of empire". Contemporary Review. It is the end of the Middle Ages)
  28. Norwich, John Julius (1997). A Short History of Byzantium. New York: Vintage Books. பக். 304. 
  29. Thomas Madden (2005). Crusades: The Illustrated History. Ann Arbor: University of Michigan. https://archive.org/details/crusades00thom. 
  30. Haldon, John (2000). Byzantium at War 600 – 1453. New York: Osprey. 
  31. Mango, Cyril (2002). The Oxford History of Byzantium. New York: Oxford UP. 
  32. The Black Death, Channel 4 – History.
  33. A timeline of the Roman Empire, Piero Scaruffi. Retrieved 2011-11-23.
  34. Runciman 1965, p. 60
  35. 35.0 35.1 35.2 Norwich, John Julius (1997). A Short History of Byzantium. New York: Vintage Books. பக். 373. 
  36. Setton, Kenneth M. (1978), The Papacy and the Levant (1204–1571), Volume II: The Fifteenth Century, DIANE Publishing, p. 146, ISBN 0-87169-127-2, While Mehmed II had been making preparations for the siege of Constantinople, he had sent the old general Turakhan and the letter's two sons, Ahmed Beg and Omar Beg to invade the Morea and to remain there all winter to prevent the despots Thomas and Demetrius from coming to assistance to their brother Constantine XI
  37. Runciman 1965, pp. 83–84
  38. Runciman 1965, p. 81
  39. Runciman 1965, p. 85.
  40. Donald M. Nicol, The Last Centuries of Byzantium: 1261–1453 (Cambridge University Press, 1993) p.380.
  41. According to Phrantzes, whom Constantine had ordered to make a census, the Emperor was appalled when the number of native men capable of bearing arms turned out to be only 4,983. Leonardo di Chio gave a number of 6,000 Greeks. See Runciman 1965, p. 85.
  42. Nicolle. Constantinople 1453, p. 32.
  43. 43.0 43.1 Norwich, John Julius (1997). A Short History of Byzantium. New York: Vintage Books. பக். 374. 
  44. Davis, Paul (1999). 100 Decisive Battles. Oxford. பக். 166. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-514366-9. 
  45. Runciman 1965, ப. 77–78
  46. Runciman 1965, pp. 94–95.
  47. Nicolle 2000, p. 39.
  48. The following information is taken from Runciman (1965), pp. 92–94.
  49. Runciman 1965, pp. 96–97.
  50. 50.0 50.1 50.2 Norwich, John Julius (1997). A Short History of Byzantium. New York: Vintage Books. பக். 376. 
  51. These were the three Genoese ships sent by the Pope, joined by a large Imperial transport ship which had been sent on a foraging mission to Sicily previous to the siege and was on its way back to Constantinople. (Runciman 1965, p. 100)
  52. Crowley, Roger. 1453: the holy war for Constantinople and the clash of Islam and the West. New York: Hyperion, 2005. pp. 168–171. ISBN 1-4013-0850-3.
  53. Paragraph and following quote source: Greek Wikipedia, corresponding article titled " Άλωση της Κωνσταντινούπολης "
  54. 54.0 54.1 Norwich, John Julius (1997). A Short History of Byzantium. New York: Vintage Books. பக். 378. 
  55. Norwich, John Julius (1997). A Short History of Byzantium. New York: Vintage Books. பக். 377. 
  56. (இலத்தீன்) Epistola reverendissimi patris domini Isidori cardinalis Ruteni scripta ad reverendissimum dominum Bisarionem episcopum Tusculanum ac cardinalem Nicenum Bononiaeque legatum (letter of Cardinal Isidore to Cardinal Basilios Bessarion), dated 6 July 1453
  57. (இலத்தீன்) Leonardo di Chio, Letter to Pope Nicholas V, dated 16 August 1453, edited by J.-P. Migne, Patrologia Graeca, 159, 923A–944B.
  58. Smith, Michael Llewellyn, The Fall of Constantinople, History Makers magazine No. 5, Marshall Cavendish, Sidgwick & Jackson (London).
  59. Mansel, Philip (1995). Constantinople: City of the World's Desire. Hachette UK. பக். 79. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0719550769. 
  60. Norwich, John. Byzantium: The Decline and Fall Penguin: London, 1995. 446.
  61. N.G. Wilson, From Byzantium to Italy. Greek Studies in the Italian Renaissance, London, 1992. ISBN 0-7156-2418-0
  62. "John Argyropoulos". britannica.com. பார்க்கப்பட்ட நாள் 2 அக்டோபர் 2009. .
  63. "Byzantines in Renaissance Italy". Archived from the original on 31 ஆகத்து 2018. பார்க்கப்பட்ட நாள் 24 செப்தெம்பர் 2013.
  64. Davis, Ralph. The Rise of the Atlantic Economies Ithaca, New York: Cornell UP, 1973. 9–10.
  65. Guillermier, Pierre; Serge Koutchmy (1999). Total Eclipses: Science, Observations, Myths, and Legends. Springer. பக். 85. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-85233-160-7. http://books.google.com/books?id=1F_zSwe9iU4C. பார்த்த நாள்: 27 February 2008. 
  66. "The Marble King (in Greek)". Archived from the original on 13 திசம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 24 செப்தெம்பர் 2013.
  67. "Odysseas Elytis's poem on Constantine XI Palaeologos". Archived from the original on 3 மார்ச்சு 2016. பார்க்கப்பட்ட நாள் 24 செப்தெம்பர் 2013.
  68. Robinson, Richard D. (1965). The First Turkish Republic: A Case Study in National Development. Cambridge: Cambridge University Press
  69. Room, Adrian, (1993), Place Name changes 1900–1991, (Metuchen, N.J., & London:The Scarecrow Press, Inc.), ISBN 0-8108-2600-3 pp. 46, 86.
  70. "Timeline: Turkey". BBC News. 10 December 2009. http://news.bbc.co.uk/2/hi/europe/1023189.stm. பார்த்த நாள்: 18 January 2010.