தெ. பொ. மீனாட்சிசுந்தரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெ. பொ. மீனாட்சிசுந்தரம்
பன்மொழிப் புலவர்
பன்மொழிப் புலவர்
பிறப்புதெ. பொ. மீனாட்சிசுந்தரம்
(1901-01-08)சனவரி 8, 1901
சிந்தாதிரிப்பேட்டை, சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இறப்புஆகத்து 27, 1980(1980-08-27) (அகவை 79)
புனைபெயர்தெ.பொ.மீ
தொழில்தமிழ்ப் பேராசிரியர்
எழுத்தாளர்
தேசியம்இந்தியர்
கல்விஇ.க, B.L, முதுகலை, MOL
வகைஆய்வுக் கட்டுரைகள்
கருப்பொருள்தமிழிலக்கியம்
வரலாறு
மொழியியல்
குறிப்பிடத்தக்க விருதுகள்கலைமாமணி, பத்மபூசண்

பன்மொழிப்புலவர் என்று அழைக்கப்பட்ட தெ. பொ. மீனாட்சிசுந்தரம் (08 சனவரி 1901 – 27 ஆகத்து 1980) 20-ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற தமிழறிஞர்களுள் ஒருவர். இவர் சமசுகிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பிரெஞ்சு, செருமன் போன்ற பல மொழிகளை அறிந்தவராய் இருந்தார். தமிழிலும் ஆங்கிலத்திலும் இலக்கியம், இலக்கணம், வரலாறு, சமயம், ஒப்பிலக்கியம், மொழியியல் குறித்த பல கட்டுரைகளையும், நூல்களையும், திறனாய்வுகளையும் எழுதியுள்ளார்.[1]

ஆரம்பத்தில் ஒரு வழக்கறிஞராகவும், சென்னை மாநகராட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் பணியாற்றிய இவர், பிறகு மொழியியலில் ஆர்வம் கொண்டு பட்டங்கள் பெற்றுப் பல கல்லூரிகளில் பேராசிரியராகவும், பின்னர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராகவும் 1966 முதல் 1971 வரை பணியாற்றினார்.[2] தமிழக அரசின் கலைமாமணி விருதையும், இந்திய அரசின் பத்மபூசண் விருதையும் பெற்றவர்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

தெ. பொ. மீனாட்சிசுந்தரம், தமிழ்நாடு, சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் 1901-ஆம் ஆண்டு சனவர் 8-ஆம் நாள் பொன்னுசாமி கிராமணியார் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தைக்குத் தமிழ் மீதும் தமிழ் அறிஞர்கள் மீதும் இருந்த பற்றினால், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் பெயரை மகனுக்கு இட்டார்.

1920-இல் பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. பட்டமும் 1922-இல் பி.எல். பட்டமும் பெற்றார். 1923-இல் எம்.ஏ. பட்டம் பெற்று வரலாறு, பொருளியல், அரசியல் ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.[3] 1923-இல் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக தன்னை பதிவு செய்து கொண்டார்.

1924-இல் சென்னை மாநகராட்சியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். 1925-இல் அலுமினியத் தொழிலாளர் சங்கத் தலைவராய் இருந்து தொண்டு புரிந்தார். தமிழ் இலக்கிய இலக்கண ஆர்வத்தால் 1934-இக்குள் பி.ஓ.எல், எம்.ஓ.எல். பட்டங்களும் பெற்றார். 1941-இல் நாட்டு உரிமைக்காக மறியல் செய்து சிறை சென்றார்.

இவரது தமிழ்ப் புலமையைக் கண்ட அண்ணாமலை அரசர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு இவரைப் பேராசிரியராக நியமித்தார். பேராசிரியராகப் பொறுப்பேற்ற தெ.பொ.மீ. 1944 முதல் 1946 வரை அங்குப் பணியாற்றினார்.[4] மீண்டும் 1958-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல், இலக்கியத் துறைகளின் தலைமைப் பேராசிரியராகப் பொறுப்பேற்றார். மொழிப்புலமை இவரை அயல்நாட்டுப் பல்கலைக்கழகமான சிகாகோ பல்கலைக்கழகத்தில் 1961-இல் தமிழ்ப் பேராசிரியராகப் பொறுப்பேற்க வைத்தது.

1973 மற்றும் 1974-ஆம் ஆண்டுகளில் திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழியியல் கழகச் சிறப்பாய்வாளராகப் பொறுப்பேற்றார். 1974 முதல் ஆழ்நிலை தியான தேசியக் குழுவில் உறுப்பினராக இருந்து தொண்டு செய்துள்ளார். இவருக்குத் தருமபுர ஆதீனம் "பல்கலைச் செல்வர்" என்ற விருதினையும், குன்றக்குடி ஆதீனம் "பன்மொழிப் புலவர்" என்ற விருதினையும் அளித்து சிறப்பித்தன.

படைப்புகள்

கானல்வரி, குடிமக்கள் காப்பியம், பிறந்தது எப்படியோ, தமிழா நினைத்துப்பார், சமணத் தமிழிலக்கியம, குசேலர்.

  1. "Collected works of Prof. T. P. Meenakshisundaram". National Library of Australia. 2016. பார்க்கப்பட்ட நாள் 20 July 2016.
  2. "History of the College". Kamaraj College. 2016. Archived from the original on 1 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 July 2016.
  3. "Life History". Tamil Electronic Library. 2016. பார்க்கப்பட்ட நாள் 20 July 2016.
  4. "From merchant to Tirukkural scholar". The Hindu. 18 October 2015. பார்க்கப்பட்ட நாள் 20 July 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெ._பொ._மீனாட்சிசுந்தரம்&oldid=3558950" இலிருந்து மீள்விக்கப்பட்டது