டி மோறன் படையணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டி மோறன் படையணி
Régiment de Meuron
சேவையில் 1781-1795
கடப்பாடு நெதர்லாந்து
பிரிவு இராணுவம்
வகை காலாட்படை
டி மோறன் படை
Regiment de Meuron
சேவையில் 1795-1816
கடப்பாடு பெரிய பிரித்தானியா
பிரிவு இராணுவம்
வகை காலாட்படை
டி மோறன் படையின் கொடி

டி மோறன் படையணி (Regiment de Meuron) என்பது 1781 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் திரட்டப்பட்ட கூலிப்படையினரைக் கொண்ட ஒரு காலாட்படையணி ஆகும். கேணல் சார்ல்சு-டானியல் டி மோறன் என்பவர் இப்படையணியின் தலைவராக இருந்தார். இப்படையணி டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனிக்காக இலங்கை, கேப் டவுன். மைசூர், கனடா ஆகிய இடங்களில் பணியாற்றியது.

சார்ல்சு-டானியல் டி மோறன் (1738-1806)

இலங்கையில் பணி[தொகு]

ஒல்லாந்தர் தமது தேவைக்காக இக்கூலிப் படையினரை 1886 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையில் நிறுத்தி வைத்திருந்தனர். சார்ல்சு டி மோறன் இலங்கையில் உள்ள தனது படையினரை அவரது தம்பி கேணல் பியேர் பிரெடெரிக் டி மோறன் என்பவரின் பொறுப்பில் விட்டு சுவிட்சர்லாந்து திரும்பினார். அங்கு அவருக்கு பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் இரகசிய முகவரும், ஸ்கொட்லாந்துப் பேராசிரியருமான ஹியூ கிளேகோர்ன் என்பவரின் நட்பு கிடைந்தது. இலங்கையைக் கைப்பற்றுவதற்குக் குறி வைத்திருந்த பிரித்தானியர் டி மோறனுடனான தொடர்பைத் தமக்க் சாதகமாகப் பயன்படுத்தினர். இலங்கையில் இருந்த டி மோறன் படையினரை இந்தியாவில் பிரித்தானியருக்குச் சேவையிலமர்த்த கிளேகோர்ன் டி மோறனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்.[1] இவ்வொப்பந்தத்தின் படி, அனைத்துக் கூலிப்படையினரையும் அதே சம்பளத்தில் வைத்திருக்கவும், அப்படையினருக்கு டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி கொடுக்க வேண்டியிருந்த சம்பள நிலுவைப் பணத்தை பிரித்தானியரே கொடுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் அப்படையினரின் பழைய சேவைகளையும் பிரித்தானியர் தமக்குச் செய்த சேவையெனக் கணித்துக் கொள்ளப்பட்டது.[2] கிளேகோர்ன் செய்த இந்த ஒப்பந்தம் இலங்கையில் ஆங்கிலேயருக்குச் சாதகமாய் அமைந்தது. டி மோறன் படையணி முழுவதும் 1795 அக்டோபரினுள் இந்தியாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனால் டச்சுக்களின் படைப்பலம் இலங்கையில் வெகுவாகக் குறைந்தது. 1796 பெப்ரவரி 15 இல் கொழும்பில் டச்சுப் படையினர் ஆங்கிலேயரிடம் சரணடைந்தனர்.[2] 1798 ஆம் ஆண்டில் கிளேகோர்ன் இலங்கைக்கான பிரித்தானியாவின் முதலாவது ஆளுனர் பிரடெரிக் நோர்த்தின் முதலாவது குடியேற்றச் செயலாளராக (colonial secreatary) பதவியிலமர்த்தப்பட்டார்.

ஏனைய நாடுகளில் பணி[தொகு]

1798 ஆம் ஆண்டில் ஒப்பந்தம் முழுமையாக நிறைவேற்றப்பட்டு, டி மோறன் படையணி முழுமையாக பிரித்தானியரின் சேவையில் இணந்தது. இப்படையினர் 1799 ஆம் ஆண்டில் மைசூர் போரிலும், 1806 முதல் 1812 வரை நெப்போலியப் போர்களிலும், இறுதியில் 1812 இல் கனடாவிலும் பிரித்தானியருடன் இணைந்து போரில் ஈடுபட்டனர். மானிட்டோபா, வினிப்பெக்கில் உள்ள Rue des Meurons என்ற இடம் இப்படையணியினரின் நினைவாகப் பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. A secret service Agent who became the first Colonial Secretary of Ceylon, HUGH CLEGHORN பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம், தி ஐலண்டு, மார்ச்சு 3, 2005
  2. 2.0 2.1 குலரத்தினம், க. சி., நோத் முதல் கோபல்லவா வரை, பக். 38, சேமமடு பதிப்பகம், கொழும்பு, 2008

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி_மோறன்_படையணி&oldid=3300952" இலிருந்து மீள்விக்கப்பட்டது