யாழ்ப்பாணச் சரித்திரம் (இராசநாயகம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாழ்ப்பாணச் சரித்திரம்
நூல் பெயர்:யாழ்ப்பாணச் சரித்திரம்
ஆசிரியர்(கள்):செ. இராசநாயகம்
வகை:வரலாறு
துறை:{{{பொருள்}}}
காலம்:1933
இடம்:யாழ்ப்பாணம்
மொழி:தமிழ்
பக்கங்கள்:267 (1999 பதிப்பு)
பதிப்பகர்:முதல் மீளச்சு (1986):
ஏசியன் எடுகேஷனல் சர்வீசஸ்
(புதுடில்லி)
பதிப்பு:1993 ஏ.எ.ச.
1994 ஏ.எ.ச.
1997 ஏ.எ.ச.
1999 ஏ.எ.ச.

செ. இராசநாயகம் எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் தமிழ் நூல், இதன் தலைப்புக் காட்டுவது போல யாழ்ப்பாணத்தின் வரலாறு கூறும் நூல்களுள் ஒன்று. இவ்வாசிரியர் 1926ல் பண்டைய யாழ்ப்பாணம் (Ancient Jaffna) என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்ட ஆராய்ச்சி நூலின் முடிவுகளைத் தழுவி மாணவர்களும், ஆங்கிலம் தெரியாத பிறரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கதை கூறும் பாங்கில் எழுதப்பட்டதே இந்நூல்.[1] எனினும், மேலே குறிப்பிடப்பட்ட ஆங்கில ஆய்வு நூல், போர்த்துக்கேயர் ஆட்சிக்கு முற்பட்ட காலத்தின் வரலாற்றையே கையாள்கிறது. ஆனால், இந்தத் தமிழ் நூலில் ஒல்லாந்தர் காலம் முடியும் வரையிலான வரலாறு சேர்க்கப்பட்டுள்ளது.

உள்ளடக்கம்[தொகு]

இந்த நூல் பின்வரும் ஆறு அதிகாரங்களைக் கொண்டது:

  1. நாகர் காலம்
  2. கலிங்கர் காலம்
  3. ஆரியச் சக்கரவர்த்திகள் காலம்
  4. ஆரியவரசர் இறுதிக்காலம்
  5. போர்த்துக்கேயர் ஆட்சிக்காலம்
  6. ஒல்லாந்தர் காலம்

இவற்றுள் முதல் மூன்று அதிகரங்கள் ஆசிரியரது ஆங்கில ஆய்வு நூலின் முடிவுகளைத் தழுவியவை. நான்காம், ஐந்தாம் அதிகாரங்கள் சுவாமி ஞானப்பிரகாசரின் ஆய்வுகளைத் தழுவியவையாயினும், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட போர்த்துக்கேயர் கால ஆவணங்களையும் ஆய்வு செய்து எழுதியிருப்பதாகவும் ஆசிரியர் தனது முன்னுரையில் தெளிவாக்கியுள்ளார். இதே போல ஆறாம் அதிகாரம் ஒல்லாந்தர் கால ஆவணங்களை ஆராய்ந்து இந்நூலுக்காக எழுதப்பட்டவை.[2] இவை தவிர, இந்நூலில் சொல்லப்பட்ட சில விடயங்களுக்கு விரிவான விளக்கங்கள் தேவைப்பட்டதனாலும், இவ்விடயங்கள் குறித்த பிற ஆய்வாளர்களின் கருத்துக்களை மறுக்க வேண்டி இருந்ததனாலும் இவற்றை உள்ளடக்கிய அநுபந்தம் ஒன்றும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்நூலை ஆக்குவதற்கு உதவிய உசாத்துணைகளாக 130க்கு மேற்பட்ட நூல்களின் பட்டியல் ஒன்றும் தரப்பட்டுள்ளது.

ஆசிரியரின் சில முன்மொழிவுகள்[தொகு]

வரலாற்றுக்கு முந்திய காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாடு ஒரு தனித் தீவாக இருந்தது என்றும் அக்காலத்தில் இத் தீவிலும் இலங்கையின் மேற்குப் பகுதியிலும், நாகர் எனப்படும் சாதியார் வசித்து வந்ததாகவும், அவர்களின் இராசதானி தற்போது கந்தரோடை எனப்படும் கதிரமலை என்றும் இந்நூலில் இராசநாயகம் கூறுகிறார்.[3] அக்காலத்தில் இலங்கையில் இயக்கர் என்னும் இன்னொரு சாதியினரும் வாழ்ந்தனர் என்பதும், இராமாயணத்தில் வரும் இராவணன் இயக்கர் குலத்தைச் சேர்ந்தவன் என்பதும் அவரது கருத்து. சிங்களவரின் முன்னோனான விசயன் கலிங்கத்தில் இருந்து இலங்கையில் இறங்கி முதலில் இயக்க இளவரசி ஒருத்தியை மணந்து இயக்க அரசைக் கைப்பற்றினான் என்றும், பின்னர் அவளை விலக்கிவிட்டுப் பாண்டிநாட்டு இளவரசியொருத்தியை மணந்தான் என்பதும் மகாவம்சத்தின் கூற்று. இது பொருந்தாது என்பதும், விசயன் யாழ்ப்பாணத்தில் அரசாண்ட நாகர்குல இளவரசியையே மணந்திருக்க வேண்டும் என்பதும் இராசநாயகத்தின் கருத்து.[4] இயக்கரும் நாகரும் ஈழு என்னும் மொழியைப் பேசிவந்தனர் எனவும், இச் சொல்லில் இருந்தே ஈழம் என்னும் சொல்லும் அதில் இருந்து சிங்களம், செரென்டிப், சிலோன் போன்ற சொற்கள் மருவின என்பதும்[5] இந்நூலின் முதல் அதிகாரத்தில் உள்ள சில கருத்துக்கள்.

நாகரின் வழிவந்தவர்கள் 8ஆம் நூற்றாண்டுவரை கதிரமலையில் இருந்து ஆண்டார்கள் என்றும் பின்னர் அவர்கள் வலிமை குன்றியபோது, யாழ்ப்பாணக் குடாநாட்டில், இன்று வல்லிபுரம் எனப்படும் சிங்கைநகரை ஆண்டவனாக இருக்கக்கூடிய கலிங்கனான உக்கிரசேனன் என்பவன் கதிரமலையைக் கைப்பற்றி முழுப் பகுதியையும் சிங்கைநகரில் இருந்து ஆண்டான் என்றும் இந்நூல் கூறுகிறது.[6] இச்சிங்கைநகர் வம்சத்தைச் சேர்ந்த கலிங்க மாகன் 1215 ஆம் ஆண்டு பொலநறுவையைக் கைப்பற்றி முழு இலங்கையையும் ஆண்டான் என்றும் இதனால், சிங்கைநகர் அரசர்களுள் முதன் முதலாகச் சக்கரவர்த்திப் பட்டம் பெற்று விஜய காலிங்கச் சக்கரவர்த்தி எனப் பெயர் பூண்டான் என்றும் இந்நூல் நிறுவ முயல்கிறது.[7]

பதிப்புகள்[தொகு]

இந்நூலின் முதற் பதிப்பு 1933 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது. இதன் பின்னர் ஏசியன் எடுகேஷனல் சர்வீஸ் (Asian Educational Services) 1886 ஆம் ஆண்டில் தனது முதல் மீளச்சுப் பதிப்பை புதுடில்லியில் வெளியிட்டது. தொடர்ந்து 1993, 1994, 1997, 1999 ஆகிய ஆண்டுகளிலும் இந்நூலை அந்நிறுவனம் மீளச்சுப் பதித்து வெளியிட்டுள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. இராசநாயகம், செ., 1999. அணிந்துரை, பக். x
  2. இராசநாயகம், செ., 1999. முன்னுரை பக். v
  3. இராசநாயகம், செ., 1999. பக். 3
  4. இராசநாயகம், செ., 1999. பக். 11
  5. இராசநாயகம், செ., 1999. பக். 11, 12
  6. இராசநாயகம், செ., 1999. பக். 28
  7. இராசநாயகம், செ., 1999. பக். 49

உசாத்துணைகள்[தொகு]

  • இராசநாயகம், செ., யாழ்ப்பாணச் சரித்திரம், ஏசியன் எடுகேஷனல் சர்வீஸ், புதுடில்லி, 1999.
  • Rasanayagam, C., Ancient Jaffna, Asian Educational Services, New Delhi, 1993.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]