திருத்தொண்டர் காப்பியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருத்தொண்டர் காப்பியம் என்னும் கிறித்தவக் காப்பியத்தை சூ. இன்னாசி என்னும் புலவர் படைத்துள்ளார். 2007இல் காவ்யா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட இக்காப்பியம் அருளாளர் தேவசகாயம் பிள்ளையின் வரலாற்றையும் அவர் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு தம் உயிரை பலியாக்கியதையும் எடுத்துரைக்கிறது.

காப்பியத் தலைவர் அருளாளர் தேவசகாயம் பிள்ளை[தொகு]

தேவசகாயம் பிள்ளை (Blessed Devasahayam Pillai) இன்றைய குமரி மாவட்டத்தின் நட்டாலம் கிராமத்தில் (முன்னாள் திருவிதாங்கூர் இராச்சியம்) 1712இல், ஏப்பிரல் 23ஆம் நாள் நாயர் குல இந்துக் குடும்பத்தில் பிறந்து, கத்தோலிக்க கிறித்தவ சமயத்தைத் தழுவி மறைச்சாட்சியாக உயிர்துறந்தார். அவரது இயற்பெயர் நீலகண்ட பிள்ளை. கத்தோலிக்க சபையில் திருமுழுக்குப் பெற்றபோது அவருக்கு "கடவுளின் கருணை" என்னும் பொருள்படும் "லாசர்" (Lazarus) என்னும் பெயர் வழங்கப்பட்டது. அதுவே தமிழில் "தேவசகாயம்" என்று வழங்கப்படுகிறது.

தம் மறை நம்பிக்கையில் சாவு வரை உறுதியாக இருந்து, துன்பங்கள் பலவற்றிற்கு இடையேயும் துணிவோடு வாழ்ந்த இவர் கத்தோலிக்க கிறித்தவர்களால் ஒரு மறைச்சாட்சியாக (martyr) கருதப்படுகின்றார். இவர் 1752ஆம் ஆண்டு சனவரி 14ஆம் நாள், ஆரல்வாய்மொழியில் உள்ள காற்றாடி மலை என்னும் இடத்தில் அன்றைய திருவிதாங்கூர் ஆட்சியாளர்களின் ஆணைப்படி சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவர் இறந்த இடத்திற்குச் சென்று மக்கள் இறைவேண்டல் நடத்தத் தொடங்கினார்கள். இவ்வாறு, அதிகாரப்பூர்வமாக "மறைச்சாட்சி" என்னும் பட்டம் அவருக்கு வழங்கப்படுவதற்கு முன்னரே பொதுமக்கள் பார்வையிலும் செயல்பாட்டிலும் அவர் மறைச்சாட்சியாகவே கருதப்பட்டார். அவரைக் கத்தோலிக்க திருச்சபை அதிகாரப்பூர்வமாக மறைச்சாட்சி என்றும் "முத்திப்பேறு பெற்றவர்" (அருளாளர் - Blessed) என்றும் 2012, திசம்பர் 2ஆம் நாள் பிரகடனம் செய்தது.

தேவசகாயம் பிள்ளையின் வரலாற்றை உரைநடையாகவும், நாட்டுப்புற இலக்கிய வடிவங்களான கும்மி, சிந்து, அம்மானை, தெருக்கூத்து, நாடகம் போன்ற ஆகிய வகைகளிலும் பலர் ஆக்கியுள்ளனர்.

"திருத்தொண்டர் காப்பியம்" என்னும் தலைப்பில் சூ. இன்னாசி தேவசகாயம் பிள்ளையைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு மரபுக் கவிதை நெறிபிறழாமல் விரிவான வகையில் ஆக்கியுள்ளார்.

நூலாசிரியர்[தொகு]

"திருத்தொண்டர் காப்பியம்" வடித்த புலவர் சூ. இன்னாசி என்பவர் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் முதுகலைத் தமிழ்த்துறை உயராய்வு மையத்தின் தலைவராகவும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் கிறித்தவத் தமிழ் இலக்கியத்துறைத் தலைவராகவும் பணியாற்றியவர். அகராதி, இலக்கணம், இலக்கியம், மொழியியல், திறனாய்வு, ஒப்பாய்வு போன்ற பல்துறைப் புலமை சான்ற அறிஞர்.

தமிழக அரசு அளித்த பரிசு[தொகு]

சூ. இன்னாசி எழுதிய "திருத்தொண்டர் காப்பியம்" எனும் சிறந்த இலக்கியப் படைப்பு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மரபுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

முழுமையான காப்பியம்[தொகு]

தமிழ்க் காப்பியத்திற்கான எல்லாக் கூறுகளையும் முழுமையாகக் கொண்டு விளங்குகின்ற கிறித்தவக் காப்பியம் "திருத்தொண்டர் காப்பியம்" ஆகும். இதில் தன்னேரில்லாத் தலைவன் உண்டு, களவு, கற்பு, ஊடல், கூடல் போன்ற அக இலக்கிய மரபுகளும் உண்டு.

நூல் பிரிவுகள்[தொகு]

திருத்தொண்டர் காப்பியம் இளமைக் காண்டம், தலைமைக் காண்டம், பொறுமைக் காண்டம், இறைமைக் காண்டம் என்னும் நான்கு காண்டங்களைக் கொண்டது. ஒவ்வொரு காண்டமும் பத்துப் பத்து படலங்களைப் பெற்று நாற்பது படலங்களில் 4135 பாடல்களைக் கொண்டதாய் இக்காப்பியம் அமைந்துள்ளது.

மரபுக் கூறுகளும் எளிய நடையும்[தொகு]

இக்காப்பியத்தை சூ. இன்னாசி தமிழ் இலக்கிய மரபுக்கு ஏற்ப, மரபு மாறாத யாப்பு வடிவத்தில் ஆக்கியுள்ளார். ஆயினும், மொழி நடை எளிமையாய் உள்ளது. இயற்கை வருணனைகள், அகத் துறைச் செய்திகள், அணி நலன்கள், உவமை, உருவகம், பழமொழி, மரபுத் தொடர்கள், திருக்குறள், தமிழ் இலக்கியச் செய்திகள், விவிலிய வரலாறுகள், கருத்துகள் யாவும் இடம் பெறும் சங்கமமாக இக்காப்பியம் உள்ளது.

அவையடக்கம்[தொகு]

ஒரு சிறு குருவி மரத்தில் தொங்கும் மாபெரும் பலாப்பழத்தைத் தன் சிறு அலகால் தூக்கி தன் கூட்டிற்குள் கொண்டு செல்ல நினைக்கும் முயற்சி போன்றதே திருத்தொண்டர் காப்பியம் படைக்க முற்பட்டதும் என்று இவர் அவையடக்கமாகப் பாடுகிறார்:

குருவியதன் சிற்றலகால் பலவின் சுளையைக்
     குத்தித்தான் சுவைப்பதற்கு முயல வேண்டும்
குருவியதும் அதன்பழத்தை முழுது மாகக்
     கூட்டிற்கே கொண்டுசெல முயல லாமோ?
திருத்தொண்டர் திருச்சரிதை பலவின் பழமே
     திருத்தமுற எழுத எணும் யானோ குருவி
மருள்நீக்கி மயக்கறுப்பார் இருப்ப தாலே
     மனங்கொள்வர் எனஎண்ணிப் பாடி வைத்தேன்.

நாட்டுவளம், நகர்வளம்[தொகு]

நாட்டுவளத்தையும் நகர்வளத்தையும் காப்பியம் வருணிப்பது மரபு. திருத்தொண்டர் காப்பியத்தில் காப்பியத் தலைவன் பிறந்து வளர்ந்த நாஞ்சில் நாட்டு வளம் இவ்வாறு வருணிக்கப்படுகிறது:

திருவார்ந்த நாஞ்சில் நிலம் எந்த நாளும்
     தீங்கனியும் பூம்பொழிலும் பிணங்கித் தோன்றும்
திருவளர்காண் மலைமுகட்டில் தந்தக் குன்று
     தன்பிடியோடு அணைவதற்கு நேரம் பார்க்கும்
கருநிறமாம் மேகமதும் மின்னல் கண்ணால்
     கடல்வளத்தை வளைப்பதற்கு விரைந்து செல்லும்
மருதநில விளைபொருள்கள் மலையில் தோன்றும்
     மலைவளமோ நெய்தலிலே மயங்கித் தோன்றும்.

கம்பன் இலங்கையை வருணிக்கும்போது,

நித்த நியமத் தொழிலராய் நிறையும் ஞானத்து
உத்தமர் உறங்கினர் யோகியர் துயின்றார்
மத்த மதவெங்களிறு உறங்கின மயங்கும்
பித்தரும் உறங்கினர் இனிப்பிரிது என்னாம்

என்று கூறுவதைப் போல, இன்னாசியும்

கூட்டுக்குள் புழுவுறங்கும் புள்ளுறங்கும்
     கூட்டுத்தேன் சேர்ஈக்கள் மலர்உறங்கும்
பாட்டுக்குள் பண்ணுறங்கும் பொருளுறங்கும்
     பைந்தமிழில் இசையுறங்கும் கூத்து உறங்கும்
நாட்டுக்குள் அறம்உறங்கும் முறையு றங்கும்
     நாட்டிலுளோர் கடன்பிழையா நடப்பதாலே

என்று பாடுகிறார்.

மலைமுகட்டிலிருந்து ஓடிவரும் அருவிக்காட்சியைக் காண்கின்ற புலவர் உள்ளத்தில் கீழ்வரும் சிந்தனைகள் எழுகின்றன:

அடர்காட்டின் நடுவினிலே செல்லும் ஒற்றை
     அடிப்பாதை தானோஇவ் அருவித் தோற்றம்?
படர்கூந்தல் நடுவினிலே தலையின் பின்னப்
     பாதியாக விலக்கிவிடும் வகிடுதானோ?
மடல்தாழைப் பச்சைக்கிடைப் பூத்துநிற்கும்
     மணம்வீசும் தாழம்பூ தானோ? இல்லை
கடல்நிலத்தின் நடுவே வெண்மையாகக்
     கரைசேரும் நுரைதானோ அருவித் தோற்றம்

தலைவன், தலைவி உரையாடலில் புதுமை[தொகு]

இளங்கோவடிகள் தாம் படைத்த சிலப்பதிகாரத்தில் கண்ணகியைக் கோவலன், மலையிடைப் பிறவா மணியே, அலையிடைப் பிறவா அமுதே, யாழிடைப் பிறவா இசையே என்றெல்லாம் கூறித் தன்னிலை மயங்குவான். அதுபோல் திருத்தொண்டர் காப்பியத்தில்,

பருவத்தில் முதிர்கனியே நீதான் என்றான்
     பலவினது நறுஞ்சுளையே நீயே என்றாள்
பெருக்கெடுக்கும் உணர்வலையே நீதான் என்றான்
     பேரின்ப நீர்த்தேக்கம் நீயே என்றாள்
கருவத்தில் எனைவீழ்ப்பாய் நீதான் என்றான்
     காமத்தின் நுனிக்கொம்பே நீதான் என்றாள்
உருக்கி வார்த்த பொற்குடமே நீதான் என்றான்
     உருகுகின்ற பனிமலையே நீயே என்றாள்

என்று ஆசிரியர் பாடுகிறார்.

இங்கே தலைவன் தலைவியையும், தலைவி தலைவனையும் கூடல் மொழிகளாகப் புகழ்ந்துரைப்பதாக ஆசிரியர் நவில்கிறார். சங்க இலக்கியத் தலைவி கூடல் உவகையில் தலைவனை நேரடியாகப் புகழ்வது மரபாகப் பாடப்பெறவில்லை. ஆயினும் திருத்தொண்டர் காப்பியத் தலைவனும் தலைவியும் பதினெட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவர்கள் ஆதலின் கால மாறுபாட்டிற்கு ஏற்ப ஆசிரியர் மரபு மாற்றத்தை மேற்கொண்டிருப்பதாகக் கொள்ளமுடிகிறது.

அரசியல் மற்றும் சமூகச் சீர்கேடு[தொகு]

இன்றைய அரசியல் மற்றும் சமூகப் போக்குகளில் நிலவும் சீர்கேடுகளை அடையாளம் காணும் கவிஞர், அச்சீர்கேடுகள் இல்லாத புத்துலகம் ஒன்றைப் படைக்க விரும்புகிறார்:

கொடிகள் இல்லை கட்சிகள் இல்லை
     கொள்கைக்காக விளம்பரம் இல்லை
வெடிகள் இல்லை வெறித்தனம் இல்லை
     வெற்றுப் பேச்சு வீரரும் இல்லை
தடிகள் இல்லை அடியாள் இல்லை
     தாக்கிக் கொல்லும் கலவரம் இல்லை
மடியால் துயிலும் மனிதரும் இல்லை
     மாமுனி பெயரால் போலிகள் இல்லை.

அறிவியல் செய்திகள்[தொகு]

திருத்தொண்டர் காப்பியத்தைப் பாடிய நூலாசிரியர் ஆங்காங்கே அறிவியல் செய்திகளையும் இணைத்துச் செல்கிறார். கதிரவன் எரிகின்ற தீப்பிழம்பு ஆதலால் தானாகவே வெப்பத்தையும் ஒளியையும் உமிழ்கின்றது. ஆனால் நிலவோ கதிரவனின் செயலால் தன் மீது படுகின்ற ஒளியை எதிரொளித்து மண்ணுலக்குக் குளிர்ச்சியான ஒளியை இரவில் வழங்குகிறது. இதை,

கடன்வாங்கிக் கடன் கொடுத்தார் கெட்டார் என்பார்'
     கடன்வாங்கிக் கொடைகொடுத்து மகிழ்வார் உண்டோ?
கடனென்றால் வெப்பமாகும் கொடையோ என்றால்
     களிப்பருளும் குளிர்ச்சியாகும் கதிரோன் தந்த
சுடரொளிதான் வெப்பத்தைக் கடனாய் வாங்கிச்
     சுகமளிக்கும் குளிர்ச்சியாகக் கொடையைத் தந்து
தடம்பதித்த கொடையாளர் இந்த உலகில்
     தாமென்ற மகிழ்ச்சியுறும் நிலவின் தோற்றம்

என்று கவிஞர் வருணிக்கின்றார். மேலும்,

தீயுமிழும் கதிரொளியைத் தன்னுள் வாங்கித்
     திருப்பியதைக் குளிரொளியாய் உலகிற்கீந்து
தாயுளம்போல் தரணிக்கே இன்பம் நல்கும்
     தண்ணிலவிற்கு ஈடேதான் உலகில் உண்டோ?

என்னும் வரிகளில் ஈகையின் பெருமை அறிவியல் உருவகத்தின் வழி வெளிப்படுகிறது.

காப்பிய இலக்கணத்தை முழுமையாகத் தழுவி ஒரு கிறித்தவ இலக்கியத்தை உருவாக்கிய பெருமை சூ. இன்னாசியைச் சாரும்.

ஆதாரம்[தொகு]

இர. ஆரோக்கியசாமி, கிறித்தவ இலக்கிய வரலாறு, கிறித்தவ ஆய்வு மையம், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, 2010. (நூல் கிடைக்குமிடம்: பூரண ரீத்தா பதிப்பகம், 1130 பழனியப்பா நகர், 3-வது தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் - 613006).