வாதிகேசரி - அழகிய மணவாளப் பெருமாள் ஜீயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாதிகேசரி - அழகிய மணவாளப் பெருமாள் ஜீயர் [1] 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பெரியவாச்சான் பிள்ளையிடம் தளிகை செய்பவராய் [2] திருவரங்கத்தில் வாழ்ந்தவர். மணவாளர் என்பது இவரது இயற்பெயர். வரதராசர் எனவும் பிற்காலத்தில் இவரைப் போற்றினர். 'சொட்டை அழகிய மணவாள முனி' என்பது இவரது ஊர்ப்பெயருடன் கூடிய பெயர். இவர் பரசமயவாதிகளை வென்றதால் 'வாதிகேசரி' என்னும் அடைமொழியுடன் இவரைக் குறிப்பிடலாயினர்.

வரலாற்றுச் செய்தி[தொகு]

சமையல் வேலை செய்துகொண்டிருந்தபோது இவர் சற்றும் கல்வி அறிவு இல்லாதவராக இருந்தார். பெரியவாசான் பிள்ளையின் மாணாக்கர்கள் படித்துக்கொண்டிருந்தனர். ஒருநாள் இவர் அவர்களைப் பார்த்து "என்ன படிக்கிறீர்கள்" என்று கேட்டார். "முசலகிசலயம் படிக்கிறோம்" என ஒருவர் கூறி இவரை ஏளனம் செய்தார்.[3] ஒருநாள் பெரியவாச்சான் பிள்ளை தம் மாணாக்கர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என இவரை வினவினார். "அவர்கள் முசலகிசலயம் படித்துக்கொண்டிருக்கிறார்கள்" என்று இவர் விடை பகர்ந்தார்.

பெரியவாச்சான் பிள்ளை [4] இவரது நிலைமைக்கு இரங்கினார். தமிழ், வடமொழி ஆகிய இரண்டையும் இவருக்குக் கற்றுத்தந்தார். எழுத்து முதல் தொடங்கிக் 'காவிய நாடகாலங்கார சப்த தர்க்க பூர்வோத்தர மீமாம்சம்' ஆதி எல்லாச் சாத்திரங்களையும் சொல்லிக்கொடுத்தார். அப்போது இந்த அழகிய மணவாளப் பெருமாளுக்கு அகவை 32. எனினும் நன்கு கற்றார். கலைவல்லுநர் ஆனார். 'முசலகிசலயம்' என்னும் நூலை வடமொழியில் எழுதித் தம்மை ஏளனம் செய்த மாணாக்கரிடம் கொடுத்து அவரை நாணும்படி செய்தார்.

நூல்கள்[தொகு]

வாதிகேசரி - அழகிய மணவாளப் பெருமாள் ஜீயர் எழுதிய நூல்கள:

தமிழ் நூல்
வடமொழி நூல்கள்

முசலகிசலயம்
தத்துவ தீபம்
தீபப் பிரகாசிகை
தத்துவ நிரூபணம்
தத்துவ சங்கிரகம்
தத்துவ பூஷணம்
ஞானாவரணம் முதலானவை

மணிப்பிரவாள நடை நூல்

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 232. 
  2. சமையல் செய்பவராய்
  3. முசலம் என்றால் உலக்கை. கிசலம் என்றால் கொழுந்து. உலக்கைக் கொழுந்து படிக்கிறோம் என்றனர். இவரை உலக்கைக் கொழுந்து என ஏளனம் செய்தனர்.
  4. அபயப்பிரதராசர் - அபயப்-பிரத-ராசர் - என்பது பெரியவாச்சான் பிள்ளையின் இளமைப் பெயர்
  5. செந்தமிழ் தொகுதி 4, பக்கம் 691