ஓடப்பாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரையேறும் ஓடம்

ஓடத்தைத் தள்ளுகிறவர்கள், தம்முடைய வேலையில் அலுப்புத் தோன்றாமலிருக்கும் பொருட்டு, பாடிக்கொண்டே தள்ளுவது வழக்கம். ஓடத்தை கரையருகே இழுத்துச் செல்லும் போதும் பாடுவது உண்டு. இப்பாட்டுக்களையே, ஓடப்பாட்டு என்று அழைக்கிறோம். இவை நாடோடிப் பாடல்களைச் சேர்ந்தவை ஆகும். இவற்றில் ஒவ்வொரு நிறுத்தத்திலும் 'ஏலேலோ, ஐலசா' என்ற சொற்கள் மாறிமாறி வரும். மேலும், வேறுபட்ட சொல் அமைப்புகளும் வேறுபட்டும் பாட்டுகள் பாடப்படுகின்றன. எடுத்துக்காட்டு வருமாறு;-

  • மரத்தை நம்பி 'ஏலேலோ', கிளை இருக்கு 'ஐலசா'...
  • ஏலேலங்கிடி லேலம், ஏலேலக் கிளி லல்ல...

பெயர் மரபு[தொகு]

கர்ண பரம்பரை கதை[தொகு]

கப்பற்பாட்டு, ஓடப்பாட்டு என வரும் பாடல்களில் 'ஏலேலோ' என்று முடிவது பொது இலக்கணம் ஆகும். இந்தத் தொடர் உண்டானதற்குக் காரணம் ஒன்று, கர்ணபரம்பரையாக(காலங்காலமாக/நீண்ட நாட்களாக) ஒரு கதை வழங்கி வருகிறது. அது யாதெனில், மயிலாப்பூரில் கப்பல் வாணிகராகவும், பெருஞ்செல்வந்தராகவும் விளங்கிய ஏலேலசிங்கர், திருவள்ளுவருடைய நண்பராக இருந்தார். அவர் ஏழைகளுக்கு வேண்டியவற்றை எல்லாம் வாரி வழங்குபவர். கப்பல் தொழிலாளிகளுக்கும், ஓடக்காரர்களுக்கும் தங்கள் தொழிலை ஆற்றும் போது, ஏலேலசிங்கர் பெயரைச் சொல்லி வாழ்த்துவதற்கு 'ஏலேல' என்று முடியும்படி பாடுவார்களாம். அதுமுதல் 'ஏலேலோ' என்பது ஓடப்பாட்டின் வாய்பாடாக அமைந்து விட்டதாம்.

இலக்கணமரபு[தொகு]

எலா, எல்லா, ஏல என்பவை தோழியையும், தோழனையும் அழைக்கப் பயன்படுத்தப்பட்ட பழையச்சொற்கள் ஆகும். தன்தோழனைப் பார்த்து பாடுகிறவன், பாட்டின் இடையிடையே ஏல என்று சொல்ல, அது இரட்டித்து, 'ஏலேலோ' என்று ஆகி வந்திருக்கலாம் என்று கருத்தும் உண்டு. ஏலஏல என்னும் தொடர் ஏலேல என்று ஆகிவிடும். இது தமிழ் மரபுக்கு பொருத்தமானது என்று கி.வா.ஜ. போன்ற எழுத்தாளர்கள் உரைக்கின்றனர்.

பாடல் அமைப்பு[தொகு]

  • இப்படி வரும் பாட்டுகள் அனைத்திலும் 'ஏலேல' என்னும் சொல் கலந்திருப்பதினால், இந்தப்பாடல்களை ஏலேலப்பாட்டு அல்லது ஏலப்பாட்டு என்றும் சொல்வதுண்டு. இவை கண்ணிகளாக இருக்கும்.
  • துண்டு துண்டான கருத்துக்கள் அங்கங்கே அற்றற்று வரும் பாடல்கள் ஒரு வகை ஆகும்.
  • பல அடிகள் சேர்ந்து ஒரு கருத்தைக் குறிக்கும் பாடல்கள் மற்றொரு வகை ஆகும்.
  • இரண்டாவது வகையை, ஓடப்பாட்டு என்றும், கப்பற்பாட்டு என்றும் சொல்வார்கள்.இவ்வகைப்பாடல்களில், தொடர்ந்து சில அடிகள் வந்து, பின்பு சில அடிகள் முடுக்காக நின்று, இறுதி 'ஏலேலோ ஏலலிலோ' என்றும் முடியும். இத்தகையப் பாடல்களைப் பெரும்பாலும், புன்னாகவராளியில் பாடுவார்கள்.
  • நாடோடிப் பாடல்களில் கப்பற்பாட்டுப் பல உண்டு. கப்பற்பாட்டை அடியொற்றிப் புலவர்கள் சிலர் நீண்டப்பாடல்களைப் பாடியிருக்கிறார்கள்.
  • கல்லூரி ஓடம், இராசகோபாலசுவாமி ஓடம், கைத்தறிஓடம் போன்ற பாடல்கள், தற்பொழுது தமிழகத்தில் பாடப்படுகின்றன.
  • ஓடப்பாட்டு, இசையியலின்படி, முதல் நடையில் தான் அமைந்திருக்கும். முதல் நடையில் ஓரெழுத்தாக பாடுவதையே, முதல்நடை என்பர்.

ஓடப்பாடல் கீற்று[தொகு]

...
வாடதம்பி வழளஞ்சிழுடா!
ஓடியிழு உழுவமீனுக்கு
பாடியிழு பாறைமீனுக்கு
ஏலேலோ...ஏலியலோ...

கூடியிழு கூடுதல் மீனுக்கு
அண்ணாந்துபார் பாயுது மீனு
அலைகடந்து ஓடுது பார்
வாடாதம்பி சேர்ந்திழுடா!
ஏலேலோ...ஏலியலோ...

ஊடகங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓடப்பாட்டு&oldid=3201434" இலிருந்து மீள்விக்கப்பட்டது