நெற்குன்றவாணர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நெற்குன்றங்கிழார் அல்லது நெற்குன்றவாணர் [1] (இயற்பெயர் : கருவுணாயகர்) என்பவர் குலோத்துங்க சோழன், விக்கிரம சோழன் ஆகியோர் காலத்தில் சோழர் அரசில் அதிகாரியாக இருந்தவர் ஆவார். இவர் சோழ அரசில் திருமந்திர ஓலை நாயகமாக இருந்தார். இவர் ஒரு வள்ளலும் ஆவார். களப்பாளர் மரபில் தோன்றிய சிற்றரசர். நெற்குன்றங்கிழார், களப்பாளராயர், களப்பாளராசர் [2] என்னும் பெயர்களாலும் இவர் குறிப்பிடப்படுகிறார். முதல் குலோத்துங்க சோழனுக்குத் திறை செலுத்திவந்தவர். திருப்புகலூர் அந்தாதி என்னும் நூலைப் பாடிய புலவர். இவரது வரலாற்றில் வரும் நிகழ்வுகளைத் தொண்டைமண்டல சதகம் குறிப்பிடுகிறது.

இவர் தொண்டை மண்டலத்தில் புலியூர்க்கோட்டத்துப் போரூர் நாட்டிலுள்ள நெற்குன்றம் என்ற ஊரில் வாழ்ந்தவர். நெற் குன்றம் என்ற ஊரைக் காணியாகக் கொண்டவராதலால் நெற்குன்றங்கிழார் என அழைக்கபட்டார் பெற்றார்.[3]

செவிவழிச் செய்தி[தொகு]

நெற்குன்ற வாணர் திருப்புகலூர் அந்தாதி பாடியமை பற்றி ஒரு கதை வழங்குகின்றது. அக்கதை வருமாறு :

நாடு வறண்டுபோயிருந்த ஒரு சமயம் இவரால் திறை செலுத்த இயலவில்லை. சோழன் இவரைச் சிறையிலிருமாறு ஆணையிட்டான். காவலர் வந்தனர். புலவர் இறைவனை வணங்கிவிட்டு வருவதாகத் திருப்புகலூர் கோயிலுக்குள் சென்றார். அங்கிருந்த பிள்ளையாரை வழிபட்டு ஒரு பாடலைப் பாடினார்.[4] அக் கோயிலிலிருந்த புலமை மிக்க தளிப்பெண் [5] ஒருத்தி "இப்பாடல் ஓர் அந்தாதியின் காப்புச் செய்யுளாக அமையலாமே" என்றாள். கேட்ட புலவர் "பாடல் அந்தாதிக்குக் காப்பு ஆனால் அரசு இறைக்குப் பொருள் ஆகுமா" என்றார். இதனைக் கேட்ட தளிப்பெண் நெற்குன்றவாணரின் நிலைமையை அறிந்துகொண்டு சோழனுக்குச் சேரவேண்டிய திறையைத் தானே செலுத்திப் புலவரை விடுவித்தார். பின்னர் இந்த வாணர் "பூக்கமலம்" எனத் தொடங்கி திருப்புகலூர் அந்தாதி பாடினார்.

அம்பிகாளிக்கு விலையானது[தொகு]

புலவர் புராணம் பாடிய தண்டபாணி தேசிகர் இந்த நெற்குன்றவாணரின் புராணத்தை 30 பாடல்களில் பாடியிருக்கிறார். இவர் குறிப்பிடும் ஒரு செய்தி. வாணர்மீது பொறாமை கொண்ட அம்பிகாளி என்னும் கயவன் ஒருவன் "ஒரு நாளேனும் உன்னை என் அடிமை ஆக்குகிறேன்" என்றானாம். ஒருநாள் ஒரு புலவர் வாணரிடம் வந்து வாணரைப் போற்றிப் பாடானாராம். புலவருக்குத் தர வாணரிடம் பொருள் இல்லை. வாணர் தன்னை அம்பிகாளியிடம் விற்றுப் புலவர்க்குப் பரிசில் வழங்கினார். பின் வாணர் மனைவி வாணருக்கு உணவிட்டபோது அவர் உணவு கொள்ள மறுத்து, "அம்பிகாளிக்கு இன்று நான் விலை ஆனேன்" என்றாராம். பின் இருவரும் தொண்டை நாட்டை விட்டு அகன்று சோழநாடு சென்று அங்குள்ள திருப்புகலூர் இறைவன்மீது அந்தாதி பாடினாராம். இதனை அறிந்த சோழன் நெற்குன்றவாணரைத் தன் அவைக்களப் புலவராக வைத்துக்கொண்டானாம்.

ஒட்டக்கூத்தரைத் திருத்தியது[தொகு]

புலமை இல்லாத இளம்புலவர்களின் காதை ஒட்டக்கூத்தர் அறுத்த கதை உண்டு. நெற்குன்றவாணர் ஒரு பாடல் பாடி ஒட்டக்கூத்தரைத் திருத்தியிருக்கிறார்.[6]

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1973, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 250. 
  2. திருப்புகலூர்க் கோயில் முதலாம் குலோத்துங்கன் கல்வெட்டு
  3. வேங்கடராமையா, சோழர் கால அரசியல் தலைவர்கள் நூல், பக்கம் 97-103, பதிப்பு பிப்ரவரி, 1977 கட்டுரை, நெற்குன்றங்கிழார்
  4. உரைசெய் மறைக்கும் தலை தெரியா ஒரு கொபை என்றே
    பரசுபவர்க்குப் பெருநிதி ஊக்கும் பழனமெல்லாம்
    திரை செய் கடல் துறைச் சங்கம் உலாவும் திருப்புகலூர்
    அரசினிடத்து மகிழ் வஞ்சி ஈன்ற ஓர் அந்தி நின்றே

    (கட்டளைக் கலித்துறைப் பாடல் பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது.
  5. கோயில் பணிப்பெண்
  6. நெற்குன்றவாணர் பாடல்
    கோக் கண்டு மன்னர் குரைகடல் புக்கிலர், கோ கனகப்
    பூக் கண்டு கொட்டியும் பூவாது ஒழிந்தில, பூவில் விண்ணோர்
    காக் கண்ட செங்கைக் கவிச்சக்கரவர்த்தி நின் கட்டுரையாம்
    பாக் கண்டு ஒளிப்பர்களோ தமிழ் பாடிய பாவலரே

    (கட்டளைக் கலித்துறையாலான இந்தப் பாடல் பொருள் விளங்குமாறு சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெற்குன்றவாணர்&oldid=3718410" இலிருந்து மீள்விக்கப்பட்டது