விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஜூன் 16, 2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீனப் பெருஞ் சுவர் (நேரடிக் கருத்து: "நீண்ட நகர் (கோட்டை)") என்பது, ஆறாம் நூற்றாண்டிலிருந்து மங்கோலியாவிலிருந்தும், மஞ்சூரியாவிலிருந்தும் வந்த 'சீன வரலாற்றில் சியோங்னு'களின் படையெடுப்புகளிலிருந்து சீனப் பேரரசைக் காப்பதற்காக அதன் வடக்கு எல்லையில் கட்டப்பட்ட அரண் ஆகும். பல்வேறு காலப்பகுதிகளில், கல்லாலும் மண்ணாலும், பல பகுதிகளாகக் கட்டப்பட்டுப் பேணப்பட்டு வந்த இச்சுவரின் முக்கிய நோக்கம் ஆட்கள் நுழைவதைத் தடுப்பது அன்று; எதிரிகள் குதிரைகளைக் கொண்டுவராமல் தடுப்பதே இதன் நோக்கம் ஆகும். பெருஞ்சுவர் என்று பெயரிட்டு அழைக்கப்பட்ட பல சுவர்கள் காலத்துக்குக் காலம் கட்டப்பட்டிருந்தாலும், கிமு 220-200 காலப்பகுதியில், சீனப் பேரரசர் சின் சி ஹுவாங்கினால் கட்டப்பட்ட சுவரே மிகப் பெயர் பெற்றது ஆகும். மிங் வம்சக் காலத்தில், இதன் உச்சநிலைப் பயன்பாட்டின்போது இச் சுவர்ப்பகுதியில் 10 இலட்சம் படையினர் வரை காவல் கடமையில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது. பல நூற்றாண்டுகளாக இடம் பெற்ற இச் சுவரின் கட்டுமானப் பணிகளின்போது 20 தொடக்கம் 30 இலட்சம் மக்கள் இறந்திருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது. மேலும்...


ஜோசப் லிஸ்டர் (5 ஏப்ரல் 1827 – 10 பிப்ரவரி 1912) அறுவை சிகிச்சையில் நோய் நுண்மத்தடை முறைகளைப் பயன்படுத்துவதைக் கண்டு பிடித்த பிரித்தானிய அறுவை சிகிச்சை வல்லுநர் ஆவார். விக்டோரியா அரசியாரின் சொந்த மருத்துவராகப் பணிபுரிந்தவர். அறுவை சிகிச்சைக்காக பயன் படுத்தும் மருத்துவக் கருவிகளை கொதிக்க வைப்பதன் மூலம் நோய் நுண்மம்ங்களை ஒழிக்க முடியும் எனக் கண்டறிந்தவர். தற்போது 'பினாயில்' என்றழைக்கப்படும் கார்போலிக் அமிலத்தினால் காயங்களில் உள்ள நோய்க் கிருமிகளைத் தடை செய்ய முடியும் எனவும் கருவிகளை சுத்திகரிக்க முடியும் எனவும் கண்டறிந்த அறிவியலாளர் ஆவார். லிஸ்டர் இங்கிலாந்தில் உள்ள அப்ட்டன் என்னும் ஊரில் 1827 ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ஆம் நாள் பிறந்தார். தந்தை ஜோசப் ஜாக்சன் லிஸ்டர். இவர் நவீன உருப்பெருக்கியை உருவாக்கியவர். தாயார் இசபெல்லா. ஜோசப் லிஸ்டர் லண்டனிலுள்ள பல்கலைக் கழகக் கல்லூரியில் கல்வி பயின்றார். மிகச் சிறந்த மாணவராகத் திகழ்ந்த இவர் 1852 ஆம் ஆண்டில் மருத்துவத்தில் பட்டம் பெற்றார். 'கிளாஸ்கோ தேசிய மருத்துவ மனையில்' 1861 ஆம் ஆண்டில் இவர் ஒரு அறுவை மருத்துவராகச் சேர்ந்தார். இந்தப் பணிக் காலத்தின் போது தான் நோய்நுண்மத் தடை அறுவை சிகிச்சை முறையை இவர் கண்டு பிடித்தார்.