புவா பாலா கிராமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புவா பாலா கிராமம்
புவா பாலா கிராமம் is located in மலேசியா மேற்கு
புவா பாலா கிராமம்
புவா பாலா கிராமம்
ஆள்கூறுகள்: 5°21′0″N 100°19′0″E / 5.35000°N 100.31667°E / 5.35000; 100.31667
நாடு மலேசியா
மாநிலம் பினாங்கு
கிராமத் தோற்றம்1812
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
அனைத்துலக முன்னொட்டுக் குறி+6044 (தரைவழித் தொடர்பு)

புவா பாலா கிராமம் அல்லது கம்போங் புவா பாலா என்பது (மலாய்: Kampung Buah Pala; ஆங்கிலம்: High Chaparral; சீனம்: 布亚帕拉) மலேசியா, பினாங்கு மாநிலத்தில், குளுகோர் பகுதியில் ஒரு கிராமம் ஆகும்.[1] தமிழர்கள் நிறைந்த ஒரு குடியிருப்புப் பகுதியாக இருந்தது.

1999-ஆம் ஆண்டிற்கு முன்னர் அந்தக் கிராமத்தில் 45 இந்தியர்க் குடும்பங்களைச் சார்ந்தவர்கள் வாழ்ந்தார்கள். சாதாரண உடலுழைப்பு வேலைகளிலும், மாடு கன்றுகளை வைத்துப் பிழைப்பு நடத்தி வந்தனர். பினாங்கு மாநிலத்தின் உயர் மேம்பாட்டுத் திட்டத்திற்காக கம்போங் புவா பாலா கிராமம் விற்கப்பட்டது. வரலாற்றுப் பூர்வமான அந்தக் கிராமம் பின்னர் சன்னம் சன்னமாக உடைக்கப் பட்டது.

வரலாறு[தொகு]

மலாய் மொழியில் புவா பாலா என்பது ஜாதிக்காயைக் குறிக்கும்.[2] இந்த ஜாதிக்காய் பினாங்கின் பிரபல உணவுப் பொருள் ஆகும்.

இந்தக் காயைப் பல வடிவங்களில் ஒரு நொறுங்குத் தீனியாக விற்கிறார்கள். உலர வைத்து உப்பில் ஊறவைத்து பல வகையான வண்ணப் பொட்டலங்களில் விற்கறு வருிறார்கள். பினாங்குத் தீவிற்குச் சுற்றுலா வரும் பலரும் அவற்றை வாங்கிப் போவார்கள்.

ஹாய் செப்பரல்[தொகு]

கம்போங் புவா பாலாவிற்கு ஹாய் செப்பரல் எனும் மற்றொரு பெயரும் உண்டு. 1960-ஆம் ஆண்டுகளில் ஹாய் செப்பரல் (ஆங்கில மொழி: High Chaparral) எனும் தொலைக்காட்சித் தொடர் மலேசியர்களிடையே மிகப் பிரபலமான நிகழ்ச்சியாக விளங்கியது. அந்தக் கறுப்பு வெள்ளைத் தொடரின் தாக்கத்தினால், புவா பாலா கிராமத்திற்கு ஹாய் செப்பரல் எனும் அடைமொழிப் பெயர் கிடைத்தது.

இந்தப் புவா பாலா கிராமத்தில் இப்போது ஜாதிக்காய் விளைவது இல்லை. புவா பாலா எனும் பெயர் மட்டுமே மிஞ்சி இருக்கிறது. பினாங்கு வாழ் மக்களுக்கே முன்பு அதிகம் தெரிந்திராத இந்தக் கிராமம், அண்மையில் மலேசியாவில் மட்டும் அல்ல உலகச் செய்திகளிலும் அதிகம் பேசப்பட்டது. இந்தக் கிராமம் மலேசியாவில் இந்தியர்களின் வாழ்க்கை நிலைமைக்கு ஒரு கேள்விக் குறியாக ஆகிவிட்டதுதான் அதற்குக் காரணமாக அமைகின்றது.[3]

தமிழர்களின் பாரம்பரியத்தைப் பறைச்சாற்றிய கிராமம்[தொகு]

புவா பாலா கிராமம், பினாங்கு மாநிலத்தில் தமிழர்களின் பாரம்பரியத்தைக் கடந்த 200 ஆண்டுகளாக பறைச்சாற்றி வந்த ஒரு பழம்பெரும் கிராமமாகக் கருதப்பட்டது.[4]

கம்போங் புவா பாலா நெருக்கடி மிக்க ஜார்ஜ் டவுன் நகரத்தின் தென்கிழக்கில் மிக விலையுள்ள நிலத்தில், நவீன குடியிருப்புக்களுக்கு மத்தியில் அமைந்து இருந்தது. அந்தக் கிராமத்தில் 45 இந்தியக் குடும்பங்களைச் சார்ந்தவர்கள் சாதாரண வேலைகளிலும், மாடு கன்றுகளை வைத்துப் பிழைப்பு நடத்தியும் வந்தனர்.

காலம் தவறிய எளிய கிராமம்[தொகு]

அங்கே இருந்தவை அனைத்தும் குடிசை வீடுகள்; மாட்டுத் தொழுவங்கள்; பால் விநியோகிப்பாளர்களின் தற்காலிக இருப்பிடங்கள். ஆண்டுக்கு ஒரு முறை அங்கே பொங்கல் விழா நடைபெறும். பினாங்குத் தீவின் மையத்தில், இப்படி காலம் தவறிப் போன ஓர் எளிய கிராமம்.

2000 ஆம் ஆண்டுகளில் உயர் மேம்பாட்டு திட்டத்திற்காக கம்போங் புவா பாலா கிராமம் விற்கப்பட்டது. வரலாற்றுப் பூர்வமான அந்த கிராமம் உடைபடக்கூடாது என்பதற்காக கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். அந்த இடம் இடிக்கப்பட வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவினால் கிராம மக்கள் கட்டாயமான நிலையில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.[5] இப்போது அந்த இடத்தில் இரட்டை அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

டேவிட் பிரவுன் நிலச்சுவான்தாரர்[தொகு]

1812 ஆம் ஆண்டு, டேவிட் பிரவுன் (ஆங்கில மொழி: David Brown) எனும் பிரித்தானியர் முதன்முதலாகக் குளுகோரில் குடியேறினார்[6] கம்போங் புவா பாலா அமைந்து இருக்கும் இடம் 200 ஆண்டுகளுக்கு முன் பிரித்தானிய காலனி ஆட்சியில் டேவிட் பிரவுன் எனும் நிலச்சுவான்தாரருக்குச் சொந்தமாக இருந்தது.

புக்கிட் குளுகோர் பகுதியில் அவருக்கு ஏராளமான நிலங்கள் சொந்தமாக இருந்தன. அந்த நிலங்களில் தேங்காய், ஜாதிக்காய் போன்றவற்றைப் பயிரிட்டிருந்தார். இந்தத் தோட்டங்களில் ஏராளமான இந்தியர்கள் குறிப்பாகத் தமிழர்கள், அவரின் கீழ் வேலை செய்து வந்தார்கள். இந்தப் பகுதி முழுவதும் பிரவுன் எஸ்டேட் என்றே வழங்கப்பட்டு வந்தது. இன்றும் அவருடைய பெயரில் குளுகோரில் ஓர் வீடமைப்பு பகுதியும், சில சாலைகளின் பெயர்களும் இருக்கின்றன.

அந்தக் காலத்தில், அதாவது 1800களில் புவா பாலா கிராமப்பகுதி அடர்ந்த காடுகளால் சூழ்ந்து இருந்தது. சாலை வசதிகள் எதுவும் இல்லை. பின்னர், 1930 களில் ஏறக்குறைய 60 - 70 இந்தியத் தொழிலாளர்கள், அங்கிருந்த தென்னந் தோப்புகளில் கள் பானம் இறக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.[7]

கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கை[தொகு]

கம்போங் புவா பாலா நெருக்கடி மிக்க ஜார்ஜ்டவுனின் தென்கிழக்குப் பகுதியில் மிக விலை உயர்ந்த நிலத்தில், நவீன குடியிருப்புக்களுக்கு மத்தியில் அமைந்து இருந்தது. கிராமத்தில் குடியிருந்த அனைவரும் சாதாரண வேலைகளிலும், மாடு கன்றுகள் வைத்துப் பிழைப்பு நடத்தி வந்தார்கள்.

குடிசை வீடுகள்; மாட்டுத் தொழுவங்கள்; பால் விநியோகிப்பாளர்களின் குடிசைகள். செல்வ வளமிக்க ஒரு பெருநகரில் இப்படி ஓர் எளிய கிராமம் வீடமைப்புத் திட்டங்களுக்காகக் கம்போங் புவா பாலா கிராமம் தேவைப்பட்டது. அங்கு வாழ்ந்த தமிழர்களை வெளியேற்ற பல்வகையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

2000 ஆம் ஆண்டுகளில் உயர் மேம்பாட்டு திட்டத்திற்காக கம்போங் புவா பாலா கிராமம் விற்கப்பட்டது. வரலாற்றுப் பூர்வமான அந்த கிராமம் உடைபடக்கூடாது என்பதற்காக கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். அந்த இடம் இடிக்கப்பட வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவினால் கிராம மக்கள் கட்டாயமான நிலையில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.[5]

வீடுகளைத் தகர்க்கும் பணி[தொகு]

2009 செப்டம்பர் 4 இல், கம்போங் புவா பாலா கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியது. அங்குள்ள வீடுகளைத் தகர்க்கும் பணியை மேம்பாட்டு நிறுவனமான நூஸ்மெட்ரோ தொடங்கியது. வீடுகளை இடித்துத் தள்ளுவதற்காக அமர்த்தப்பட்டிருந்த தகர்ப்புக் குழுவினர் காவல்துறையினரின் உதவியுடன் அந்த கிராமத்திற்குள் நுழைந்தனர். ஏற்கனவே, வீடுகளை இடிப்பதற்கு சம்மதித்த சில குடியிருப்பாளர்களின் வீடுகளை தகர்ப்புக் குழு ஊழியர்கள் இடித்துத் தள்ளினர்.

மொத்தம் 24 குடும்பங்கள் கம்போங் புவா பாலாவில் இருந்தன. அவற்றில் 15 குடும்பங்கள் வெவ்வேறு இடங்களில் பினாங்கு அரசாங்கம் வழங்கிய வீடுகளைப் பெற்றுக் கொண்டன. ஆனால் எஞ்சியிருந்த 9 குடும்பங்கள் மட்டும் அவர்களின் உரிமைக்காக போராடின. அவர்களின் நிலம் மீண்டும் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தன.

கைகலப்பில் 18 பேர் கைது[தொகு]

மூன்று வீடுகள் இடிக்கப்பட்டதும், கிராம மக்கள் தகர்ப்புப் பணியைத் தொடர விடாமல் தடுத்தனர். கிராம மக்களுக்கு ஆதரவாக ம.இ.கா இளையர் பிரிவினரும் போராட்டத்தில் இறங்கினர். ம.இ.கா ஆதரவாளர்களுடன் சேர்ந்து கொண்ட கம்போங் புவா பாலா கிராம மக்கள், வீடுகள் இடிக்கப்படுவதைத் தடுக்க முயன்றனர். தகர்ப்பு இயந்திரங்களைக் கிராமத்திற்குள் நுழைய விடாமல் தடுத்தனர்.

அதனால் குடியிருப்பாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டன. அப்போது நிகழ்ந்த கைகலப்பில் 18 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் நால்வர் பெண்கள் ஆகும். கம்போங் புவா பாலா கிராமப் பிரச்சினை பல மாதங்களாக நீடித்து வந்தது. அங்கிருந்த குடியிருப்பாளர்கள் வீடுகளைக் காலி செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், குடியிருப்பாளர்கள் அந்த உத்தரவை மறுத்து வந்தனர்.

சுமுகமான தீர்வு[தொகு]

கம்போங் புவா பாலா கிராமத்தை பினாங்கு மாநில அரசாங்கத்திடம் இருந்து விலைக்கு வாங்கிய நூஸ்மெட்ரோ மேம்பாட்டு நிறுவனம், அங்கு ஆடம்பர அடுக்குமாடி வீடுகளைக் கட்டியது. குடியிருப்பாளர்களுக்கு வேறு இடத்தில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்தது. அதற்கு குடியிருப்பாளர்கள் முதலில் இணக்கம் தெரிவிக்கவில்லை. இந்தக் கட்டத்தில் கிராம மக்கள் வெளியேறுவதற்கான காலக்கெடு 2009 ஆகஸ்ட் 31 இல் முடிவடைந்தது. அதன் பின்னர், இரு தரப்பினரும் ஒரு சுமுகமான நிலையில் பிரச்னையைத் தீர்த்துக் கொண்டனர்.[8]

இறுதியாக, இந்தப் பிரச்னையில் மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் தலையிட்டார். அதைத் தொடர்ந்து, பரிதவித்துக் கொண்டிருந்த ஒன்பது குடும்பங்களுக்கும் புதிய வீடுகள் வழங்கப்பட்டன. தற்காலிக நிலப்பட்டா வைத்திருந்தவர்களுக்கு வீடுகள் கொடுக்கப்பட்டன. அவர்களின் குடும்பங்களுக்கு மேலும் 9 வீடுகளும் வழங்கப்பட்டன.

2013 ஜனவரி மாதம், புவா பாலா கிராம மக்களுக்கு, நூஸ்மெட்ரோ மேம்பாட்டு நிறுவனம், பட்டர்வொர்த், தெலுக் ஆயேர் தாவாரில் இரட்டை மாடி வீடுகளைக் கட்டி கொடுத்தது. அவர்கள் 2013 ஜனவரி 19 இல் அங்கு தைப் பொங்கலைக் கொண்டாடினார்கள். அந்த நிகழ்ச்சிக்கு புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் கர்பால் சிங் தலைமை தாங்கினார். ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் நேதாஜி இராயரும் கலந்து கொண்டார்.

வெளி இணைப்புகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

மேற்கோள்[தொகு]

  1. "Unrecorded History of Kg.Buah Pala". Archived from the original on 2013-04-06. பார்க்கப்பட்ட நாள் 2013-05-26.
  2. Medical plant pala have spec tree, about 10 meters, the trunk erect, woody, dirty white, single leaf, oval shape, the base and tapering tip, shiny green color.
  3. கம்போங் புவா பாலா என்பது மலேசியாவின் பிரபல சுற்றுலாத் தளமான பினாங்குத் தீவின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள சிறிய கிராமம்.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. பினாங்கு புக்கிட் குளுகோரில் அமைந்துள்ள தமிழர்களின் பாரம்பரிய கிராமமான 'கம்போங் புவா பாலா' அல்லது 'தமிழ் ஐ செப்பரல்'.
  5. 5.0 5.1 புவா பாலா கிராமத்தின் பாரம்பரியம் புதைக்கப்பட்டுவிட்டது அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்டனர்.
  6. A memorial dedicated to David Brown — Penang’s largest landowner during British rule.[தொடர்பிழந்த இணைப்பு]
  7. "There were about 60-70 Indian labourers working as toddy collectors for the englishmen who owns the estate here". Archived from the original on 2013-04-06. பார்க்கப்பட்ட நாள் 2013-05-26.
  8. "புதியதொரு விடியலில் கம்போங் புவா பாலா". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-05-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புவா_பாலா_கிராமம்&oldid=3564336" இலிருந்து மீள்விக்கப்பட்டது