க. பாசுக்கரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கணபதி பாசுக்கரன்
வாழிடம்சென்னை, இந்தியா
தேசியம்இந்தியா
துறைதிண்மநிலை கொள்கையியல், வலுவான நுண்பிணைப்புண்ட பொருள்கள்
பணியிடங்கள்கணித அறிவியல் துறைகள் கல்விக்கழகம்(Institute of Mathematical Sciences)
பெரிமீட்டர் கல்விக்கழகம்(Perimeter Institute)
கல்வி கற்ற இடங்கள்இந்திய அறிவியல் கல்விக்கழகம்
தியாகராசர் பொறியியற் கல்லூரி
அறியப்படுவதுஒத்தியங்கு இணைதிறன் பிணைப்புக் கொள்கை(Resonating valence bond theory)
விருதுகள்சாந்தி சொரூப்பு பட்னாகர் விருது (1990)
கொள்கைய இயற்பியலுக்கான அனைத்துலக நடுவத்தின் பரிசு(ICTP Prize) (1983)

கணபதி பாசுக்கரன் (Ganapathy Baskaran) இந்தியாவின் கொள்கைய இயற்பியல் அறிவியலாளர்களுள் ஒருவர். இவர் திண்மநிலை இயற்பியலில் புகழ் பெற்றவர். குறிப்பாக சிலவகைப் பொருள்களில் எதிர்மின்னிகளைத் தனித்து இயங்கும் உருப்படிகளாகக் கருதாமல் அவற்றிடையே வலுவான ஒத்தியங்கும் நுண்பிணைப்பு கொண்ட தன்மை உடையதாகக் கருதப்படும் அமைப்புகள் பற்றிய ஆய்வில் முன்னணியில் இருப்பவர்களுள் ஒருவர்[1]. பாசுக்கரன் சென்னையில் இருக்கும் கணித அறிவியல கல்விக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கனடாவில் வாட்டர்லூவில் இருக்கும் கொள்கைய இயற்பியலுக்கான பெரிமீட்டர் கல்விக்கழகத்தில் பெருமைமிகு ஆய்வுத்தலைவராக இருக்கின்றார்[2]. 1990 இல் இவருக்கு இந்தியாவின் உயர் விருதாகிய சாந்தி சொரூப்பு பட்னாகர் விருது வழங்கப்பட்டது.

பாசுக்கரன் மதுரையில் உள்ள தியாகராசர் பொறியியற் கல்லூரியிலும் அமெரிக்கன் கல்லூரியிலும் தன் பல்கலைக்கழகப் பட்டக் கல்வியைப் பெற்றார். பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கல்விக்கழகத்தில் 1975 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார்[3].

1987-88 ஆகிய காலப்பகுதியில் பாசுக்கரன் பிரின்சிட்டன் பல்கலைக்கழகத்தில் நோபல் பரிசாளர் பி.வா. ஆண்டர்சனுடன் கூட்டாக உழைத்து ஒத்ததிர்வு இணைதிறன் பிணைப்புக் கொள்கை அல்லது ஒத்தியங்கு இணைதிறன் பிணைப்புக் கொள்கை என்று அறியப்படும் கருத்தை உருவாக்கினார். இக்கொள்கையில் அடிப்படையில் உயர் வெப்பநிலையில் இயங்கும் மீகடத்திப் பொருள்களின் இயக்கத்தை விளக்க முடிந்தது[3]. பாசுக்கரன், வலுவான ஒத்தியங்கும் நுண்பிணைப்பு அமைப்புகளுக்கான புதிய மாறாமுகப் புலங்கள் (gauge fields) கண்டுபிடித்ததற்காகவும், இசுற்றோன்சியம் உருத்தனேட்டு என்னும் பொருளில் வழக்கத்துக்கு மாறான பி.அலை மீகடத்துமை பற்றிய முற்கூற்றுகளுக்காகவும், கிராபீனின் உயர்வெப்ப மீகடத்துமை பற்றிய கருத்துகளுக்காகவும் நன்கு அறியப்படுபவர். இவர் முற்கூறியவை பின்னர் செய்முறைப்படி செய்து சரிபார்த்து உறுதிசெய்யப்பட்டன[2]. இத்தாலியில் உள்ள திரீசித்தே (Trieste) நகரில் இருக்கும் கொள்கைய இயற்பியலுக்கான அனைத்துலக நடுவம் வழங்கும் கொள்கைய இயற்பியலுக்கான அனைத்துலக நடுவப் பரிசு(ICTP Prize) இவருக்கு 1983 இல் வழங்கப்பட்டது. இதுவே முதன்முதல் வழங்கப்பட்ட கொள்கைய இயற்பியலுக்கான அனைத்துலக நடுவம் தரும் பரிசாகும். இவரே இப்பரிசை முதலில் வென்றவர். இப்பரிசு வளரும் நாடுகளில் இயற்பியல் கணிதத்துறையில் அரிய முன்னேற்றத்திற்கு வழி வகுத்த இளைஞர் ஒருவருக்கு வழங்கப்படுகின்றது[4]. இவர் பிரின்சிட்டனில் உள்ள முன்னேகிய ஆய்வுகளுக்கான கல்விக்கழகத்தில் (Institute for Advanced Study) 1996 இல் வருகை அறிஞராக இருந்தார்.[5]

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்[தொகு]

  1. "Excitements in Condensed Matter Physics". Indian Institute of Technology, Kanpur. Archived from the original on 2005-09-11. பார்க்கப்பட்ட நாள் 25 ஏப்ரல் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. 2.0 2.1 Lambert, Lisa. "Eight New Distinguished Research Chairs Join PI". Perimeter Institute. Archived from the original on 2012-05-22. பார்க்கப்பட்ட நாள் 25 ஏப்ரல் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. 3.0 3.1 "Prof. G. Baskaran's Brief Profile". Jamia Millia Islamia. பார்க்கப்பட்ட நாள் 17 October 2012.
  4. "Abdus Salam ICTP Timeline" (PDF). International Center for Theoretical Physics. Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 25 ஏப்ரல் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "Institute for Advanced Study: A Community of Scholars". Archived from the original on 2014-02-03. பார்க்கப்பட்ட நாள் 2013-05-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._பாசுக்கரன்&oldid=3723878" இலிருந்து மீள்விக்கப்பட்டது