சங்கம் - முச்சங்கம் (அடியார்க்கு நல்லார் உரைச் செய்திகள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முச்சங்க வரலாறு பற்றித் தொகுத்துக் கூறும் நால் இறையனார் களவியல் உரை. இது 8 ஆம் நூற்றாண்டில் தோன்றிப் 10 ஆம் நூற்றாண்டில் பதிவேறியது. இந்த மூன்று சங்கங்கள் பற்றிய செய்திகளோடு இசை, நாடகத் தமிழ் நூல்களுக்கு முதன்மை தந்து விளக்கம் கூறும் நூல் சிலப்பதிகாரத்துக்கு அடியார்க்கு நல்லார் எழுதியுள்ள உரையில் சிலப்பதிகாரம் உரைப்பாயிரத்துக்கு அவர் தரும் உரையின் பகுதி ஆகும். இப்பகுதியில் இவர் தரும் செய்திகள் இவை.

பேரியாழ்[தொகு]

பெருங்கலம் என்பது பேரியாழ். இது ஆயிரம் நரம்புகளைக் கொண்ட யாழ். இதனை ஆதியாழ் என்றும் வழங்கினர். இதன் நீளம் 12 சாண். [1] இதில் வணர் என்னும் பகுதி ஒரு சாண். பத்தர் என்பது 12 சாண் எனக் கூறப்படுவதால் இது யாழின் முழு நீளத்தையும் குறிக்கும் எனத் தெரிகிறது. [2] [3] [4] ஒவ்வொருவரும் அவரவர் கையால் எட்டுச் சாண் உயரம் இருப்பர். இந்த யாழின் உயரம் 12 சாண். அதாவது இந்த யாழ் ஒன்றரை ஆள் உயரம் இருக்கும் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

முச்சங்கம்[தொகு]

சங்கம் நிலவிய ஆண்டுகள், பேணிய அரசர்கள், சங்கத்தில் இருந்து தமிழ் ஆய்ந்த புலவர்கள், கவி அரங்கேறிய அரசர்கள் முதலானவற்றின் எண்ணிக்கைகள் இறையனார் களவியல் கூறும் எண்ணிக்கைகளாகவே இந்த உரையிலும் உள்ளன.

அரசர்கள்[தொகு]

  • அநாகுலன் என்னும் தெய்வப் பாண்டியன் - இவன் தேரில் ஏறி வானில் செல்லும்போது திலோத்தமை என்னும் தெய்வமகளைக் கண்டு காமுற்று அத் தேரிலேயே அவளோடு உறவு கொண்டான். இவர்களுக்குப் பிறந்த மகன் சாரகுமாரன். சாரகுமாரன் இசை அறிதற்குச் சிகண்டி செய்த நூல் இசைநுணுக்கம்.
  • பாண்டியன் மதிவாணனார் - கடைச்சங்கம் இரீஇய பாண்டியருள் கவியரங்கு ஏறிய பாண்டியன். மதிவாணனார் செய்த முதல் நூல்களில் உள்ள வசைக்கூத்திற்கு மறுதலையாகிய புகழ்க்கூத்து கூறும் நூல் மதிவாணர் நாடகத் தமிழ்நூல்
  • மாகீர்த்தியாகிய நிலந்தரு திருவிற் பாண்டியன் - கபாடபுரத்தில் இருந்துகொண்டு இடைச்சங்க காலத்தில் ஆட்சி புரிந்த இவன் தன் அவைக்களத்தில் தொல்காப்பியம் புலப்படுத்தியவன்.

புலவர்கள்[தொகு]

இடைச்சங்கத்தில் இருந்த புலவர்கள்

  • அகத்தியனார்,
  • அறிவனார் – பஞ்சமரபு என்னும் நூலை இயற்றியவர்
  • ஆதிவாயிலார் – சேனாபதியம் என்னும் நூலை இயற்றியவர்,
  • இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்,
  • கீரந்தையார்
  • குறுமுனி (தேவலிருடியாகிய குறுமுனி), (அகத்தியர்) - இவரது மாணாக்கர் பன்னிருவருள் சிகண்டி என்பாரும் ஒருவர்.
  • சிகண்டி என்னும் அருந்தவ முனி – இசைநுணுக்கம் என்னும் நூலை இயற்றியவர்
  • சிறுபாண்டரங்கனார்,
  • துவரைக் கோமகன்,
  • தொல்காப்பியனார்,
  • நாரதன் (தேவலிருடி நாரதன்) - பஞ்ச பாரதீயம் இயற்றியவர்
  • மதுரை ஆசிரியன் மாறனார்,
  • யமளேந்திரர் (பாரசவ முனிவரில் ஒருவர்) – இந்திரகாளியம் இயற்றியவர்,
  • வெள்ளூர்க் காப்பியனார்

புலவர்கள் (அடிக்குறிப்பு இணைப்பு நூலில் குறிப்பிடப்பட்டவர்கள்)[தொகு]

தலைச்சங்கம்

  • அகத்தியன் (திண் திறல் புலமைக் குண்டிகைக் குறுமுனி)
  • சிவன் (திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள்)
  • முரஞ்சியூர் முடிநாகனார் (புவி புகழ் மருதம் கவினிய முரஞ்சிப்பதி முடிநாகன் நிதியின் கிழவன்)
  • முருகன் (குன்று எறி இளஞ்சேய்)

இடைச்சங்கம்

  • அகத்தியர்
  • தொல்காப்பியத் தமிழ்முனிவர்
  • இருந்தையூரின் கருங்கோழி மோசியார்
  • வெள்ளூர்க் காப்பியன்
  • சிறுபாண்டரங்கன்
  • தேசிக மதுரையாசிரியன் மாறன்
  • துவரைக் கோமான்
  • கீரந்தையார்

கடைச்சங்கம்

  • அசை விரி குன்றத்து ஆசிரியர்
  • அறிவுடை அரனார்
  • இளந்திருமாறன்
  • இளநாகர்
  • உப்பூரிகுடி கிழார்
  • உருத்திரஞ்சன்மர்
  • கணக்காயர் நவில் நக்கீரர்
  • கபிலர்
  • கல்லாடர் (ஒல்காப் பெருமைத் தொல்காப்பியத்துக்கு உரை இடையிட்ட விரகர் கல்லாடர்)
  • கீரங்கொற்றர்
  • கூடலாசிரியன் நல்லந்துவனார்
  • கொற்றனார்
  • சிறுமேதாவியார்
  • சீத்தலைச் சாத்தர்
  • செயலூர் வாழ் பெருஞ்சுவனார்
  • செல்லூர் ஆசிரியர் முண்டம் பெருங்குமரர்
  • சேந்தம்பூதனார்
  • தேனூர்கிழார்
  • நச்செள்ளையார் (விச்சைக் கற்றிடு நச்செள்ளையார்)
  • நல்லூர்ப் புளியங்காய்ப் பெருஞ்சேந்தர்
  • நன்னாகர் (இன்னாத் தடிந்த நன்னாகர்)
  • பரணர்
  • பெருங்குன்றூர்கிழார்
  • மணலூர் ஆசிரியர்
  • மதுரை மருதனிளநாகர்
  • மருத்துவர் தாமோதரனார் மாதவன்
  • மாமூலர் (பேர் மூலம் உணரும் மாமூலர்)
  • முசிறி ஆசிரியர் நீலகண்டனார்

இந்தத் தொகுப்பில் வரலாற்றுக்கு முரண்பாடான புலவர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

நூல்கள்[தொகு]

இலக்கணம்

தொல்காப்பியம் - மாகீர்த்தியாகிய நிலந்தரு திருவிற் பாண்டியன் அவைக்களத்தில் புலப்படுத்திய நூல்.
அகத்தியம் – இடைச்சங்கத்தில் தொல்காப்பியத்தோடு இலக்கணமாகத் திகழ்ந்த நூல்

இலக்கியம்

கலி, குருகு, வெண்டாளி ஆகிய செய்யுள் இலக்கியங்கள்

இசைத்தமிழ் நூல்கள்

பெருநாரை, பெருங்குருகு, பஞ்ச பாரதீயம் (தேவலிருடி நாரதன் செய்தது) [5] ஆகியவை

நாடகத் தமிழ் நூல்

பரதம், அகத்தியம் முதலாக உள்ள தொன்னூல்களும் இறந்தன.
பின்னும் முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றியம் என்பனவற்றுள்ளும் ஒருசார் சூத்திரங்கள் நடக்கின்ற அத்துணை அல்லது முதல் நடு இறுதி காணாமையின் அவையும் இறந்தன போலும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. சாண் என்பது ஒன்பது அங்குலம்.
  2. பெருங்கலமாவது பேரியாழ்; அது கோட்டினது அளவு பன்னிரு சாணும், வணர் அளவு சாணும், பத்தர் அளவு பன்னிரு சாணும், இப் பெற்றிக்கு ஏற்ற ஆணிகளும், திவவும், உந்தியும் பெற்று ஆயிரம் கோல் தொடுத்து இயல்வது; என்னை?
  3. “ஆயிரம் நரம்பிற்றது ஆதியாழ் ஆகும்,
    ஏனை உறுப்பும் ஒப்பன கொளலே,
    பத்தர் அளவும் கோட்டினது அளவும்,
    ஒத்த என்ப இருமூன்று இரட்டி,
    வணர் சாண் ஒழித்து வைத்தனர் புலவர்”
    என நூலுள் கூறப்படுகிறது
  4. “தவ முதல் ஊழியின் தானவர் தருக்கு அற,
    புல மகனாளர் புரி நரம்பு ஆயிரம்,
    வலி பெறத் தொடுத்த வாக்கு அமைப் பேரியாழ்ச்,
    செலவுமுறை எல்லாம் செய்கையில் தெரிந்து
    மற்றை யாழும் கற்று முறை பிழையான் (பெருங்கதை 4-3 அடி 51-55)
    எனக் கதையினுள்ளும் கூறினார் ஆகலான் பேரியாழ் முதலிய ஏனவும் இறந்தன எனக் கொள்க.
  5. தேவர் என நாம் வழங்கும் சொல்லை அடியார்க்கு நல்லார் தேவல் என வழங்குகிறார்.