வலைவாசல்:தமிழிலக்கியம்/இலக்கியவாதிகள்/27

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ. பெரியதம்பிப்பிள்ளை

புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை (பிறப்பு: சனவரி 8, 1899 - நவம்பர் 2, 1978) கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மாவட்டக் கவிதைப் பாரம்பரியத்தின் சிறப்பு மிக்க ஒருவராக விளங்குகின்றார். இவர் கவிஞர் மாத்திரமல்ல, கட்டுரையாளர், பத்திரிகை ஆசிரியர், இலக்கிய ஆய்வாளர், மேடைப் பேச்சாளர், சமூக சீர்திருத்தவாதி.

1899 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் நாள் மட்டக்களப்பு மாவட்டம், மண்டூரில் ஏகாம்பரப்பிள்ளை வண்ணக்கர் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். மண்டூரில் உவெசுலியன் மிசன் தமிழ்ப் பாடசாலையில் வே. கனகரத்தினம், மு. தம்பாப்பிள்ளை ஆகியோரிடம் ஆரம்பக்கல்வியைக் கற்ற இவர் யாழ்ப்பாணத்துப் புலோலியைச் சேர்ந்த சந்திரசேகர உபாத்தியாயர் என்பாரிடம் தமிழ் படிக்கத் தொடங்கினார். தொடர்ந்து உயர்கல்வியினைக் கல்முனையிலும் கற்றார். பின்னர் யாழ்ப்பாணம் சென்று வண்ணார்பண்ணை நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையில் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையுடன் உடன் மாணாக்கராயிருந்தார்.