வலைவாசல்:இந்து சமயம்/சிறப்புக் கட்டுரை/1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தஞ்சைப் பெருவுடையார் கோயில்

தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது பிரகதீசுவரர் கோயில் அல்லது தஞ்சை பெரிய கோயில் தஞ்சாவூரிலுள்ள இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது. தஞ்சைப் பெரியகோவில் எனவும் இக்கோவில் அறியப்படுகிறது.

இக்கோயில் கட்டப்பட்டபோதிருந்த காலம், சோழராட்சியின் பொற்காலமாகும். தமிழ்நாடு முழுவதும் ஒரே குடைக்கீழ் இருந்ததுடன், எல்லைக்கப்பாலும் பல இடங்கள் சோழப் பேரரசின் கீழ் இருந்ததுடன், பெருமளவு வருவாயும் கிடைத்துவந்தது. பெருமளவு ஆள்வலிமையும், அரசனின் சிவபக்தியோடு கூடிய ஆளுமையும், இத்தகையதொரு பிரம்மாண்டமான கோயிலை சுமார் 7 ஆண்டுகளில் கட்டிமுடிப்பதற்குத் துணையாக இருந்தது.

இன்று தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்கும் இது 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. 1006ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 வயது நிறைவடைகின்றது.