முத்துக்கூத்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ந. மா. முத்துக்கூத்தன்
பிறப்பு25 மே 1925 (1925-05-25) (அகவை 98)
பொய்யாமணி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு,  இந்தியா
இறப்பு1 மே 2005(2005-05-01) (அகவை 79)
தேசியம்தமிழர்
பணிகவிஞர்
பாடலாசிரியர்
அறியப்படுவதுவில்லுப்பாட்டுக் கலைஞர்
பெற்றோர்நமச்சிவாயம், மாரியம்மாள்
வாழ்க்கைத்
துணை
மரகதம்
பிள்ளைகள்மு. கலைவாணர் (மகன்)

ந. மா. முத்துக்கூத்தன் (Muthukoothan; 25 மே 1925 – 1 மே 2005) நாடக நடிகரும், தமிழ்த் திரைப்பட நடிகரும், பாடலாசிரியரும், கவிஞரும், வில்லுப்பாட்டுக் கலைஞரும் ஆவார்.[1] 

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ந. மா. முத்துக்கூத்தன் திருச்சிராப்பள்ளி மாவட்டம் பொய்யாமணி என்னும் ஊரில் 1925 மே 25 அன்று நமச்சிவாயம், மாரியம்மாள் இணையருக்கு பிறந்தவர். 1942 ஆம் ஆண்டு முதல் நாடகத்துறையிலும், திரைத்துறையிலும் கலைப்பணிகளைத் தொடங்கியவர். நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ராமசாமியின் "கிருட்டினன் நாடக சபா", எஸ். எஸ். ராஜேந்திரன் நாடக மன்றம், எம்.ஜி.ஆர். நாடக மன்றம் ஆகிய நாடகக் குழுக்களில் இணைந்து நாடகங்களில் நகைச்சுவை வேடமணிந்து நடித்தவர்.[1]

திரைப்பட நடிகர்[தொகு]

இவர் 1952 ஆம் ஆண்டு திரைத்துறையில் நடிகராகப் பலவகையில் பங்களித்தவர். பராசக்தி, இரத்தக்கண்ணீர் , இராஜராஜன், நாடோடி மன்னன், நல்லவன் வாழ்வான், புதிய பூமி, தாய் மகளுக்கு கட்டிய தாலி உள்ளிட்ட திரைப்படங்களில் பல்வேறு பாத்திரங்களில் நடித்தவர்.[1]

பாடலாசிரியர்[தொகு]

இவர் 1953 ஆம் ஆண்டிலிருந்து அம்மையப்பன், நாடோடி மன்னன், அரசிளங்குமரி, இராஜராஜன், கலை அரசி, மந்திரவாதி, திருடாதே, அரச கட்டளை, நாகமலை அழகி உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில்  பாடல், உரையாடல் எழுதியவர் ஆவார்.[1]

கலைத்துறை[தொகு]

இவர் கலைவாணர் என். எசு. கிருட்டிணன் பயன்படுத்திய வில் கருவியை, அவர்தம் துணைவியார் டி. ஏ. மதுரமிருந்து அன்பளிப்பாக வாங்கி, வில்லுப்பாட்டுக் கலைக்குப் புத்துயிர் ஊட்டியவர் ஆவார். தென்தமிழகத்தில் வழக்கத்தில் இருந்த வில்லுப்பாட்டுக் கலையை வடதமிழகத்தில் பரவலாக்கினார். கலைவாணரின் வாழ்க்கை வரலாற்றை வில்லுப்பாட்டு வடிவமாக்கி, அவர்தம் முதல் நினைவுநாளான 1958 ஆகத்து 31 இல் கலைவாணரின் இல்லத்தில் நிகழ்த்தினார்.[1]

விருதுகள்[தொகு]

  1. சென்னைப் பகுத்தறிவாளர் கழகத்தின் "பாரதிதாசன் விருது (1987)
  2. தந்தை பெரியார் தமிழிசை மன்றத்தின் "நற்றமிழ்க் கூத்தர் விருது" (1998)
  3. இலக்கிய வீதி அமைப்பின் "தாராபாரதி விருது" (2002)
  4. ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் "தமிழ்ச்செம்மல் விருது" (2003).[1]

குடும்பம்[தொகு]

ந. மா. முத்துக்கூத்தன் 1954 அக்டோபர் 24 இல் பேரறிஞர் அண்ணா தலைமையில் மரகதம் என்பவரை சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டார்.  இவர்களுக்கு ஒரு மகனும் ஐந்து மகள்களும் உள்ளனர். இவரால் பெரிதும் மதிக்கப்பட்ட கலைவாணர் என். எசு. கிருட்டிணன் நினைவாகத் தம் மகனுக்குக் கலைவாணன் என்று பெயரிட்டார்.[1]

எழுதிய நூல்கள்[தொகு]

  1.    பாதை மாறாத பாட்டுப் பயணம் (தன் வரலாறு)
  2.    தமிழிசைப் பாடல்கள் (தொகுப்பு)
  3.   பகை வென்ற சோழன் (நாடகம்)
  4.   இசை வெள்ளத்தில் எதிர்நீச்சல் (குறும் புதினம்)
  5.    மொழிகள் குல முதல்வி (தமிழ் மொழியின் சிறப்புரைக்கும் நூல்)
  6.   துணை நடிகர் துரைக்கண்ணு (நடிகர்களின் வாழ்க்கை பற்றியது)[2]
  7.   எல்லாரும் நல்லா இருக்கணும்
  8.  நெல்லம்மா (கதை-விதை-கவிதை)
  9. என் கச்சேரிகள்.[3]

மறைவு[தொகு]

முத்துக்கூத்தன் 2005 மே 1 அன்று இயற்கை எய்தினார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: தமிழிசைக் கலைஞர் கலைமாமணி ந. மா. முத்துக்கூத்தனார்". முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan. 8 சனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 3 ஏப்ரல் 2022. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  2. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  3. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்துக்கூத்தன்&oldid=3785025" இலிருந்து மீள்விக்கப்பட்டது