வள்ளியாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓடும் முக்கியமான ஆறுகளில் ஒன்று வள்ளியாறு. இது தேசியக் குறியீட்டு எண் 5A1A2c – ன்படி ஆற்றுப்பள்ளத்தாக்கு (water shed) என்கிற வகைப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது வில்லுக்குறி அருகே உள்ள வேளிமலையில் உருவாகி மணவாளக்குறிச்சி அருகே கடியபட்டணம் என்னும் ஊரில் அரபிக் கடலில் கலக்கிறது. குமரி மாவட்ட மக்களின் பல்லாண்டு கனவான மாம்பழத்துறையாறு அணை இநத ஆறு உருவாகும் வேளிமலையில் ஆணைக்கிடங்கு என்னுமிடத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

கல்குளம் தாலுகாவில் உள்ள வேளிமலையின் வடக்குச் சரிவின் நீர் ஒழுகல்களிலிருந்து சேகரமாகிச் சிற்றோடையாக வள்ளியாறு உருவெடுக்கிறது. இந்தச் சிறு ஓடையானது முட்டக்காடு வழியாகப் பயணித்து தென்மேற்காகப் பாய்ந்தோடி ஆறாக உருவெடுத்து இறுதியில் அரபிக்கடலில் கலக்கிறது. இதன் நீர்பாசன எல்லைகளுக்குப் புறப்பகுதிகளாக மேற்கு எல்லையில் பாம்புருவி ஓடை என்கிற நரிக்கிர் ஓடையும், கிழக்கு எல்லையில் பொன்னி ஓடை என்கிற பன்னி வாய்க்காலும் வடக்கில் தாமிரபரணி ஆற்று வடிநிலமும், தெற்கில் அரபிக்கடலும் அமைந்து அதற்கு நடுவே இந்த ஆறு ஓடுகிறது. இந்த நான்கு எல்லைகளுக்குள் இருக்கும் விவசாயப் பரப்பிற்கும், அதன் வேளாண்மை மற்றும் குடிநீர் ஆதாரங்களுக்கான நீரினை வ்ள்ளியாறு வழங்கி வருகிறது. இதன் நீர்ப்பிடிப்பு பகுதியின் வடிநிலப்பரப்பானது 123.3 சதுர கிலோமீட்டர் ஆகும். கோதைநல்லூர், முட்டக்காடு, பத்மநாபபுரம், தக்கலை, இரணியல், தலக்குளம், திருநைனார் குறிச்சி, மணவாளக்குறிச்சி போன்ற ஊர்கள் வழியாகச் சுமார் 20 கிலோமீட்டர் பயணித்து கடிகைப்பட்டிணத்தில் அரபிக்கடலில் கலக்கிறது. அந்த ஆறானது தான் சுமந்து வரும் நீரினைக் கொண்டு தனது பயணவழிகள்தோறும் ரப்பர், வாழை, தென்னை, நெல் மற்றும் சிறிய அளவில் காய்கறிகள் போன்றவற்றை விளைவிக்கத் தேவையான வளமையினை கொடுக்கிறது.

இரண்டு மலைகளுக்கு நடுவிலிருந்து மெல்லிய சிறு நீரோடையாகப் பாய்ந்து வரும் வள்ளியாறானது மதுவில் தரையிறங்குகிறது. வள்ளியாறு தரையிறங்கும் இடத்தில் அதன் குறுக்காகப் பேச்சிப்பாறை அணையிலிருந்து வரும் புத்தன் கால்வாய் வெட்டப்பட்டுள்ளதால், ஒரு மேம்பாலம் அமைக்கப்பட்டு பாலத்தில் மேலாக வள்ளியாறு பாய்ந்து புத்தன் கால்வாயைக் கடந்து முட்டக்காட்டை அடைகிறது. வள்ளியாறானது தனது கரையோரங்களில் சிறப்புமிக்கப் பல திருத்தலங்களைக் கொண்டிருக்கிறது. அவற்றில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில்கள் மட்டும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. வள்ளியாறானது தனது தொடக்கத்தில் பன்னிப்பாகம் மகாதேவர் கோவிலின் கிழக்கு வாசல் வழியாக ஓடி முட்டைக்காட்டை அடைகிறது. அடுத்ததாக, கல்குளம் என்கிற பத்பனாபபுரத்தைக் கடக்கும்போது கல்குளம் நாயனார் நீலகண்டேஸ்வரர் திருக்கோவிலும், ஆழ்வார்கோவில் பகுதியைக் கடக்கையில் சிவகிரி ஸ்ரீ மகாதேவர் குடைவரைக் கோவிலும் அதன் கரைகளில் அமைந்துள்ளன. தலக்குளத்தை வந்தடையும்போது அதன் மேற்குக் கரையில் முறையே கடுங்கோபத்து மகாதேவர் சிவாலயமும், தலக்குளம் அழகிய பெருமாள் கோவிலும் அமையப்பெற்றுள்ளன. வள்ளியாறானது திருநைனார்குறிச்சி பகுதியைக் கடக்கும்போது அதன் கிழக்கு கரையில் கடிகைப்பட்டிணத்து உடையார் கறைகண்டேஸ்வரத்து நாயனார் கூத்தாடும் தேவர் சிவன் கோவிலும், மேற்குக் கரையில் சேரமங்கலத்து தென் திருவரங்கத்து ஆழ்வார் பெருமாள் கோவிலும் அமையப்பெற்றுள்ளன. வரலாற்றின் அடிப்படையில் வள்ளியாறானது, அதன் முதல் திருத்தலமான பன்னிப்பாகம் மகாதேவர் கோவில் கல்வெட்டில் பதிவாகியுள்ளது. இக்கோவிலின் நந்தி மண்டபத்தின் வடக்குபக்கச் சுவரில் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பான 14 – ஆம் நுற்றாண்டு கல்வெட்டில்,


1. வண்ணான் குளத்தின் மந்தாரத் தடி

2. தடி ஓன்று நிலம் நான்கு மா யும் பெருங்குளத்தாலும் ‘வ

3. ள்ளி ஆற்றா’லும் நீருண்டு நெல் விளையும்

4. குசித்தியறை தடி ஓன்று நிலம் நான்கு மா யும் ஆக தடி இரண்டினால் நிலம் எட்டு மா யும்

5. தடி இரண்டினால் நிலம் எட்டு மா புல்லுவிளை துண்டம் இரண்டும்

6. ...................................................


கல்வெட்டு முற்றுப்பெறவில்லை. கல்வெட்டின் அடிப்படையில் வள்ளியாறானது தனது தலைப்பகுதியிலேயே பலப்பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே தனது நீரினால் குளங்களைப் பெருக்கியும், நெல்விளைவித்தும் வந்துள்ளதை வரலாறு பதிவு செய்துள்ளது. ஒரு குழி என்பது இன்றைய கணக்கீட்டின் அடிப்படையில் 144 சதுர அடி. 100 குழி என்பது ஒரு மா. 20 மா ஒரு வேலி. 14,400 சதுர அடிதான் ஒரு மா. கிட்டத்தட்ட 33 சென்ட் தான் ஒரு மா. கல்வெட்டு முற்றுப்பெறாமல் உள்ளதால் கல்வெட்டின் முழுச்செய்தியையும் அறிய இயலவில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வள்ளியாறு&oldid=3395415" இலிருந்து மீள்விக்கப்பட்டது