துபாய் பெசுட்டிவல் சிட்டி

ஆள்கூறுகள்: 25°13′17″N 55°21′01″E / 25.22139°N 55.35028°E / 25.22139; 55.35028
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துபாய் பெசுட்டிவல் சிட்டியின் சின்னம்

துபாய் பெசுட்டிவல் சிட்டி (ஆங்கில மொழி: Dubai Festival City, அரபு மொழி: دبي فستيفال سيتي‎) என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின், துபாய் அமீரகத்தில் உள்ள பெரிய வாழிட, வணிக, பொழுதுபோக்கு வளர்ச்சித் திட்டம் ஆகும். "நகரத்துள் ஒரு நகரம்" என விளம்பரப்படுத்தப்படும் இது மையக் கிழக்கின் மிகப் பெரிய கலப்புப் பயன்பாட்டு வளர்ச்சித் திட்டம் ஆகும். முழுமையாக முடிவடைந்ததும், இதில் தொழில், இருப்பிடம், பொழுதுபோக்கு ஆகியவற்றுக்கான எல்லாக் கூறுகளையும் இத்திட்டம் கொண்டிருக்கும். இங்கே, பல வாழிடத் தொகுதிகள், பல்வேறு விடுதிகள், அங்காடிகள், கோல்ப் விளையாட்டிடம் போன்றவற்றுடன், பள்ளிகள் உள்ளிட்ட பலதரப்பட்ட பொதுச் சேவைகளும் திட்டமிடப்பட்டுள்ளன.

விபரம்[தொகு]

துபாய் பெசுட்டிவல் சிட்டி இரவுத் தோற்றம்

இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகளை "அல் புட்டெயிம் கரிலியன்" என்னும் நிறுவனம் பொறுப்பேற்றது. 2003 ஆம் ஆண்டில் தொடங்கிய பணிகள் நிறைவேற 12 ஆண்டுகள் செல்லும் எனக் கூறப்படுகிறது. துபாய் சிறுகுடாவின் கிழக்குக் கரையில் 3.8 கிமீ (2.4 மைல்) நீளமான கரையோரம் இத்திட்டத்தினுள் அடங்குகிறது. துபாய் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இருந்து 2 கிமீ (1.2 மைல்) தொலைவில் இது அமைந்துள்ளது. 2006 ஆம் ஆண்டு நடுப்பகுதி வரை 11 பில்லியன் அரபு அமீரக திராம் (3 பில்லியன் அமெரிக்க டாலர்) இத்திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.[1]

விடுதிகள்[தொகு]

இன்டர்கொன்டினென்டல் விடுதிகள் குழுமத்தினால் முகமை செய்யப்படும் இரண்டு விடுதிகளும், ஒரு நீண்டகாலத் தங்கலுக்கான சேவைகளுடன் கூடிய தங்குமிட வசதித் தொகுதியும் இத்திட்டத்தினுள் உள்ளன. யூலை 2009ல் இக் குழுமம் அல் பாதியா கோல்ப் விளையாட்டிடத்தின் முகாமைத்துவத்தையும் பொறுப்பேற்றுக்கொண்டது. கட்டப்படவிருந்த 350 அறைகள் கொண்ட துபாய் டப்ளியூ விடுதி, 400 அறைகளுடன் கூடிய ஃபார் சீசன்ஸ் விடுதி என்பனவற்றின் கட்டுமான வேலைகள், 2008-2009 உலகப் பொருளாதார நெருக்கடியினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.[2]

படங்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Investments in Dubai Festival City exceed Dh11b பரணிடப்பட்டது 2007-09-29 at the வந்தவழி இயந்திரம் Gulf News: 5 April 2006
  2. "Two five-star hotels at Festival City shelved". Emirates Business 24/7. Archived from the original on 2009-07-04. பார்க்கப்பட்ட நாள் 2009-07-01.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]