இராஜகேசரி (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜகேசரி
இராஜகேசரி தமிழ் வரலாற்றுப் புதினம்
நூலாசிரியர்கோகுல் சேஷாத்ரி
உண்மையான தலைப்புRajakesari
பட வரைஞர்கோகுல் சேஷாத்ரி
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
தொடர்இராஜகேசரி புதின வரிசை
பொருண்மைவரலாற்று நாவல்
வகைTamil historical novels
வெளியீட்டாளர்பழனியப்பா பிரதர்ஸ்
வெளியிடப்பட்ட நாள்
ஜூலை 21, 2008
ஊடக வகைBook
பக்கங்கள்360
ISBN9788183795050
முன்னைய நூல்சேரர் கோட்டை
அடுத்த நூல்உதயபானு தொகுதி

இராஜகேசரி,[1] எழுத்தாளர் கோகுல் சேஷாத்ரி எழுதிய ஒரு வரலாற்றுத் தமிழ்ப் புதினம்.கற்பனைக் கதையாக எழுதப்பட்டாலும் பல்வேறு சோழர்காலக் கல்வெட்டுகள், செப்பேடுகள் மற்றும் இதர ஆய்வுத் தரவுகளின் அடிப்படையில் அக்கால சமூக வரலாற்றுப் பின்புலத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இக்கதை புனையப்பட்டுள்ளது. 2004 முதல் 2005 வரை இணையத்தில் தொடராக வெளிவந்த இப்புதினம் பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தாரால் ஜூலை, 2008 ஆம் ஆண்டு நூலாக வெளியிடப்பட்டது.

கதைச் சுருக்கம்[தொகு]

இப்புதினம் நிகழும் காலம் சுமார் கிபி 1000. சோழர் பெருவேந்தர் இராஜராஜ சோழரின் பிறந்த நாளான ஐப்பசி மாத சதய நட்சத்திர நாளன்று விமரிசையான கொண்டாட்டத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது சோழர் தலைநகரான தஞ்சை.[2]. அரசரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள, நாட்டின் பிற பகுதிகளிலிருந்து மக்கள் தலைநகரை நோக்கி வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

ஓராண்டுக்கு முன் இராஜராஜரால் திட்டமிடப்பட்டுத் தொடங்கப்பட்ட இராஜராஜேஸ்வரம் தஞ்சைப் பெருவுடையார் கோயில் ஒருபுறம் மளமளவென்று உருப்பெற்றுக் கொண்டிருக்கிறது.[3]. பெரும் கற்கள் யானைகளால் இழுக்கப்பட்டப் பாரவண்டிகளிலிலிருந்து இறக்கப்படுகின்றன. திட்டத் தலைமைக் கணக்கர் ஆதித்தன் சூரியன்,[4], அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த பல வகையான பணிகளைச் சுறுசுறுப்பாகக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார். சிற்பிகள், சித்திரக்காரர்கள், தொழில் வல்லுநர்கள், சமயக் குரவர்கள் என பலதுறை வல்லுநர்களால் நிறைந்துள்ளது அந்த வளாகம். கடவுளுக்குப் பணிசெய்ய தளிப்பெண்டுகள் எனப்படும் 400 நடன மங்கையர் நாட்டின் பல பாகங்களிலிலிருந்தும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.[5] பிறந்த நாள் விழாவில் இராஜராஜ சோழரின் வாழ்க்கையை மையப்படுத்தி எழுதப்பட்ட “ஸ்ரீ இராஜராஜ விஜயம்” எனும் நாட்டிய நாடகத்தை அரங்கேற்ற விஜயராஜ ஆச்சாரியரின் தலைமையில் முனைப்பாக ஒத்திகைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.[6].

சோழநாட்டின் தலைநகரம் இவ்வாறு பிறந்த நாள் விழாக் கொண்டாட்ட ஏற்பாடுகளில் மகிழ்ச்சியோடு மூழ்கியிருக்க, பலநூறு காதங்களுக்கு அப்பால், சேரநாட்டு எல்லைகுட்பட்ட காட்டுப்பகுதியில் இராஜராஜருக்கு எதிராக ஒரு பயங்கர சதித்திட்டம் உருவாகியுள்ளது. சதித்திட்டத்தை நிறைவேற்ற அனுப்பப்பட்டுள்ள சதிகாரர்கள் சோழர் தலைநகருக்குள் ஊடுருவித் தமது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள தக்க தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சோழர் தலைநகருக்கு சற்று தூரத்தில் துழாய்க்குடி எனும் சிறிய கிராமத்தில் வசித்து வரும் அம்பலவாணர் கம்பன் அரையன் எனும் 55 வயதான மூத்த சோழ வீரர் அருகிலுள்ள கோயிலில் கூத்துப் பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார். காட்டு வழியில் அந்தப் பெரியவரின் கண்ணெதிரே சேர நாட்டுச் சதியின் ஒரு அங்கமாக ஒரு பயங்கரக் கொலை நடைபெறுகிறது. கொலை செய்யப்பட்டவன் சாகும் தறுவாயில் சில முக்கிய உண்மைகளை அம்பலவாணரிடம் சொல்லிவிட்டு இறந்து போகிறான். இறந்துபட்ட வீரனுக்கு எவ்வாறேனும் நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று நினைக்கும் அம்பலவாணர் துணிவுடன் தஞ்சைக்குப் புறப்பட்டுச் செல்கிறார். நெஞ்சில் உண்மையையும் நேர்மையையும் மட்டுமே ஆயுதங்களாகத் தரித்து சோழர் தலைநகருக்குச் செல்லும் அந்த மாவீரரின் மகத்தான சாகசங்களும் அதனையொட்டிய நிகழ்வுகளுமே இராஜகேசரியின் கருவாக அமைந்துள்ளன.

கதாபாத்திரங்கள்[தொகு]

இது ஒரு புதினம் என அறியப்பட்டாலும் சரித்திரத்தில் உள்ள பாத்திரங்கள், சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

  • சோழ மன்னர்ராஜராஜ சோழன் (வரலாற்றுக் கதாபாத்திரம்)
  • சேனாதிபதி குரவன் உலகளந்தானான இராஜராஜ மாராயர் (வரலாற்றுக் கதாபாத்திரம்)
  • படைத்தளபதி பரமன் மழப்பாடியார் (வரலாற்றுக் கதாபாத்திரம்)
  • முதலமைச்சர் அமண்குடி கிருஷ்ணன் இராமன் (வரலாற்றுக் கதாபாத்திரம்)
  • பெரியகோயில் ஸ்ரீகாரியம் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளார் (வரலாற்றுக் கதாபாத்திரம்)
  • திருமெய்காப்புப் படைத்தலைவர் வேளாண் ஆட்கொண்ட வில்லியார் (கற்பனைக் கதாபாத்திரம்)
  • முன்னாள் சோழப்படை வீரர் அம்பலவாணர் கம்பன் அரையன் (கற்பனைக் கதாபாத்திரம்)
  • கிளையூர் வைத்தியர் (கற்பனைக் கதாபாத்திரம்)
  • கூத்து விற்பன்னர் சாத்திக்கூத்தர் விஜயராஜ ஆசாரியர் (கற்பனைக் கதாபாத்திரம்)
  • வைத்தியர் மகன் அரிகண்ட தேவன் (கற்பனைக் கதாபாத்திரம்)
  • தலைக்கோலி நக்கன் மதுரவாசகி (வரலாற்றுக் கதாபாத்திரம்)

நீள்புதினத் தொடர் வரிசை[தொகு]

பதிப்பு வரலாறு[தொகு]

இந்தப் படைப்பு முதலில் வரலாறு டாட் காம் இணையதளத்தில் 2004 முதல் 2006 வரையில் தொடராக வெளிவந்தது. பின்னர் 2008ல் பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்தாரால் புத்தகமாகப் பதிப்பிக்கப்பட்டது. 2017ல் திருத்தப்பட்ட புதிய இரண்டாம் பதிப்பைக் கதாசிரியர் வெளியிட்டுள்ளார்.

ஒலிப்புத்தகம்[தொகு]

2020ல் ஸ்டோரிடெல் தமிழ் நிறுவனத்தின் மூலம் திருமதி. தீபிகா அருணின் குரலில் இராஜகேசரி ஒலிப்புத்தகமாக வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஒரு நேர்காணலில் கதாசிரியர் இராஜகேசரி உருவான விதத்தையும் எழுதப்பட்ட சூழலையும் குறித்து விரிவாகப் பேசியுள்ளார்.

புத்தக மதிப்புரைகள்[தொகு]

கதாசிரியரின் பேட்டிகள் - நேர்காணல்கள்[தொகு]

இணையவழி புத்தகங்களைப் பெற[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. பிற்காலச் சோழ அரசர்கள் இராஜகேசரி பரகேசரி எனும் பட்டங்களைப் மாற்றி மாற்றிப் புனைந்து கொண்டார்கள். காண்க - சோழர்கள், க.அ.நீலகண்ட சாஸ்திரியார்.
  2. முதலாம் இராஜராஜ சோழரின் பிறந்த நாள் விழா ஐப்பசி சதய நாளன்று கொண்டாடப் பட்டதைப் பல சோழர் காலக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இவற்றுள் தொன்மையானது இராஜராஜரின் முட்டம் கல்வெட்டாகும். தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 3.
  3. தஞ்சை பெரிய கோயிலை முதலாம் இராஜராஜ சோழர் ஏறக்குறைய கிபி 1000 வாக்கில் கட்டத் துவங்கியிருக்கலாம் என்று அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். காண்க தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 2 மற்றும் இரா. நாகசாமியின் சிவபாதசேகரனின் தஞ்சைக் கல்வெட்டுகள்.
  4. பெரிய கோயிலின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தவர் ஆதித்தன் சூரியன். இவர் கோயிலுக்கு நிவந்தமாக அளித்த பல செப்புத் திருமேனிகளைப் பெரிய கோயில் கல்வெட்டுகள் விதந்தோதுகின்றன. தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 2
  5. தஞ்சை பெரிய கோயிலின் வடபுறத் திருச்சுற்று மாளிகையில் பதிவாகியுள்ள மிக நீளமான கல்வெட்டு இந்த நானூறு தளிப்பெண்டுகளின் பெயர்களையும் அவர்தம் வீட்டு இலக்க எண்களையும் விரிவாகப் பதிவு செய்துள்ளது. தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 2
  6. திருப்பூந்துருத்தியில் பதிவாகியுள்ள ஒரு சோழர் காலக் கல்வெட்டு சுவர்ணன் நாரணன் பட்டாதித்தன் என்பார் ஸ்ரீஇராஜராஜ விஜயம் எனும் நாடகத்தில் எழுதிய செய்தியைக் குறிப்பிடுகிறது. காண்க தி.வை.சதாசிவப் பண்டாரத்தாரின் பிற்காலச் சோழர் வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜகேசரி_(புதினம்)&oldid=3850553" இலிருந்து மீள்விக்கப்பட்டது