வரித் தேன்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வரித்தேன்சிட்டு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Passeriformes
குடும்பம்:
பேரினம்:
இனம்:
P. novaehollandiae
இருசொற் பெயரீடு
Phylidonyris novaehollandiae
(Latham, 1790)

வரித் தேன்சிட்டு (ஆங்கிலத்தில்:New Holland Honeyeater (Phylidonyris novaehollandiae)என்பது தென் ஆத்திரேலியாவில் பரக்கக் காணப்படும் தேன் உண்ணும் ஒரு தேன்சிட்டு வகைப் பறவை. ஆத்திரேலியாவில் முதன் முதலாக அறிவியல் நோக்கில் விளக்கி உரைக்கப்பட்ட பறவைகளில் ஒன்று. முதலில் இதன் அறிவியல் பெயராக Certhia novaehollandiae என்பதை இட்டிருந்தார்கள். (சான் இலாத்தம் (John Latham) என்பார் 1781, 1790 விளக்கினார்). இப்பொழுது இதன் அறிவியல் பெயர் ஃபைலின்டோனிரிசு நோவாகாலாண்டிடே (Phylidonyris novaehollandiae) என்பதாகும். இப்பறவை ஏறத்தாழ 18 செ.மீ நீளமான பறவை. இதன் கறுப்பு உடலில் வெண்கோடுகள் கீற்றுக்கீற்றாக இருக்கும். கண்ணின் கருவிழியைச் சுற்றி வெள்ளை வளையம் காணப்படும். முகத்தில் கன்னத்துக்கு அருகே வெண் தூவி புசுபுசு என்று இருக்கும். இறக்கையின் விளிம்பிலும் வால்புறத்திலும் மஞ்சள் நிறத் தீட்டுகள் இருக்கும். இது மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் பறவை, ஓர் இடத்தில் அதிக நேரம் அமர்ந்து இராது. ஏதும் அச்சமூட்டும் அல்லது தீவாய்ப்புச் சூழல் என்று உணர்ந்தால், குறிப்பாக கழுகு இனக் கொன்றுண்ணிப் பறவைகளைக் கண்டால் இத் தேன்சிட்டுகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து எச்சரிக்கைக் குரல் எழுப்பும். ஆண் பறவையும் பெண் பறவையும் ஏறத்தாழ ஒன்றுபோலவே இருக்கும், ஆனால் பெண்பறவை சற்று சிறியதாக இருக்கும். ஓராண்டுக்கும் இளைய பறவைகள், உடல் நிற அமைப்பு முதிர்ந்த பறவை போலவே இருந்தாலும், சாம்பல் நிறக் கண்கள் கொண்டிருக்கும்.

வரித்தேன்சிட்டுகளின் வாழ்க்கை வளர்ச்சி முதலியன ஓரளவுக்கு நன்றாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. தெற்கு, கிழக்கு ஆத்திரேலியாவில் இலையுதிர் அல்லது இலைத்துளிர் காலத்தில் குஞ்சுபொரிப்பு வளர்ப்பு தொடங்குகின்றது. ஆனால் கரையோரப்பகுதிகளின் சில இடங்களில் ஆண்டில் எக்காலத்திலும் வளர்ப்பு தொடங்கலாம். மேற்கு ஆத்திரேலியாவில் ஆண்டுக்கு ஒரு முறை சூலை முதல் நவம்பர் மாதம் வரை, பூந்தேன் அதிகம் கிடக்கும் காலங்களில், குஞ்சுபொரிப்பு வளர்ப்பு நடக்கின்றது. (மக்ஃபார்லாந்து (McFarland), 1985). இப்பறவைகள் ஒரே துணையையைக் கொண்டிருப்பதாகவே தெரிகின்றது; பல பறவைகள் கூடி வாழ்வு நடத்துவதாகத் தெரியவில்லை. ஆண்பறவைகள் கூட்டைக் காப்பதிலும், உணவு கிடைக்கும் இடங்களைக் காப்பதிலும் அதிக நேரம் செலவிடுகின்றன, பெண்பறவைகள் கூட்டைக் கட்டுவதிலும், அடை காப்பதிலும், குஞ்சு வளர்ப்பதிலும் அதிக நேரம் செலவிடுகின்றன (மக்ஃபார்லாந்து, 1985; கிளார்க்கும் கிளார்க்கும் (Clarke and Clarke), 1999). என்றாலும் இந்த அலுவல்கள் முற்றிலும் பால்முறைப்படி இருப்பதில்லை (இலாம்பர்ட்டும் ஓர்பீக்கும் (Lambert and Oorebeek) களத்தில் கண்டபடி).

வரித்தேன்சிட்டுகள் அதற்குத்தேவையான மாவுப்பொருள் சத்தை (கார்போ-ஐதரேட்டுத் தேவையை) பூந்தேனில் இருந்து பெறுகின்றன. இதனால் இவை பலப் பூச்செடிகளின் பூந்தூள் பரவலுக்கு (மகரந்தச் சேர்க்கைக்கு) உதவுகின்றன. இச்செடிகள் பலவும் ஆத்திரேலியாவில் மட்டுமே காணப்படும் பாங்கிசியா (Banksia), ஃகாக்கியா (Hakea), யாக்கா அல்லது காந்தோரியா (Xanthorrhoea (Yacka)), அக்கேசியா (Acacia) போன்றவையாகும். இத்தேன்சிட்டுகள் சைலிடே (family Psyllidae) குடும்பத்தைச் சேர்ந்த செடிகளில் துளிர்க்கும் இனிப்பான நீர்த்துளிகளையும் உண்ணும். இத் தேன்சிட்டுகள் புரதச் சத்துக்கு சிலந்திகள் சிறுபூச்சிகள் போன்றவற்றையும் உண்ணும்.

தற்பொழுது இந்த வரித்தேன்சிட்டில் (Phylidonyris novaehollandiae) ஐந்து வகையான உள் சிற்றினங்கள் பற்றி விளக்கி உள்ளனர்:

  • P. novaehollandiae novaehollandiae (தென்கிழக்கு ஆத்திரேலியா ; இலாத்தம் (Latham), 1790)
  • P. novaehollandiae canescens (தாசுமேனியா; இலாத்தம், 1790),
  • P. novaehollandiae campbelli (கங்காரூத் தீவு, தென் ஆத்திரேலியா; மாத்தியூசு (Matthews), 1923)
  • P. novaehollandiae longirostris (மேற்கு ஆத்திரேலியா; கூல்டு (Gould), 1846)
  • P. novaehollandiae caudatus (பாசு நீரிணைத் தீவுகள் (Bass strait islands);சாலமன்சன் (Salomonsen), 1966).

பட வரிசை[தொகு]

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்[தொகு]

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Phylidonyris novaehollandiae". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 16 July 2012. {{cite web}}: Invalid |ref=harv (help)
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
  • Clarke, R. H., and M. F. Clarke (1999) The social organization of a sexually dimorphic honeyeater: the Crescent Honeyeater Phylidonyris pyrrhoptera, at Wilsons Promontory, Victoria. Austral Ecolology 24(6), 644–654.
  • McFarland, D. C. (1985) Breeding behaviour of the New Holland Honeyeater Phylidonyris novaehollandiae. Emu 86, 161–167.
  • Kleindorfer, S., Lambert, S., & Paton, D. C. (2006) Ticks (Ixodes sp.) and blood parasites (Haemoproteus spp.) in New Holland Honeyeaters (Phylidonyris novaehollandiae): evidence for site specificity and fitness costs. Emu 106, 113–118.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வரித்_தேன்சிட்டு&oldid=3477089" இலிருந்து மீள்விக்கப்பட்டது