எலக்ட்ரான் சுற்றுவட்டப்பாதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலத்திரன் அணுப் பரிதியங்களும், மூலக்கூற்றுப் பரிதியங்களும். இவை சுற்றுப் பாதைகளின் வடிவத்துக்கு முழுமையாக ஒத்துவருவன அல்ல என்பதைக் கவனத்தில் கொள்ளவும். அணுப் பரிதியங்கள், மூன்று மாறிகளைக் (இரண்டு கோணங்களும், அணுக்கருவிலிருந்தான தூரமும்) கொண்ட சமன்பாடு ஆகும். எனவே இப் படிமங்கள் பரிதியங்களின் கோணக்கூறுகள் சார்பில் சரியாக அமைகின்றனவே அன்றி, முழுமையான பரிதியங்களை ஒத்தன அல்ல.

அணுப் பரிதியம் அல்லது இலத்திரன் ஒழுக்கு (இலங்கை வழக்கு) என்பது ஒரு அணுவில் உள்ள இலத்திரனின் அலைபோன்ற நடத்தையை விபரிக்கும் ஒரு கணிதச் சார்பு ஆகும். ஒரு குறிப்பிட்ட ஆற்றல் நிலையில், தனி அணுவொன்றின் எப்பகுதியில் இலத்திரன்களைக் காணமுடியும் என்பதை இச் சார்பு மூலம் கணித்துக்கொள்ள முடியும். அணுப் பரிதியம் என்பது, இச் சார்பைக் குறிக்கவோ அல்லது இச் சார்பினால் கணித்து அறியப்படும் "பகுதி"யைக் குறிக்கவோ பயன்படுத்தப்படுவது உண்டு. சிறப்பாக, அணுப் பரிதியங்கள், ஒரு தனியணுவில் உள்ள இலத்திரன் முகிலில் காணப்படும் இலத்திரன் ஒன்றின், இச் சமன்பாட்டினால் விபரிக்கப்படும், குவாண்டம் நிலைகளாக இருக்கலாம்.

முன்னர், கோள்கள் சூரியனை வலம் வருவது போல், இலத்திரன்களும் அணுக்கருவைச் சுற்றி வலம்வருவதாகக் கருதப்பட்டது. இவ்வாறு வலம் வருவதாகக் கருதப்பட்ட இலத்திரன்களின் நடத்தையை விளக்கும் முயற்சியே குவாண்டம் பொறிமுறையின் வளர்ச்சிக்கு வித்திட்டது. குவாண்டம் பொறிமுறையில், அணுப் பரிதியங்கள் ஒரு வெளியில் உள்ள அலைச் சமன்பாடுகளாக விபரிக்கப்படுகின்றன. இவை n, l, m போன்ற பரிதியத்தின் குவாண்டம் எண்களாலோ அல்லது அருகில் உள்ள படிமத்தில் காணப்படுவதுபோல் இலத்திரன் உருவமைப்புக்களில் பயன்படும் பெயர்களாலோ குறிக்கப்படுகின்றன. இலத்திரன்களைத் திண்மத் துகள்களாக விபரிக்க முடியாது. இவற்றை அணுக்கருவைச் சூழவுள்ள வெளியில் பரவியிருப்பனவாக விபரிப்பது கூடிய துல்லியமான ஒப்புமையாக இருக்கும். இதனால் முன்னர் சுற்றுப்பாதை என விபரிக்கப்பட்டது தற்போது அணுப் பரிதியம் எனப்படுகிறது.

மேலும் படிக்க[தொகு]