டைம் பாஸ் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டைம் பாஸ்  
துறை பொழுதுபோக்கு
மொழி தமிழ்
பொறுப்பாசிரியர்: ஆர். சிவகுமார்
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகம் விகடன் (இந்தியா)
வெளியீட்டு இடைவெளி: வார இதழ்

டைம் பாஸ் இதழ் விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் பொழுதுபோக்கு இதழாகும். இது கேலி, கிண்டல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வெளியாகும் வார இதழ். இதன் விலை ஐந்து ரூபாய். அக்டோபர் 10, 2012 அன்று தொடங்கப்பட்டது. இதழ் ஆரம்பிக்கும்போது ‘டைம்பாஸுக்கு எல்லாம் பாஸ்‘ என்ற விளம்பர வாசகத்துடன் வெளியானது. அரசியல், சினிமா, இணையம், தொழில்நுட்பம் தொடங்கி அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நகைச் சுவைகள் வரை வகைதொகையின்றி அளிப்பதுதான் டைம்பாஸ். இது அக்டோபர் 10, 2012 அன்று வாசன் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டது. பிப்ரவரி 18, 2017 தேதியிட்ட இதழிலிருந்து இப்பத்திரிகை நிறுத்தப்பட்டது.

உள்ளடக்கம்[தொகு]

நாட்டில் நடக்கும் பல்வேறு அரசியல், சமூக நிகழ்வுகளைக் கூர்மையான கிண்டலுடன் விமர்சிப்பது டைம்பாஸின் சிறப்பு. முதல் இதழ் வெளியான சமயம், மத்தியில் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. அந்த அரசு சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் மசோதாவைக் கொண்டுவந்தது. இதைக் கிண்டலடிக்கும் விதமான ஒரு போட்டூனை வெளியிட்டிருந்தது டைம்பாஸ். ஒரு பலசரக்குக் கடையில் ஒபாமா முதலாளியாக அமர்ந்திருப்பதைப்போலவும் மன்மோகன்சிங் பொட்டலம் மடிப்பதைப் போலவும் சித்தரித்திருந்தது அந்த போட்டூன். அது தமிழகம் முழுவதும் பரவலான வரவேற்பைப் பெற்றது. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்க்கும் போராட்டங்களில் அந்த போட்டூன் இடம் பெற்ற பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. மைத்ரேயன் தலைமையில் அ.தி.மு.க. எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த்தியபோது அந்த போட்டூன் இடம்பெற்றிருந்த தட்டியைப் பிடித்திருந்தார்கள்.[1]

வெவ்வேறு ஊர்களில் உள்ள வினோதமான மனிதர்களின் வித்தியாசமான நடவடிக்கைகளை டைம்பாஸ் தொடர்ச்சியாக வெளியிடுகிறது. உதாரணத்துக்கு மதுரையில் கலைஞர் வேடம் போடுபவர் ஒருவர் இருக்கிறார். தி.மு.க. தொண்டர் ஒருவர் அவர் வீட்டுத் திருமணத்துக்கு இந்த வாடகை கலைஞரை அழைத்து வந்து திருமணத்தை நடத்தினார். தலைவரே தன் வீட்டுத் திருமணத்தில் கலந்துகொண்டது போன்ற திருப்தி அவருக்கு. இந்தத் திருமணத்தில் கலந்துகொள்வதற்கு அந்த ஒப்பனைக் கலைஞர் வாங்கிய வாடகை 2000 ரூபாய். ‘2000 ரூபாய் கொடுத்தால் வாடகை கலைஞர்’ என்ற தலைப்புடன் ஒரு கட்டுரை டைம்பாஸில் வெளியானது. தன்னைத்தானே விஞ்ஞானி என்று நம்பிக்கொள்பவர்கள், ஜோசியம் பார்க்கிறேன் என்று நகைச்சுவையாளராக ஆகிறவர்கள் என்று ஒருவரையும் விட்டுவைத்ததில்லை.[2][3][4]

ஒரு பரபரப்பான விஷயம் நடந்திருக்கும். காலப்போக்கில் அதை மறந்திருப்போம். அது என்ன ஆச்சு என்று பின் தொடர்ந்து அதைக் கட்டுரையாக்குவது டைம்பாஸின் தனிச்சிறப்பு. உதாரணத்துக்குத் திருச்சியில் குஷ்புவுக்குக் கோயில் கட்டப்பட்ட சம்பவம், அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. பல வருடங்களுக்குப் பிறகு அந்தக் கோயில் கட்டியவர்களைப் பிடித்து, பேட்டி கண்டபோதுதான் தெரிந்தது, அவர்கள் கோயிலே கட்டவில்லை, வெறும் நோட்டீஸ்தான் அடித்தார்கள் என்று. இதுபோல் பல விஷயங்களைச் சொல்லலாம்.[5] [6][7]

டைம்பாஸ் இதழ்களில் வரும் கேலிச்சித்திரங்கள் ஃபேஸ்புக், டிவிட்டர் எனப் பகிரப்படுகிறது. வாசகர்கள் அதை விருப்பம் குறியீடு கொடுக்கிறார்கள். டைம்பாஸ் இதழில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு சொதப்பலாக எடுக்கப்பட்ட சினிமாக்களைக் கடுமையாகக் கிண்டலடித்து விமர்சிப்பார்கள். தமிழ் சினிமாக்களில் காலம் காலமாக நிலவி வரும் க்ளிஷேக்களை விமர்சிக்கும் கட்டுரைகளும் டைம்பாஸில் அதிகம் வெளியாகியிருக்கின்றன.[8][9]

ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் எனும் தொழில்நுட்பங்கள் பற்றி டைம்பாஸில் தொடர்ச்சியாக எழுதிவருகிறார்கள். சூடான விஷயங்கள் பத்தி சுடச்சுட அரசியல் பேட்டிகளும் டைம்பாஸில் இடம்பெறுகின்றன. திருமாவளவன், நெடுமாறன், ஜி. ராமகிருஷ்ணன், துரைமுருகன், பொன். ராதாகிருஷ்ணன், சரத்குமார் என்று அத்தனைக் கட்சி அரசியல் தலைவர்களின் பேட்டிகளும் வெளியாகியிருக்கின்றன. இதேபோல் சினிமா பேட்டிகள் மற்றும் சினிமா செய்திகள், கிசுகிசு ஆகியவை டைம்பாஸ் இதழில் தொடர்ச்சியாக வெளியாகின்றன.[10][11][12]

வரவேற்பு பெற்ற பகுதிகள்[தொகு]

அலசி ஆராய்வது அப்பாடக்கர்[தொகு]

இப்பகுதியில் திரைப்படங்களைப் பற்றிய விமர்சனம் இடம் பெறுகிறது. சினிமா, அரசியல், ஒளிப்பட விமர்சனம், கண்டுபிடி, நகைச்சுவை, கிசுகிசு, அலசி ஆராய்வது அப்பாடக்கர் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. திரைப்படம் மற்றும் அரசியல் தொடர்பான சுவையான செய்திகளைக் கேலியாகக் கூறும் இதழாக வெளிவருகிறது.

  • ஆஃப் தி ரெக்கார்ட்
  • ஃபாரின் சரக்கு
  • சினிமால்
  • படக்கதை
  • மை ரியாக்ஷன்ஸ்

லிட்டில் ஜான்[தொகு]

லிட்டில் ஜான் என்ற தலைப்பில் வயது வந்தோர்களுக்காக நகைச்சுவை அனுபவங்கள் இடம்பெறுகின்றன.

ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் 100 பேருக்கு 100 ரூபா[தொகு]

மிஸ்டு கால் கொடுக்கும் நபர்களிடம் கேள்வி கேட்டு அதற்கு சரியான பதில் கூறியவர்களை 100 பேரை தேர்ந்தெடுத்து 100 ரூபாய் தருகின்ற பகுதி. timepassonline.in என்ற இணைய முகவரியில் ஜெயித்தவர்களின் பட்டியல் இடம்பெறுகின்றது.

புதுசால்ல இருக்கு[தொகு]

இப்பகுதியில் பழைய திரைப்படங்களின் படங்களுடன் புது திரைப்படங்களின் வசனங்களுடன் இணைத்து வெளியிடப்படுகிறது.

நிகழ்வுகள்[தொகு]

வாசகர்களிடம் விதவிதமான போட்டிகள் நடத்தி அதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை பாங்காக் அழைத்துச் சென்றது டைம்பாஸ். ‘அஞ்சே ரூபாயில் பாங்காக் பறக்கலாம்’ என்ற இந்தப் போட்டி வாசகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.[13]

’பண்ணையாரும் பத்மினியும்’ படம் வெளியானதையொட்டி டைம்பாஸ் வாசகர்களிடம் சில கேள்விகளைக் கேட்டு போட்டிகள் நடத்தியது. அதில் தேர்வானவர்கள் விஜய்சேதுபதி உள்ளிட்ட ‘பண்ணையாரும் பத்மினியும்’ படக்குழுவினருடன் சந்தித்து விருந்து சாப்பிட்ட நிகழ்ச்சி நடந்தது. இந்தப் போட்டிகளும் நிகழ்ச்சியும் வாசகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.[14][15]

மேற்கோள்கள்[தொகு]

  1. பெரியண்ணன் & கோ
  2. 2,000 ரூபாய் கொடுத்தால் வாடகை 'கலைஞர்'
  3. நகையைக் காணோமா... மாத்திரை சாப்பிடுங்க!
  4. ஐயய்யோ... நான் அவர் இல்லைங்க!
  5. என்ன ஆச்சு குஷ்பு கோயில்?
  6. 'மைய்ல்' டாக்டரை மறக்க முடியுமா?
  7. பாதியில் நின்ற 'பச்சை மனிதன் !
  8. அஞ்சான்
  9. பிரம்மன் விமர்சனம் - அலசி ஆராய்வது அப்பாடக்கர்![தொடர்பிழந்த இணைப்பு]
  10. “வைகோவை நினைத்து அனுதாபப்படுகிறேன்!”
  11. தலித் மக்கள் பிரச்னைகளை அவர்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டுமா?
  12. ஆளாளுக்கு சினிமாவில் தலையிடுவது சரியில்லை
  13. பாங்காக் பறக்கலாம்!
  14. பண்ணையார் விருந்து சாப்பிடலாம் வாங்க!
  15. விஜய்-அஜித் வரிசையில் நானும் சிவகார்த்திகேயனுமா?
"https://ta.wikipedia.org/w/index.php?title=டைம்_பாஸ்_(இதழ்)&oldid=3214784" இலிருந்து மீள்விக்கப்பட்டது