கொள்கலன் கப்பல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இஸ்தான்புல்லில் ஒரு கொள்கலன் கப்பல்

காவிச் செல்லுகின்ற எல்லாப் பொருட்களையுமே, கொள்கலனாக்கம் (containerization) என்னும் முறை மூலம், பெரிய உலோகக் கொள்கலன்களில் அடைத்துக் காவிச்செல்லுகின்ற சரக்குக் கப்பல் கொள்கலன் கப்பல் (Container ship) எனப்படுகின்றது. இன்றைய வணிக ரீதியிலான பெருங்கடல் போக்குவரத்தில் இவை பெரும் பங்கு வகிக்கின்றன.[1][2][3]

வரலாறு[தொகு]

உலகின் முதல் கொள்கலன் கப்பல்கள், இரண்டாம் உலகப் போரின் பின்னர் மேலதிகமாக இருந்த தாங்கிக் கப்பல்களில் மாற்றம் செய்து உருவாக்கப்பட்டன. முதலாவது கொள்கலன் கப்பல் T-2 தாங்கிக் கப்பலிலிருந்து மாற்றியமைக்கப்பட்ட ஐடியல்-எக்ஸ் (Ideal-X) என்னும் கப்பலாகும். இது மல்கொம் மக்லீன் (Malcom McLean) என்னும் நிறுவனத்துக்குச் சொந்தமாக இருந்தது. ஏப்ரல் 1956 ஆம் ஆண்டில், இதன் முதல் பயணத்தில், நியூ ஜெர்சியிலுள்ள நெர்வாக்குக்கும், டெக்சாசிலுள்ள ஹூஸ்டனுக்கும் இடையே 58 கொள்கலன்களைக் காவிச் சென்றது.

இன்றைய கொள்கலன் கப்பல்கள் தேவைக்காக வடிவமைத்துக் கட்டப்பட்டவையாகும். இன்றைய பெருங்கடல்களில் பயணம் செய்யும் கப்பல்களில், எண்ணெய் தாங்கிக் கப்பல்களுக்கு அடுத்தபடியாக அளவில் பெரியவையாக இருப்பவை இவையே.

அமைப்பு[தொகு]

பெல்ஜியத்தின் சீபுறூக் துறைமுகத்தில் நிற்கும் ஒரு கொள்கலன் கப்பல்.

இடம் வீணாகாது இருக்கும் வகையில் கொள்கலன் கப்பல்கள் வடிவமைக்கப்படுகின்றன. இவற்றின் கொள்ளளவு டீஇயூ (TEU) க்களில் அளக்கப்படுகின்றது. இது இருபது-அடி சம அளவு அலகுகள் (Twenty-foot equivalent units) என்பதன் சுருக்கமாகும். இது குறிப்பிட்ட கப்பல் 20 அடி நீளம் கொண்ட எத்தனை கொள்கலன்களைக் கொள்ளக் கூடியது என்பதைக் குறிக்கும். இன்றைய கொள்கலன்களில் பெரும்பாலானவை 40 அடி நீளம் கொண்டவை.

ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேற்பட்ட கொள்கலன் கப்பல்களில் பாரந் தூக்கிகள் பொருத்தப்படுவதில்லை. இவற்றிலிருந்தான ஏற்றி இறக்கும் வேலைகளுக்குத் துறைமுகங்களில் பாரந்தூக்கி வசதிகள் தேவைப்படுகின்றன. 2900 டீஇயுக்களுக்குக் குறைந்த அளவுள்ள கப்பல்களில் பொதுவாகப் பாரந்தூக்கிகள் பொருத்தப்பட்டிருப்பது வழக்கம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Joint Chief of Staff (2005-08-31). "Bulk cargo" (PDF). Department of Defense Dictionary of Military and Associated Terms. Washington: Department of Defense. p. 73. Archived from the original (PDF) on June 4, 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-02-22.
  2. From the American Heritage dictionary definition available on-line at Houghton Mifflin Company (2003). "Break bulk". The American Heritage Dictionary of the English Language, Fourth Edition. Huntingdon Valley, PA: Farlex Inc. பார்க்கப்பட்ட நாள் 2011-02-22..
  3. Lewandowski, Krzysztof (2016). "The containers ships, which really was the first?". Transport Means 2016, Proceedings of the 20th International Scientific Conference, October 5–7, 2016, Juodkrante, Lithuania.: 668–676. பன்னாட்டுத் தர தொடர் எண்:1822-296X. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொள்கலன்_கப்பல்&oldid=3893702" இலிருந்து மீள்விக்கப்பட்டது