வை. கோவிந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சக்தி வை. கோவிந்தன்
தமிழ்ப் பதிப்புலகின் தந்தை
தமிழ்ப் பதிப்புலகின் தந்தை
பிறப்பு(1912-06-12)சூன் 12, 1912
இராயபுரம், புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
இறப்புஅக்டோபர் 16, 1966(1966-10-16) (அகவை 54)
சென்னை
தொழில்பதிப்பாளர்
தேசியம்இந்தியர்
கல்விஎட்டாம் வகுப்பு

சக்தி வை. கோவிந்தன் ஒரு தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இதழியலாளரும் எழுத்தாளரும் ஆவார். கோவிந்தன் 'சக்தி அச்சகம்' என்ற அச்சகத்தை நிறுவி, இதழ், மலர், பதிப்பகம் ஆகியவற்றை உருவாக்கியதால் 'சக்தி வை. கோவிந்தன்' என அழைக்கப்படுகிறார். காந்தியக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட இவர் 'தமிழ் பதிப்புலகின் தந்தை' எனப் புகழப்படுகிறார். குழந்தை எழுத்தாளர் சங்கம் என்னும் சங்கத்தை நிறுவி அதன் தலைவராகச் சிறிது காலம் பணியாற்றியவர்.[1]

இளமைக்காலம்[தொகு]

சக்தி அச்சகத்தின் விளம்பரம்

கோவிந்தன் 12-6-1912ஆம் நாள் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள இராயபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தார். உள்ளூரிலேயே எட்டாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் பர்மாவில் வணிகம் செய்துகொண்டிருந்த தன் தந்தைக்கு உதவுவதற்காகப் பர்மாவிற்குச் சென்றார். அங்கு தந்தையின் தேக்கு மர ஆலையிலும் செட்டிநாடு பாங்கிலும் வேலை செய்தார். வட்டிக்குப் பணம் கொடுத்து, மக்களைக் கசக்கிப் பிழிந்து அப்பணத்தைத் திரும்பப் பெறும் வழக்கம் கோவிந்தனுக்குப் பிடிக்கவில்லை. எனவே 1934ஆம் ஆண்டில் தன்னுடைய ஊருக்குத் திரும்பினார். குடும்ப வறுமையின் காரணமாகக் கோவிந்தன் அவர்தம் பங்காளியான வைரவன் செட்டியார், முத்தையாச்சி இணையருக்குத் தத்துக் கொடுக்கப்பட்டார்.[2][3]

அச்சகமும் இதழ்களும்[தொகு]

கோவிந்தன், 1935ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சென்னைக்கு வந்தார். அங்கே தனது கையிலிருந்த ஒரு இலட்சத்தைக் கொண்டு சக்தி என்னும் அச்சகத்தையும் 1935ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுத்தானந்த பாரதியாரை ஆசிரியராகக் கொண்டு சக்தி என்னும் திங்கள் இதழையும் தொடங்கினார்.[2] இந்த இதழ் 1950ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் வரை தொடர்ந்து வெளிவந்தது. பின்னர் சற்று இடைவெளிக்குப் பின்னர், 1953 ஆம் ஆண்டு நவம்பரில் தொடங்கி 1954ஆம் ஆண்டில் சில மாதங்கள் வரை இவ்விதழ் வெளிவந்தது.[4] இவ்விதழின் ஆசிரியராக யோகி. சுத்தானந்த பாரதியாருக்குப் பின்னர், தி. ஜ. ரங்கநாதன், சுப. நாராயணன், கு. அழகிரிசாமி, விஜய பாஸ்கரன் ஆகியோர் பணியாற்றினர். இறுதியில் வை. கோவிந்தனே ஆசிரியர் பொறுப்பில் இருந்தார்.[2]


சக்தி மாதம் ஒரு நூல் வரிசையில் வெளிவந்த நூலொன்றின் அட்டைப்படம்
சக்தி காரியாலயம் வெளியிட்ட நூலொன்றின் அட்டைப்படம்
சக்தி மலர் வரிசை நூல்களில் ஒன்று
சக்தி வை. கோவிந்தனைப் பற்றிய ஆய்வு நூல்

மேலும் அணில், பாப்பா, குழந்தைகள் செய்தி என்னும் குழந்தைகள் இதழ்களையும் மங்கை என்னும் பெண்களுக்காக மாத இதழையும் சிறுகதைகளை மட்டுமே கொண்ட கதைக்கடல் என்னும் மாத இதழையும் திரை இதழ் ஒன்றையும் நடத்தினார்.

அணில் இதழுக்குத் தமிழ்வாணன் சிறிதுகாலம் ஆசிரியராக இருந்தார். மங்கை இதழுக்குக் குகப்பிரியை ஆசிரியராக இருந்தார். குழந்தைகள் செய்தி இதழுக்குக் கோவிந்தனே ஆசிரியராக இருந்தார்.

மாதம் ஒரு புத்தகம்[தொகு]

உலகப்போர் நேரத்தில் கிழமை இதழ், திங்கள் இதழ் ஆகியன போன்ற கால இதழ்களுக்குத் தாள் தட்டுப்பாடு ஏற்பட்டது. எனவே திங்களுக்கு ஒரு தொகுப்பு நூல் எனப் பல தொகுப்பு நூல்கள் வெளிவந்தன. அவ்வகையில் சக்தி வை. கோவிந்தனும் வெவ்வேறு எழுத்தாளர்கள் எழுதிய கதை, கட்டுரை, கவிதை ஆகியவற்றைத் தொகுத்து சக்தி என்னும் பெயரில் திங்கள்தோறும் ஒரு தொகுப்பு நூலை ஒரு ரூபாய் விலையில் 1930ஆம் ஆண்டு திசம்பர் முதல் வெளியிட்டார். இந்நூல் வரிசைக்குத் தொ. மு. சி. ரகுநாதனும் கு. அழகிரிசாமியும் பொறுப்பாசிரியர்களாக இருந்தனர். கோவிந்தன் பதிப்பாசிரியராக இருந்தார். இவ்வரிசையில் ஆணா? பெண்ணா?, தர்ம ரட்சகன், ஜீவப்பிரவாகம், திரிவேணி முதலிய 141 நூல்கள் வெளிவந்தன.

பதிப்பகங்கள்[தொகு]

சக்தி வை. கோவிந்தன் முதலில் அன்பு நிலையம் என்னும் பதிப்பகத்தை 1938ஆம் ஆண்டில் தொடங்கினார். அதன் வழியாகச் சுத்தானந்த பாரதியார் மொழிபெயர்த்த விக்டர் கியூகோவின் புதினங்களான ஏழைபடும்பாடு, இளிச்சவாயன் ஆகியவற்றை முறையே 1938, 1939ஆம் ஆண்டுகளில் வெளியிட்டார்.[5]

1939ஆம் ஆண்டில் சக்தி காரியாலயம் என்னும் பதிப்பகத்தைத் தொடங்கி இருநூற்று ஐம்பது நூல்கள் வரை வெளியிட்டார். அவற்றுள் சில:

வ. எண் நூலின் பெயர் நூலாசிரியர் மொழிபெயர்ப்பாளர் ஆண்டு
01 அகண்ட இந்தியா கே. எம். முன்ஷி
02 அபேதவாதம் சி. ராஜகோபாலாச்சாரி தி.ஜ.ர
03 அலமு சூடாமணி
04 அறிஞர் மார்க்ஸ் ஆர். ராமனாதன்
05 அன்ன கரினா டால்ஸ்டாய்
06 உணவுப் பஞ்சம் மு. அருணாசலம்
07 வ. உ. சிதம்பரம் பிள்ளை சரித்திரம் பரலி சு. நெல்லையப்பர்
08 உலோகங்களும் நாமும் மு. அருணாசலம்
09 ஐந்தாவது சுதந்திரம் லெட்சுமி கிருஷ்ணமூர்த்தி
10 ஏசுநாதர் போதனை ஜே. சி. குமரப்பா
11 கம்ப ராமாயணம்
12 காந்தி மகான் கதை கொத்த மங்கலம் சுப்பு
13 காய்கறித் தோட்டம் மு. அருணாசலம்
14 அழகிரிசாமியின் கதைகள் கு. அழகிரிசாமி
15 சிற்றன்னை புதுமைப்பித்தன்
16 சுகுண சுந்தரி வேதநாயகம் பிள்ளை
17 சிலையும் குருவியும் ஆஸ்கர் வைல்டு
18 சிவப்புக் குதிரைக்குட்டி ஜான் ஸ்டீன்பெக்
19 சூரிய நமஸ்காரம் டி. வி. திரிவேதி
20 செல்வம் க. சந்தானம்
21 சோவியத் ருஷ்யா
22 தந்தையின் காதலி மார்க்சிம் கார்க்கி
23 பாரதியார் சரித்திரம் செல்லம்மா பாரதி
24 மகாகவி பாரதியார் கவிதைகள்
25 மகாகவி பாரதியார் வ.ரா
26 ரத்தக் களரி நேதாஜி
27 போரும் அமைதியும் லியோ டால்ஸ்டாய் டி. எஸ். சொக்கலிங்கம்
28 பிளேட்டோவின் அரசியல் பிளேட்டோ வெ. சாமிநாத சர்மா
29 லெனின் பிறந்தார் ஆர்.ராமனாதன்
30 குழந்தைமை ரகசியம் மாண்டிசோரி
31 இந்திய அரசியல் சட்டம்
32 திருக்குறள் (1957-சூலை -3) பரிமேலழகர்
34 பாழ் நிலம் டி. எசு. எலியட்
35 கட்டுரைகள் ஆனந்த குமாரசாமி
36 பழத் தோட்டம் மு. அருணாசலம்
37 வாழைத் தோட்டம் மு. அருணாசலம்
38 பெண் மனம் லட்சுமி
39 பவானி லட்சுமி
40 காதல் வாஸிலெவ்ஸ்கா
41 கன்னிகா தொ. மு. சி. ரகுநாதன்
42 வைஜந்தியின் காதல் சித்ரா
43 முத்ரா ராசஸம் (நாடகம்)
44 டால்ஸ்டாய் சிறுகதைகள் 1 & 2 டால்ஸ்டாய் கு.ப.ராஜகோபாலன், ரா.விசுவநாதன் 1941
45 வாசந்தி
46 சாந்தி எங்கே?
47 கதைக் கடல்-1
48 கதைக் கடல்-2
49 கதைக் கடல்-3
50 கதைக் கடல்-4
51 கதைக் கடல்-5
52 கதைக் கடல்-6: பெண்சாதி முதலிய கதைகள் தி.நா.சுப்பிரமணியன் (பதி) 1946 நவம்பர்
53 சஞ்சீவி குகப்ரியை
54 எரிமலை அல்லது முதலாவது இந்திய சுதந்திர யுத்தம் வீர சாவர்க்கர் ஜெயமணி சுப்பிரமணியம்
55 கூண்டுக்கிளி (வங்காள நாடகங்கள் 5) ஹரிந்திரநாத் சட்டோபாத்தியாய தி.ஜ.ர 1941
56 கமலா முதலிய சிறுகதைகள் ஆர். திருஞானசம்பந்தம் 1942
57 இராமகிருஷ்ணர் அருள்வாக்கு 1942
58 தமிழர் யார்? நாரண துரைக்கண்ணன் 1939
59 ஜீவப்பிரவாகம்? கு.அ மற்றும் பலர் 1950
60 தர்மரட்சகன் மொழிபெயர்ப்பு கு.அ (குஸ்தாவ் ப்ளாபர்ட் ஜுலியஸ் 1950

பென்குயின் பதிப்பகத்தின் புத்தகங்களுக்கு இணையாக நல்ல தாளில், நேர்த்தியான அச்சில், அழகிய படங்களோடு ஏறத்தாழ 40 நூல்களைச் சக்தி மலர் என்னும் தலைப்பின் கீழ் வரிசையாக வெளியிட்டார். அவற்றுள் சில:

வ. எண் நூலின் பெயர் நூலாசிரியர் மொழிபெயர்ப்பாளர்
01 இனி நாம் செய்ய வேண்டுவது யாது? டால்ஸ்டாய்
02 உலகம் சுற்றும் தமிழன் ஏ. கே. செட்டியார்
03 ஜப்பான் ஏ. கே. செட்டியார்
04 அமெரிக்கா ஏ. கே. செட்டியார்
05 பிரயாண நினைவுகள் ஏ. கே. செட்டியார்
06 எருவும் எருஇடுதலும் மு. அருணாசலம்

சங்கப் பொறுப்புகள்[தொகு]

குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் உதவியோடு குழந்தை எழுத்தாளர் சங்கம் என்னும் சங்கத்தைக் கோவிந்தன் உருவாக்கினார். அதன் தலைவராகச் சிலகாலம் பணியாற்றினார்.

கல்கி இரா. கிருட்டிணமூர்த்தி, தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவாக இருந்தபொழுது வை. கோவிந்தன் அதன் துணைத் தலைவராக இருந்தார். தென்னிந்தியப் புத்தகத் தொழில் கழகத்தின் பொருளாளராகவும், தலைவராகவும் பணியாற்றினார். அப்பொழுது 'வீட்டுக்கொரு நூலகம்' என்னும் முயற்சியில் ஈடுபட்டார்.

குடும்பம்[தொகு]

அழகம்மை என்பவரைக் கோவிந்தன் மணந்தார். சில ஆண்டுகளில் அவர் மறைந்த்தும் புதுச்சேரி அரவிந்தர் ஆஸ்ரமத்தில் துறவு பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். பின்னர் சிலரின் அறிவுரைப்படி 1946இல் மு.அ. செல்லப்ப செட்டியாரின் மகள் வள்ளியம்மையை மறுமணம் புரிந்தார்.[5]

எழுதிய நூல்கள்[தொகு]

வாழ்வின் இறுதிப்பகுதியில் வை. கோவிந்தன் தானே எழுத்தாளராக மாறிச் சில நூல்களை எழுதினார். அவற்றுள் சில:

  1. வை. கோ.வின் குழந்தைக் கதைகள்
  2. பாப்பாவுக்குக் கதைகள்
  3. மரம் பறந்தது
  4. அணில் அண்ணன் கதைகள்
  5. நான்கு முட்டாள்கள்
  6. அலாவுதீனும் அற்புத விளக்கும்
  7. வை. கோ.வின் ஈ.சாப் குட்டிக் கதைகள்
  8. தமிழ்நாட்டு நாடோடிக் கதைகள்
  9. தவளைக் குளம்
  10. நச்சு மரம்
  11. கடலோடியின் கதை
  12. கூனன் கதை

இறப்பு[தொகு]

வாழ்வின் இறுதிப் பகுதியில் வறுமையின் வாய்ப்பட்ட சக்தி வை. கோவிந்தன் சென்னையில் ஒரு விடுதியில் 1966அக்டோபர் – 16ஆம் நாள் மரணமடைந்தார்.

சக்தி வை.கோ.வைப் பற்றி[தொகு]

சக்தி வை. கோவிந்தனைப் பற்றி அவருடைய நூற்றாண்டை ஒட்டி, சக்தி வை. கோவிந்தன் தமிழின் முன்னோடிப் பதிப்பாளுமை என்னும் நூலைப் பழ. அதியமான் எழுதியிருக்கிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. ஆதி வள்ளியப்பன் (15 நவம்பர் 2016). "சிறார் இலக்கியச் சாதனையாளர்கள்". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 20 நவம்பர் 2016.
  2. 2.0 2.1 2.2 http://www.appusami.com/v211/v211vaigovindhan.asp[தொடர்பிழந்த இணைப்பு]
  3. http://tamil.thehindu.com/opinion/columns/article24142105.ece?utm_source=HP&utm_medium=hp-editorial
  4. http://www.tamilonline.com/thendral/morecontent.aspx?id=31&cid=14&aid=2744
  5. 5.0 5.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-11-17. பார்க்கப்பட்ட நாள் 2012-09-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வை._கோவிந்தன்&oldid=3712806" இலிருந்து மீள்விக்கப்பட்டது