விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஏப்ரல் 22, 2012

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வானூர்தி தாங்கிக் கப்பல் என்பது வானூர்திகளை வானில் செலுத்துவதற்கும், பின்னர் திரும்ப இறக்குவதற்குமான வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட ஒரு போர்க் கப்பலைக் குறிக்கும். இக் கப்பல்கள் கடலில் செல்லும் ஒரு வானூர்தித் தளமாகச் செயற்படுகின்றன. இதனால், ஒரு கடற்படை தனது வான் வலிமையை நீண்ட தூரம் கொண்டு செல்வதற்கு, வானூர்தி தாங்கிக் கப்பல்கள் உதவுகின்றன. ஒரு கடற்படை உலகின் எப்பகுதியிலும் அப்பகுதியில் உள்ள வானூர்தித் தளங்களை நம்பி இராமல் வான் தாக்குதல்களை நடத்துவதற்கு வழி செய்கின்றன. மரக் கலங்களில் பலூன்களைக் காவிச்சென்றதில் இருந்து அணுவாற்றலில் இயங்கும் கப்பல்களில் நிலைத்த சுழல் இறக்கைகளைக் கொண்ட பல வானூர்திகளைக் காவிச்செல்லும் அளவுக்கு வானூர்தி தாங்கிக் கப்பல்கள் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளன. கடல் ஆளுமை பெற இன்றைய ஆழ்கடற் படைகளுக்கு இவ்வகைக் கப்பல்கள் இன்றியமையாதவையாக உள்ளன. மேலும்...


இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு என்பது பிரித்தானியரை வெளியேற்றி இந்தியாவை சுதந்திர நாடாக்க ஆயுதம் ஏந்திப் போராடிய ஒரு புரட்சி அமைப்பு. 1924ல் துவக்கப்பட்ட இவ்வமைப்பு 1930கள் வரை வன்முறை, தீவிரவாத உத்திகளைக் கொண்டு பிரித்தானிய ஆட்சியினை எதிர்த்து வந்தது. பகத் சிங், சுக்தேவ் தபார், ராஜ்குரு, சந்திரசேகர ஆசாத் ஆகியோர் இவ்வமைப்பின் முக்கிய உறுப்பினர்கள். ராம் பிரசாத் பிசுமில் இதன் முன்னோடி அமைப்பான இந்துசுத்தான் குடியரசு அமைப்பின் முக்கிய உறுப்பினர். வெளியுலகிற்குத் தெரிந்த இதன் முதல் நடவடிக்கை 1925 இல் நடத்தப்பட்ட ககோரி தொடருந்துக் கொள்ளை ஆகும். ஆஷ்ஃப்க்குல்லா கான், ராம்பிரசாத் பிஸ்மில், ரோஷன் சிங், ராஜேந்திர லகிரி ஆகியோர் காகோரி சதி வழக்கில் தூக்கிலிடப்பட்டனர். தில்லியில் மத்திய சட்டமன்றத்தின் மீது குண்டு வீசியது இந்த அமைப்பு நடத்திய அடுத்த முக்கிய நடவடிக்கை. 1931ல் பகத் சிங், சுக்தேவ். ராஜ்குரு மூவரும் தூக்கிலிடப்பட்டனர். மேலும்...