நல்வேட்டனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நல்வேட்டனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். 5 பாடல்கள் இவர் பாடியனவாகச் சங்கநூல்களில் உள்ளன. அவை குறுந்தொகை 341, நற்றிணை 53, 210, 292, 349 ஆகியவை. இவை அனைத்தும் அகத்திணைப் பாடல்கள்.

நல்ல வேட்கை உள்ளவராக இவர் கூறும் சில உலகியல் நெறிகள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. இவரது இந்த நல்ல வேட்கையால் இவரது பெயர் நல்வேட்டனார் என அமைந்ததாகவும் கொள்ளலாம்.

பாடல்களில் நல்வேட்டனார் சொல்லும் செய்தி[தொகு]

உலகியல்[தொகு]

  • 'பெரியோர் நெஞ்சத்துக் கண்ணிய ஆண்மை கடவது அன்று' (பெரியவர்களின் ஆண்மை கட்டுப்படாது போலும்) - குறுந்தொகை 341
  • சேர்ந்தோரின் துன்பத்திற்கு அஞ்சி இரக்கம் கொண்டு போக்குவதே சான்றோர் செல்வம் - நற்றிணை 210

செஞ்சொல்[தொகு]

  • புன்கண் = துன்பம்
  • மென்கண் = இரக்கம்

குறுந்தொகை 341[தொகு]

  • திணை - நெய்தல்

மீள்வேன் என்ற கார்ப்பருவத்திலும் தலைவன் மீளாமை கண்டு தலைவி கவலைப்படுவாள் என்று எண்ணித் தோழி தலைவிக்கு ஆறுதல் தரும் வகையில் சொல்கிறாள்.

குரவ மரம் படர்ந்து பூத்திருக்கிறது. புன்க மரம் பொறிப் பொறியாய்ப் பூத்திருக்கிறது. இப்போதும் அவர் வந்து என்னைப் பேணவில்லை. என்றாலும் நான் நெஞ்சைக் கல் போல் வலிதாக்கிக்கொண்டு வாழ்கிறேன்.

நற்றிணை 53[தொகு]

  • திணை - குறிஞ்சி

தலைவியின் காதல் அன்னைக்குத் தெரிந்துவிட்டதோ என்னவோ? என்ன நினைத்திருக்கிறாளோ தெரியவில்லை. பெருமழை பொழிந்திருக்கும் நள்ளிரவில் 'கான்யாறு மூலிகை இலைகளையும், பூக்களையும் அடித்திழுத்துக்கொண்டு வருகிறது. அது உன் பனி(மனநடுக்கம்) போக்கும் மருந்தாக அமையும். அதனை குளுமையோடு உண்டு, அதில் நீராடிவிட்டு வாருங்கள்' என்கிறாள்.

நற்றிணை 210[தொகு]

  • திணை - மருதம்

தோழி தலைமகனை நெருங்கி வற்புறுத்தும் சொற்கள் இவை. சேர்ந்தோரின் துன்பத்தைப் போக்கும் இரக்கமே சான்றோரின் செல்வம் ஆகும். ஊர! கூடையில் விதை கொண்டு சென்றவர் விதைத்துவிட்டு மீளும்போது அக் கூடையில் மீனோடு திரும்புவது உன் நாட்டு வளம். (நீ பரத்தையோடு மீண்டுவிடாதே) உன்னைச் சேர்ந்த என் துன்பத்தைப் போக்கு.

நற்றிணை 292[தொகு]

  • திணை - குறிஞ்சி

தலைவனை இரவில் வரவேண்டாம் என்று தலைவியும் தோழியும் கூறுகின்றனர். தமாலம் கொடியை இடுப்பில் கட்டிக்கொண்டு பாறை இடுக்குகளுக்கு இறங்கி வழியில் தேன் எடுத்துக்கொண்டிருப்பர். யானைகள் தமக்குள் சண்டையிட்டுக்கொண்டிருக்கும். குறுக்கிடும் கான்யாற்று வழியில் கராம்முதலைகள் இரை தேடிக்கொண்டிருக்கும். இப்படிப்பட்ட வழியில் இரவில் இவளை அடைய இரவில் வரவேண்டாம்.

நற்றிணை 349[தொகு]

  • திணை - நெய்தல்

தலைமகள் தோழியிடம் சொல்கிறாள்.

நானோ அவர் உறவை ஊர் அறிந்துவிடுமோ என்று எண்ணித் துன்புற்றுக்கொண்டிருக்கிறேன். அவரோ போரில் புண்பட்டுக் கிடப்பவரைச் சுற்றிப் பேய் திரிவது போல என்னைச் சுற்றிச் சுற்றித் திரிகிறார். என்ன செய்வேன்?

விளையாட்டு[தொகு]

கானல் நிலத்தில் அடும்பு மலர் கொய்தல், கழி நிலத்தில் தாழம்பூ பறித்தல், நீர்நிலையில் நெய்தல் பூ பறித்தல் போன்ற விளையாட்டுகளில் தேரில் வந்த அவர் இறங்கி நடந்துவந்து தலைவியோடு விளையாடுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்வேட்டனார்&oldid=3424140" இலிருந்து மீள்விக்கப்பட்டது