உருபன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உருபனியலில், உருபன் என்பது பொருள் குறித்து நிற்கும் மிகச் சிறிய மொழியியல் அலகு ஆகும். ஒவ்வொரு சொல்லும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உருபன்களால் ஆனது. ஒரு சொல்லின் பொருளை அறிய உருபன்களை பிரித்து அவற்றின் பொருள்களை அறிதல் உதவும்.

பேச்சு மொழியில் உருபன்கள், மொழியியல் அடிப்படையில் வேறுபடுத்தப்படக்கூடிய ஒலியின் மிகச் சிறிய அலகான ஒலியன்களால் ஆனவை. உருபன், சொல் ஆகியவற்றுக்கிடையே நெருங்கிய தொடர்பு இருந்தபோதும், இவ்விரு கருத்துருக்களும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவை. பல ஒலியன்கள், தனிச் சொல்லாக நின்று பொருள்தரமாட்டா. உருபன் ஒன்று தனியாகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உருபன்கள் சேர்ந்தோ சொல்லை உருவாக்குகின்றன. எடுத்துக்காட்டாக:

வாழ் ஒரு உருபன்
கிறு ஒரு உருபன்
ஆன் ஒரு உருபன்

இம்மூன்று உருபன்களும் சேர்ந்து வாழ்கிறான் (வாழ் + கிறு + ஆன்) என்னும் சொல்லை உருவாக்குகின்றன. இச்சொல்லை உருவாக்கிய உருபன்களில் வாழ் என்ற உருபன் தனியாக நின்றும் பொருள்தரும் சொல்லாகக்கூடியது. ஆனால், கிறு என்னும் உருபனோ அல்லது இச்சொல்லில் வரும் பொருளில் ஆன் என்னும் உருபனோ தனித்துப் பொருள் குறிக்கும் ஆயினும் தனிச் சொல்லாவதில்லை. கிறு என்பது தனிச் சொல்லாகாவிட்டாலும் அது நிகழ் காலப் பொருள் குறித்து நிற்பதனால் அது ஒரு உருபன் எனப்படுகிறது. இவ்வாறே ஆன் என்பது ஆண்பால் குறித்து நிற்பதால் அதுவும் உருபன் ஆகிறது. இவ்வாறு தனித்தே சொல்லாகக்கூடிய உருபன்கள் கட்டற்ற (free) உருபன்கள் எனவும், அவ்வாறில்லாது இன்னொரு உருபனுடன் சேரும்போதே சொல் ஆகக்கூடிய உருபன்கள் கட்டுற்ற (bound) உருபன்கள் எனவும் வழங்கப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உருபன்&oldid=2740686" இலிருந்து மீள்விக்கப்பட்டது