விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சூலை 24, 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அதலை என்பது பாகலுடன் நெருங்கிய மரபுவழித் தொடர்பு கொண்ட ஒரு கொடி இனமாகும். இது தமிழ் நாட்டிலும் இந்தியாவின் பிற தென் மாநிலங்களில் மகாராட்டிரத்திலும், கருநாடகத்திலும், ஆந்திராவிலும் காணப்படுகிறது. பாகற்காய்களைப் போலவே கசப்பான சுவை கொண்ட அதலைக்காய்கள் உடல்நலத்துக்கு உதவும் பல மருத்துவத் திறங்களைக் கொண்டுள்ளன. குறிப்பாக நீரிழிவு, குடற்புழு போன்ற இடர்களுக்கு மருந்தாகப் பயன்படுகின்றன. சில வேளைகளில் கருக்கலைப்புக்கும் இவற்றைப் பயன்படுத்துகின்றனர். அதலைச்செடிகள் பொதுவாக இயல்பில் தரையில் படர்பவை. சில வேளைகளில் வயற்காடுகளில் வரப்புகளில் இவற்றை வளர்க்கும்போது வேறு செடிகளிலோ கொம்புகளிலோ பற்றிப் படர்கின்றன. பல ஆண்டுகள் வாழும் இச்செடி ஒவ்வொரு ஆண்டும் வறட்சிக் காலத்தில் காய்ந்து விழுந்து விட்டாலும் மண்ணுக்கடியில் உள்ள கிழங்கு உயிருடன் இருக்கும். தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் அதலை விளையும் பிற பகுதிகளிலும் நெடுங்காலமாக நீரிழிவு, குடற்புழு போன்றவற்றுக்கான நாட்டுமருந்தாகவும், சில வேளைகளில் கருக்கலைப்புக்கும் பயன்படுத்தி வந்துள்ளனர். நீரில் கரைத்த அதலைக்காய்கள் நீரிழிவுக்காட்பட்ட முயல்களில் குருதியில் இருந்த குளுக்கோசின் அளவைக் குறைப்பதாகவும் அறியப்பட்டுள்ளது. மேலும்...


பிரிக் நாடுகள் என்பது பொருளாதார வல்லரசாக மாறும் வாய்ப்புள்ள வளரும் நாடுகளான பிரேசில், உருசியா, இந்தியா, சீனா ஆகியவற்றின் கூட்டமைப்பைக் குறிக்கும். ”பிரிக்” என்ற பெயரை கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தின் உலகப் பொருளாதார ஆய்வு வல்லுனர் ஜிம் ஓநீல் சூட்டினார். பிரிக் நாடுகள் நான்கும் 2050-ஆம் ஆண்டுவாக்கில் உலகின் தற்போதையப் பணக்கார நாடுகளை விட அதிகளவு வளர்ச்சி பெற்றிருக்கும். மேலும், இந்நாடுகள் உலக நிலப்பரப்பில் 25 விழுக்காட்டிற்கு மேலும் உலக மக்கள்தொகையில் 40 விழுக்காட்டிற்கு மேலும் பெற்றுள்ளன. மெக்சிகோ, தென் கொரியா ஆகிய நாடுகள் மட்டுமே ஒப்பீட்டளவில் பிரிக் நாடுகளுடன் வளர்ச்சி பெற்று வருபவையாக உள்ளன. ஆனால், 2005ஆம் ஆண்டு ஆய்வின்படி இவ்விரு நாடுகளும் வளர்ச்சியடைந்தவையாகக் கருதப்பட்டதால் இப்பட்டியலில் இணைக்கப்படவில்லை. பிரிக் கூட்டமைப்பின் முதல் மாநாடு 2009, சூன் 16 அன்று உருசியாவின் எகடேரின்பர்க் நகரில் நடந்தது. இதில் பல்முனை உலக ஒழுங்கை மையப்படுத்தி அறைகூவல் விடுக்கப்பட்டது. மேலும் உலகப் பணப் பரிமாற்றத்தில் அமெரிக்க டாலர் ஆதிக்கத்தின் மீதான நேரடித் தாக்குதலாக இந்த ஆலோசனை அமைந்தது. மேலும்...