குப்பை சந்தை (ஹொங்கொங்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சம் சுயி போ நகரில் உள்ள ஒரு வீதியில், ஹொங்கொங்கில் இலத்திரனியல் குப்பைகளாக அகற்றப்படும் பொருட்களை சேகரித்து வாகனத்திற்கு ஏற்றப்படும் காட்சி, வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக, கீழே வைக்கப்பட்டிருக்கும் இலத்திரனியல் பொருட்கள்

குப்பை சந்தை என்பது ஹொங்கொங்கில், சம் சுயி போ மாவட்டத்தில், சம் சுயி போ நகரில் இருக்கும் ஒரு சந்தையாகும். இதனை ஹொங்கொங் கண்டோனிசு மொழியில், லக்சப் எனும் சொல்லையும் மார்கெட் எனும் ஆங்கிலச் சொல்லையும் இணைத்து லக்சப் மார்கெட் என அழைக்கப்படுகிறது. இதனை சந்தை என அழைக்கப்பட்டாலும், இந்த வணிகம் சம் சுயி போ நகர் எங்கிலும் பரந்து காணப்படுகின்றது. அதாவது "சம் சுயி போ" என்றாலே இலத்திரனியல் கழிவு பொருட்களின் வணிக மையமாகவே உள்ளூரில் புகழ்பெற்று விளங்குகிறது.

அமைவிடப்பரப்பு[தொகு]

இந்த அகற்றப்படும் இலத்திரனியல் பொருட்களை சேகரிக்கும், விற்பனை செய்யும், கொள்கலன்களுக்கு ஏற்றும் தொழில்கள் நடைபெறும் இவ்விடத்தை "லக்சப் மார்கெட்" என்று அழைக்கப்பட்டாலும், இது ஒரு சந்தைப் போன்று ஒரு வீதியிலோ அல்லது ஒரு கட்டடத்திலோ நடைபெறுவதில்லை. மாறாக சிம் சா சுயி நகரின் பெரும் நிலப்பரப்பு எங்கும் இடையிடையே கிட்டத்தட்ட 2 - 3 சதுர கிலோ மீட்டர் அளவில் நடைபெறுகிறது. இவ்வணிகம் நடைபெறும் கடைகள் உள்ள இடம், ஐந்து பேருந்து சாலைகளும், பல குறுக்குத் தெருக்களும் உள்ளடங்களான பரவலானப் பகுதியாகும்.

விற்பனைப் பொருட்கள்[தொகு]

பழுதுப் பார்த்து வாகனங்களுக்கு ஏற்ற தயார் நிலையில் பாதையோரங்களில் வைக்கப்பட்டிருக்கும் இலத்திரனியல் பொருட்கள்

இந்த குப்பை சந்தையில் விற்பனை செய்வது என்னவென்றால், ஹொங்கொங்கில் வசதியானோர் ஒவ்வொரு நாளும் அப்புறப்படுத்தும் கணினி, மடிக்கணினி, தொலைக்காட்சி பெட்டி, குளிர்சாதனப் பெட்டி, வீட்டுக்குளிரூட்டி போன்ற இலத்திரனியல் பொருட்களாகும். இவை ஒன்று இரண்டு என்று அல்லாமல், ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் இந்த குப்பைச் சந்தைக்கு வந்து சேர்கின்றன. இவற்றை தொகையாகக் கொள்முதல் செய்யும் இந்திய, பாக்கிசுதானிய, இலங்கை மற்றும் ஆப்பிரிக்க நாட்டு வணிகர்கள் இங்கிருந்து ஏற்றுமதி செய்கின்றனர்.

தொழில் வாய்ப்புகள்[தொகு]

இந்த குப்பை சந்தை பலருக்கு பல்வேறு தொழில் வாய்ப்புகளையும் வழங்குகிறது. இந்த நாட்டவர்களால் அப்புறப்படுத்தும் இலத்திரனியல் பொருட்களை குப்பைத் தொட்டிகளில் சென்று சேகரிக்கும் தொழில், சேகரிக்கும் இலத்திரனியல் குப்பைகளை வாகனங்களில் ஏற்றும் தொழில், அவற்றை சுத்தப்படுத்தும் தொழில், அவற்றை பழுது பார்க்கும் தொழில், அவற்றை கொள்கலன்களுக்கு ஏற்றும் தொழில், என பல்வேறு தொழில்கள் ஹொங்கொங் வாழும் ஏழைகளின் அல்லது கல்வியறிவு குறைந்தோரின் தொழிலாகியுள்ளன. அதேவேளை தொழில் வாய்ப்புக்காக ஹொங்கொங் வந்துள்ள தென்னாசிய நாடுகளான இந்தியா, பாக்கிசுதான், இலங்கை, வங்காள தேசம் மற்றும் ஆப்பிரிக்க நாட்டவர்கள் அதிகமானோர் இத்தொழில்களில் ஈடுப்பட்டிருப்பதனைக் காணக்கூடியதாக உள்ளன. இக்கடைகளில் தொழில் புரிவோர் அநேகமானோர் நாள்கூலிகளாகவே தொழில் செய்கின்றனர். தமது ஒரு நாள் கூலியாக HK$ 150.00 முதல் HK$ 450.00 டொலர்கள் வரை பெறுகின்றனர். குறிப்பிட்ட சிலர் மட்டுமே மாதம் ஊதியம் பெறுவோராக உள்ளனர்.

அநேகமான இங்கு தொழில் புரியும் பாக்கிசுத்தான், இந்தியா, இலங்கை, ஆப்பிரிக்கா போன்ற நாட்டவர்கள் சட்டத்திற்கு புறம்பான வகையில் வீசா இன்றியே தொழில் செய்கின்றனர். இதனால் இவர்கள் தொழில் புரியும் போது அடையாள அட்டை மற்றும் வீசா சோதனைகள் நடைபெறும் கைதுசெய்யப்படுகின்றனர். சட்டவிரோதமாக தொழில் செய்தல் குற்றத்தின் அடிப்படையில் தண்டனைப் பெறுவதும், நாடுகடத்தப் படுவதும் கூட அடிக்கடி நிகழ்கின்றன. இருப்பினும் அவற்றிற்கு அகப்படாமல் பல ஆண்டுகளாக தொடர்ந்து தொழில் புரிவோரும் உள்ளனர்.

இலத்திரனியல் குப்பைக் கடைகள்[தொகு]

பாக்கிசுத்தான் ஒருவர் குளிர்சாதனப் பெட்டிகளை வாகனத்தில் ஏற்றுவதற்கு ஓரிடத்தில் சேகரித்துக்கொண்டிருக்கிறார்

சம் சுயி போ நகரில் மட்டும் நூற்றுக்கணக்கான இலத்திரனியல் குப்பை கடைகள் உள்ளன. இக்குப்பை கடைகள் அநேகமாக மதியம் 2:00 மணிக்கு திறந்து இரவு 10:00 மணிவரை திறந்திருக்கும்.

ஹொங்கொங்கரின் கடைகள்[தொகு]

அகற்றப்படும் இலத்திரனியல் பொருட்களை சேகரிக்கும் ஹொங்கொங் நாட்டவருக்கு சொந்தமான கடைகளில் வேலை செய்வோருக்கு, ஹொங்கொங் நாட்டவர் நியாயமான கூலி வழங்குவதனை அறிய முடிகிறது. வேலை பழுவும் அதிகம் இல்லை என்றும், தொழில் வழங்குனர்கள் பேசும் போது மனிதாபிமானத்துடன் தன்மையாகப் பேசுவதாகவும் அறியமுடிகிறது. அத்துடன் வேலை செய்வோரை ஹொங்கொங் நாட்டவர் பஞ்ஞாவ் என்றே அழைக்கின்றனர். "பஞ்ஞாவ்" என்றால் கண்டோனீசு மொழியில் நண்பர் என்று பொருளாகும். மிகவும் அதிகப் பாரமுள்ள பொருட்களை கொள்கலன்களில் ஏற்றும் பொழுது இயந்திர ஏற்றிகள் ஊடாக தொழிலாளருக்கு அதிகம் கடினம் கொடுக்காமல் ஏற்றப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாக்கிசுதானியர் கடைகள்[தொகு]

இந்த அகற்றப்படும் இலத்திரனியல் சேகரிப்பு கடைகள் கணிசமானவை பாக்கிசுதானியர்கள் உடையவைகளும் உள்ளன. ஹொங்கொங் நாட்டின் நிரந்தர வசிப்புரிமை பெற்ற பாக்கிசுத்தானியர், இந்தியர் போன்றோர் கடைகள் வைத்துள்ளனர். இவர்களின் கடைகளில் வேலை செய்வோருக்கு HK$ 250.00 டொலருக்கும் குறைவான கூலியே கொடுக்கப்படுகின்றது. சில பாக்கிசுதானியர்களின் கடைகளில் பின்னேரம் 2:00 மணி முதல் இரவு 12:00 மணி வரை வேலை செய்தும் HK$ 150.00 டொலர்கள் மட்டுமே கூலி கொடுப்பதும் நடக்கின்றது. அத்துடன் சட்டவிரோத தொழிலாளர் எனும் காரணத்தால் கூலியை கொடுக்காமல் ஏமாற்றும் நிகழ்வுகளும் நிறைய உள்ளன. வேலை செய்து விட்டு கூலியை கேட்டு பிரச்சினை செய்தால், சட்டவிரோத தொழிலாளர் என ஹொங்கொங் காவல் துறைக்கு அறிவித்து பிடித்துக்கொடுக்கும் இறக்கமற்ற செயல்களும் நிறைய இவர்களால் நடைபெறுகின்றன.

இவ்வாறான காரணங்களால் வேலை செய்யும் பாக்கிசுதானியக் கூலி தொழிலாளர்களும், பாக்கிசுதான்மற்றும் இந்தியர் போன்றோரிடம் வேலை செய்ய விரும்பாமை காணப்படுகின்றன.

படக்காட்சியகம்[தொகு]

உள்ளூர் மக்கள்[தொகு]

ஹொங்கொங்கில் வசிக்கும் உள்ளூர் மக்களும் தமது தேவைகளுக்கு மலிவு விலையில் இந்த இலத்திரனியல் பொருட்களை வேண்டுவதும் உண்டு. இந்தியா, பாக்கிசுத்தான், இலங்கை போன்ற நாட்டவர்களும் மலிவு விலையில் இவற்றை பெற்று தமது ஊர்களுக்கு அனுப்புவோரும் உள்ளனர். கிட்டத்தட்ட இயங்கும் நிலையில் உள்ள ஒரு பெண்டியம் 4 வகை கணினி HK$200.00 டொலர்களுக்கு பெறலாம். (இது ஹொங்கொங்கில் வேலை செய்யும் ஒரு கூலித் தொழிலாளியின் ஒரு நாள் ஊதியத்திற்கும் குறைவானத் தொகையாகும்.)

இலவசமாக இலத்திரனியல் பொருட்கள்[தொகு]

இருப்பினும் உள்ளூரில் வசதிக்குறைவானோராக இருப்போர் காசு கொடுத்து வீட்டுத் தளபாடங்களையோ இலத்திரன் பொருட்களையோ வாங்க வேண்டிய நிலை பெரும்பாலும் இல்லை. ஏனெனில் அகற்றப்படும் பொருட்களை விரும்புவோர் பெற்றுக்கொள்ளும் படி சில செய்தித்தாள்கள் மற்றும் இணையத்தளங்கள் அறிவிப்பு செய்கின்றன. தேவையானோர் சென்று தமக்கு தேவையான இலவச இலத்திரனியல் பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம். அதில் ஹொங்கொங் மக்கள் மத்தியில் பிரசித்திப்பெற்ற ஒரு இணையத்தளமாக ஏசியா எக்ஸ்பட் ஹொங்கொங் விளங்குகின்றது. அவற்றைப் பார்ப்போர் தமக்கு தேவையானப் பொருட்களின் விளம்பரம் வரும் போது நேரடியாக குறிப்பிட்ட வீடுகள் அல்லது இடத்திற்கு சென்று பெற்றுக்கொள்வர். அத்துடன் குறிப்பிட்ட அத்தளங்களில் ஒவ்வொரு நாளும் இலவசப் பொருட்கள் தொடர்பான தகவல்கள் தொடர்ந்து வந்துவண்ணமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. [1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குப்பை_சந்தை_(ஹொங்கொங்)&oldid=2757980" இலிருந்து மீள்விக்கப்பட்டது