அத்தி அத்தீஸ்வரர் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு அருகில் உள்ளது அத்தி (ஒலிப்பு) என்னும் கிராமம். இங்கு சோழர் காலத்து பழமையான சிவன் கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலில் குடிகொண்டிருக்கும் சிவனார் திருநாமம் அத்தீஸ்வரர். அத்தி தேவார வைப்புத் தலமாகும்.

தல வரலாறு[தொகு]

பல கிராமங்கள் சேர்ந்த பகுதியை நாடு என அழைக்கும் வழக்கம் சோழர் காலத்தில் இருந்துள்ளது. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில் உள்ள நாடுகளில், பெருநகர நாடு ஓரளவு செழிப் பாக இருந்தபோதிலும், பல பகுதிகள் வறண்ட நிலையில் இருந்தன.

பெருநகர தேசத்தை வளமாக்கவேண்டும் எனும் நோக்கத்தில், அந்த நாட்டுக்கு விஜயம் செய்தார் மூன்றாம் ராஜராஜன். அந்தத் தேசத்தின் ஒரு பகுதி, அத்திமரம் நிறைந்த வனமாகத் திகழ்ந்தது. 'இந்த வனத்தை விவசாயம் செய்யும் பூமியாக மாற்றினால் என்ன?' எனும் யோசனையுடன் குதிரையில் வந்துகொண்டிருந்தார் மன்னர். அப்போது, ஏதோ ஒன்று இடற, குதிரை குப்புற விழுந்தது. அதோடு சேர்ந்து விழுந்த மன்னர் சுதாரித்து எழுந்தார். பதறிப்போன படைவீரர்களும் அமைச்சர்களும் ஓடி வந்தனர். குதிரை இடறி விழுந்த இடத்தை நோட்டமிட்ட மன்னர், அந்த இடத்தைத் தோண்டும்படி உத்தரவிட்டார். அதன்படி வீரர்கள் அந்த இடத்தைத் தோண்ட, அனைவருமே சிலிர்த்துப் போனார்கள். அங்கே, அழகிய சிவலிங்கம் ஒன்று இருந்தது!

'இந்த வனத்தை விவசாய பூமியாக மாற்றவேண்டும் என்று சிந்தித்தபடி வந்தேன். இதோ... தென்னாடுடைய சிவனே உத்தரவு தந்து, அவரது அருளையும் வழங்கிவிட்டார்' என உள்ளம் பூரித்தார் மன்னர். 'சித்தர்களோ முனிவர்களோ, இந்தச் சிவலிங்கத்தை அனுதின மும் பூஜித்து வந்திருக்கவேண்டும். எனவே, இந்த லிங்கத்திருமேனியை ஸ்தாபித்து, அழகான கோயில் அமைக்க எண்ணியுள்ளேன்' எனச் சொன்னார் மூன்றாம் ராஜராஜன்.

அதன்படி, அழகிய தூண்களும் மண்டபமுமாக கலை நயத்துடன் அங்கே ஒரு கோயில் எழுப்பப்பட்டது. அத்தி வனத்தில் அமைந்த கோயில் என்பதால், ஸ்வாமிக்கு ஸ்ரீஅத்தீஸ்வரமுடையார் எனும் திருநாமத்தைச் சூட்டினார் மன்னர். பிறகு அந்த வனம் மெள்ள மெள்ளக் குடியிருப்புப் பகுதியாக மாறி, கிராமமாக உருவானது. அந்தக் கிராமத்துக்கு அத்தி யான கேளாந்தகநல்லூர் எனும் பெயர் அமைந்தது. அதன்பின், பெருநகர தேசமே செழிப்புற்று விளங்கியதாம்!

தலச் சிறப்புகள்[தொகு]

அத்தி தேவார வைப்புத் தலமாகும். செயங்கொண்ட சோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்துப் பெருநகர் நாட்டு அத்தி அகத்தீசுவர முடையார் கோயில் கேரளாந்தகநல்லூர் என குறிபிடப்பட்டுள்ளது.

வரலாற்றுச் சிறப்புகள்[தொகு]

இந்தக் கோயிலில் கல்வெட்டுக்கள் பல உள்ளன. 1242-ஆம் வருடம் 3-ஆம் ராஜராஜ சோழ மன்னன், இந்தக் கோயிலைக் கட்டியுள்ளான். அப்போது, இந்தக் கோயிலில் தினமும் நெய் தீபம் (நந்தா விளக்கு) எரியவேண்டும் என்பதற்காக, 31 பசுக்கள், ஒரு பொலி காளை மற்றும் ரிஷபம் ஆகிய வற்றை வழங்கியிருக்கிறான். 3-ஆம் ராஜராஜ சோழன் கட்டிய இந்தக் கோயிலின் பெருமையை அறிந்த நடுநாட்டு மன்னன் கோப்பெரும்சிங்கன், இந்த ஆலயத்துக்கு நிறைய நிலங்களைத் தானமாகத் தந்திருக்கிறான். அடுத்து வந்த விஜயநகரப் பேரரசு மன்னர்களும் நிறையத் திருப்பணிகளைக் கோயிலுக்குச் செய்துள்ளனர்.

இன்றைய நிலை[தொகு]

இன்றைக்கு இந்தக் கோயிலில் தீபமேற்றி, சுமார் 200 வருடங்களுக்கு மேலாகி விட்டது. முழுக்க முழுக்கக் கற்களால் அமைக்கப் பட்ட ஆலயம், இன்றைக்கு வெறும் கற்குவியலாகக் காணப்படுகிறது. இருந்தும் இல்லாமலும், சிதைந்தும் புதைந்துமாகக் காட்சி தருகிறது ஆலயம். கருவறையின் மேல் பகுதிக் கற்கள் விழுந்து, வெட்டவெளியாக உள்ளது. 'மக்களின் மனத்தையும் வாழ்க்கையையும் குளிரச்செய்த அத்தீஸ்வரர், வெயிலிலும் மழையிலும் வாடுகிறார்.

கிழக்குப் பார்த்த ஆலயத்தில் கோபுரம் இருந்திருக்கிறது. ஆனால், இன்றைக்குக் கோபுரமும் இல்லை; மதிலையும் காணோம்! அம்பாள் தனிக்கோயிலில் சந்நிதி கொண்டு அருள்பாலித்திருக்கிறாள். தற்போது, தனிக்கோயிலும் இல்லை; சந்நிதியும் இடிந்து விட்டது! அவ்வளவு ஏன்... அம்பாளின் விக்கிரகத் திருமேனியையே காணவில்லை.

மனைவி குழந்தைகளுடன், மாடு கன்றுகளுடன், வீடு வாசலுடன் அனைவரையும் செழிப்புறச் செய்த அத்தீஸ்வரர், இன்றைக்குத் தன் மனைவியார் ஸ்ரீபார்வதிதேவி இல்லாமல் தனியே இருக்கிறார்.

உள்ளூர்க்காரர்கள் மற்றும் சென்னையில் உள்ள அன்பர்களின் முயற்சியால், கோயில் சுத்தப்படுத்தப் பட்டுள்ளது. உள்ளே செல்வதற்குத் தடையாக இருந்த செடி- கொடிகளை அகற்றி, சின்ன பாதையும் அமைத் துள்ளனர். முக்கியமாக, கடந்த மூன்று மாதங்களாக பிரதோஷ பூஜையைச் செய்து வருகிறார்கள்.

அன்பர்கள் சீரும் சிறப்புமாக, சந்தோஷமும் நிம்மதி யுமாக வாழ்வதற்கு ஆண்டவன் துணை நிற்பான். அந்த ஆண்டவன் வாழும் கோயிலை அற்புதமாக்குவதற்கும், அந்தத் திருப்பணிக்கு கைகொடுப்பதற்கும் அன்பர்கள்தானே துணை நிற்கவேண்டும்.

போக்குவரத்து[தொகு]

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது அத்தி கிராமம். வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில், வந்தவாசியில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது பெருநகர் எனும் ஊர் (காஞ்சியில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவு). பெருநகரில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது அத்தி கிராமம். பெருநகரில் இருந்து செல்ல ஆட்டோ வசதி உண்டு. சென்னையில் இருந்து உத்திரமேரூர் வழியாக வந்தவாசி செல்லும் பேருந்தில் ஏறினால், மானாம்பதி கூட் ரோடு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து பெருநகர் வந்து, அத்தி கிராமத்தை அடையலாம். மானாம்பதி கூட் ரோட்டில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது அத்தி கிராமம்

புற இணைப்புகள்[தொகு]