கட்டுமான விபரக்கூற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுமான அமைப்பொன்றின் வடிவமைப்புத் தொடர்பாகக் கட்டுனருக்குத் தெரிய வேண்டிய விபரங்களை உள்ளடக்கி உருவாக்கப்படும் கட்டுமான ஆவணங்களில் ஒரு ஆவணமே கட்டுமான விபரக்கூற்று (construction specification) ஆகும். கட்டுமானத்துறையில், "ஏதாவது ஒன்றைக் கட்டுவதற்கு அல்லது நிறுவுவதற்கான பொருட்கள், அளவுகள், வேலைப்பாடு போன்றவை குறித்த விவரமானதும், துல்லியமானதுமான கூற்றே" கட்டுமான விபரக்கூற்று எனப்படுகிறது.[1] கட்டுமான விபரக்கூற்று ஒரு எழுத்துமூல ஆவணமாகும். கட்டுமானத் திட்டமொன்றின் அடிப்படை அம்சங்களான கட்டிடப் பொருட்கள், வேலைத் திறன், நிர்வாகத் தேவைகள் போன்றவற்றுக்குரிய பண்புசார்ந்த (qualitative) தேவைகளை வரையறுப்பதே கட்டுமான விபரக்கூற்றின் நோக்கமாகும்.

கட்டுமான விபரக்கூற்றின் பங்கு[தொகு]

கட்டிடம், சாலைகள், பாலங்கள் போன்றவற்றை வடிவமைக்கும் கட்டிடக்கலைஞர்களும், பொறியாளர்களும் தமது வடிவமைப்பை உரிமையாளர்களுக்கும், ஒப்பந்தகாரர்களுக்கும், சம்பந்தப்பட்ட பிறருக்கும் விளக்குவதற்காக வரைபடங்களையும், விபரக்கூற்றுக்களையும் தயாரிக்கின்றனர் இரண்டும் வெவ்வேறு வடிவங்களூடாக விபரங்களைத் தெரியப்படுத்துகின்றன. ஒன்று வரைபட வடிவம், மற்றது எழுத்து வடிவம். [2] மேற்படி கட்டுமானங்களை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு வரைபடங்கள் முக்கியமானவை எனினும், வரைபடங்களின் மூலமே தேவையான முழு விபரங்களையும் விளக்கிவிடமுடியாது. குறிப்பாக வேலைப்பாடு, தரம் தொடர்பான தேவைகளை அறிவுறுத்துவதற்கு எழுத்துமூலமான ஆவணங்கள் அவசியமானவை. கட்டுமான விபரக்கூற்று இத்தேவையை நிறைவேற்றுகிறது. கட்டுமானத்துக்கு வரைபடம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவுக்கு கட்டுமான விபரக்கூற்றும் முக்கியமானது. இதனால், பெரும்பாலும் கட்டுமான ஆவணங்களில் வரைபடங்களுக்கும், விபரக்கூற்றுக்களுக்கும், இணையான முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. ஆனாலும், பிரச்சினைகள் ஏற்பட்டு விடயங்கள் நீதிமன்றம் வரை செல்லும் நேரங்களில் நீதி மன்றங்கள் விபரக்கூற்றுக்கே முன்னுரிமை அளிப்பதுண்டு.

வரலாற்றுப் பின்னணி[தொகு]

மிகப் பழைய காலத்தில் குறிப்பாகச் சொந்தத் தேவைக்கான வீடுகள் முதலியவற்றைப் பிறரைக் கொண்டு கட்டுவிக்க முயன்றபோது தேவைகளைக் கட்டுபவர்களுக்கு அறிவுறுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. எனினும், இது வாய்மூலமாகவே பெரும்பாலும் இடம்பெற்றது. தற்போதும் கூட நாட்டுப்புறப் பகுதிகளில் எளிமையான கட்டுமானங்களின்போது இம்முறை பின்பற்றப்படுகிறது. சொந்தத் தேவைகளுக்கும் அப்பால் கட்டிடங்களைக் கட்டவேண்டிய தேவை ஏற்பட்டபோதும், சிக்கலான கட்டுமானங்களின்போதும் தேவைகளைத் துல்லியமாகவும் விபரமாகவும் எடுத்துச் சொல்லவேண்டிய தேவை ஏற்பட்டது.

17 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே கட்டுமானத்தில் வரைபடங்களும் எழுத்துமூலமான அறிவுறுத்தல்களும் பயன்பாட்டில் இருந்தபோதும், இது ஒரு முழுமையான கட்டுமான ஆவணங்களையும், விபரக்கூற்றுக்களையும் பயன்படுத்தும் நிலையாக இருக்கவில்லை. 17 ஆம் நூற்றாண்டில் முதன்முதலாக இங்கிலாந்தின் அரசருக்கும், கட்டுனர்களுக்கும் இடையில் எழுத்துமூல ஒப்பந்த முறை உருவானது. இது, தற்காலத்தின் கட்டுமான ஒப்பந்தங்களில் காணப்படும் ஒப்பந்தம், ஒப்பந்த நிபந்தனைகள், வரைபடங்கள், விபரக்கூற்றுக்கள் முதலியவற்றை உள்ளக்கியதாக இருந்தது. தொடக்க காலங்களில், பெருமளவு எழுத்துமூல விபரங்களையும் வரைபடங்களிலேயே குறிப்புக்களாக உள்ளடக்கும் வழக்கம் இருந்தது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே விரிவானதும், விபரமானதுமான தனியான எழுத்துமூல விபரக்கூற்றுக்களின் தேவை பரவலாக உருவானது. இதுவே விபரக்கூற்று எழுதுதல் ஒரு தனித் தொழிலாக உருவானதின் தொடக்கம் எனலாம்.[3]

அமெரிக்காவில், 1930களின் பொருளாதார நெருக்கடிக் காலத்திலும், தொடர்ந்த 40களின் தொழில்வளர்ச்சிக் காலத்திலும், விரிவான கட்டுமான விபரக்கூற்றுக்களின் பயன்பாடு கூடியது. 1948ம் ஆண்டில் சில கட்டுமான விபரக்கூற்று எழுத்தர்கள் ஒன்று சேர்ந்து, விபரக்கூற்று நடைமுறைகளை மேம்படுத்தும் நோக்கில் "கட்டுமான விபரக்கூற்று நிறுவனம்" என்னும் ஒரு அமைப்பை உருவாக்கினர். இந்த அமைப்பு விபரக்கூற்றுக்களை ஒழுங்குபடுத்தி எழுதுவதற்கான நியமம் ஒன்றை உருவாக்குவதில் ஈடுபட்டது. 1961ம் ஆண்டில் விபரக்கூற்று எழுதும் நடைமுறைகளுக்கான கையேடு ஒன்றை இந்த அமைப்பு முன்மொழிந்தது. இதன் தொடர்ச்சியாக 1967ல் முதலாவது நடைமுறைக் கையேடு (Manual of Practice) வெளியானது.[4] விபரக்கூற்று ஆவணத்தில் அடங்கக்கூடிய தகவல்களை எவ்வாறு வகைப்படுத்துவது, அவற்றை எவ்வாறு பிரிவுகளாக ஒழுங்குபடுத்துவது, ஒவ்வொரு பிரிவினதும் வடிவம் எப்படி அமையவேண்டும், ஒவ்வொரு பக்கத்திலும் தகவல்களை எவ்வாறு ஒழுங்குபடுத்த வேண்டும் என்பவற்றுக்கான நியமங்கள் இதில் அடங்கியிருந்தன.

இதைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியத்திலும், வேலைப் பிரிவுகளுக்கான பொது ஒழுங்கமைவு (Common Arrangement of Work Sections) என்னும் பெயரில் ஒரு நியமம் வெளியிடப்பட்டது. ஆசுத்திரேலியா உட்பட வேறு சில நாடுகளும் விபரக்கூற்றுக்கான தமக்கான தனியான நியமங்களை உருவாக்கிக்கொண்டன. அமெரிக்காவின் கட்டுமான விபரக்கூற்று நிறுவனத்தின் விபரக்கூற்று வடிவ நியமமும், ஐக்கிய இராச்சியத்தின் வேலைப் பிரிவுகளுக்கான பொது ஒழுங்கமைவை அடியொற்றிய நியமமும் இன்று உலகின் பல நாடுகளில் பரவலான பயன்பாட்டின் உள்ளன.

விபரக்கூற்று வடிவங்கள்[தொகு]

இன்று உலக நாடுகளில் பயன்பாட்டில் உள்ள கட்டுமான விபரக்கூற்றுக்கள் பல்வேறு வடிவங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட கட்டுமான விபரக்கூற்று நிறுவனத்தின் "மாஸ்டர்போர்மட்" (MasterFormat), ஐக்கிய இராச்சியத்தின் "வேலைப் பிரிவுகளின் பொது ஒழுங்கமைப்பு" ஆகியவை இன்று உலகக் கட்டுமானத்துறையில் பரவலாகப் பயன்பாட்டில் உள்ள முக்கிய விபரக்கூற்று வடிவங்கள் ஆகும். இவை இரண்டும் உண்மையில், கட்டுமான வேலைப் பிரிவுகளை வகைப்படுத்தி அவற்றின் தலைப்புக்களினதும் அவற்றுக்கான எண்குறியீடுகளினதும் பட்டியல்களைத் தருகின்றன.

மாஸ்டர்போர்மட்[தொகு]

கட்டுமான விபரக்கூற்று நிறுவனத்தின் "மாஸ்டர்போர்மட்", கட்டுமான வேலைப் பிரிவுகளைப் பகுதிகளாகவும், பிரிவுகளாகவும் வகைப்படுத்துகிறது. 2004ம் ஆண்டுக்கு முன் இது 16 பகுதிகளையும், அதன் கீழ் பல பிரிவுகளையும் கொண்டுள்ளது. கட்டுமானத் துறையில் ஏற்பட்ட புதிய வளர்ச்சிகளுக்கு ஏற்ப விரிவாக்கப்பட்ட இதன் தற்போதைய பதிப்பு 50 பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.

00 என்று இலக்கமிடப்பட்ட முதலாவது பகுதி ஒப்பந்த விபரங்கள் தொடர்பானது. "பொதுத் தேவைகள்" என்னும் தலைப்புக் கொண்ட பகுதி 01 முழு விபரக்கூற்றுப் பிரிவுகளுக்கும் பொதுவான விபரங்களோடு கூடிய பல பிரிவுகளை உள்ளடக்கியது. பகுதி 02 தொடக்கம் பகுதி 14 வரையானவை அமைப்புப் பொறியியல், கட்டிடக்கலை என்பன தொடர்பான பிரிவுகளை உள்ளடக்கியது. பகுதிகள் 21, 22, 23 என்பன கட்டிடச் சேவைகளில் எந்திரப் பொறியியல் துறையையும், 25 முதல் 28 வரையான பகுதிகள் மின்னியல் துறையையும் சார்ந்தவை. 31 தொடக்கம் 35 வரையான பகுதிகள் உட்கட்டமைப்புத் துறை தொடர்பானவை. 40 முதல் 45 வரையான பகுதிகளும், பகுதி 48 உம் செய்முறைக் கருவிகளோடு தொடர்புள்ளவை. இங்கு சொல்லப்படாத ஏனைய பகுதிகள் எதிர்காலத் தேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.[5]

வேலைப் பிரிவுகளின் பொது ஒழுங்கமைப்பு[தொகு]

கட்டுமானத் திட்டத் தகவல் குழுவினால் உருவாக்கப்பட்ட "வேலைப் பிரிவுகளின் பொது ஒழுங்கமைப்பு" கட்டுமான வேலைகளை 26 வகைகளாகப் பிரித்துள்ளது. இவ்வகைகள் A முதல் Z வரையான ஆங்கில எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன.[6] இது ஒவ்வொன்றும் பல துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

விபரக்கூற்று முறைகள்[தொகு]

விபரக்கூற்றில் கட்டிடப் பொருட்கள், முறைமைகள் மற்றும் தொடர்புடைய விடயங்கள் குறித்த தகவல்களைக் கொடுப்பதற்குப் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. கட்டுமான விபரக்கூற்று நிறுவனம் வெளியிட்ட "திட்ட வளக் கையேடு" (Project Resource Manual) இவ்வழி முறைகள்,

  • விளக்க முறை (Descriptive Method)
  • செயற்பாட்டு முறை (Performance Method)
  • ஒப்பீட்டுச் செந்தர முறை (Reference Standard Method)
  • உற்பத்திப் பொருள் முறை (Proprietary Method)

என்னும் நான்கு வகைப்படும் எனக் கூறுகின்றது.[7]

விளக்கமுறை[தொகு]

இம்முறையில், குறித்த கட்டுமானத்தில் பயன்படுத்த எண்ணுகின்ற கட்டிடப் பொருட்களின் தன்மை, பௌதிக இயல்புகள் போன்றவை விபரமாக விளக்கப்படும். ஆனால், ஒரு குறிப்பிட்ட வணிக உற்பத்திப் பொருளைப் பயன்படுத்துமாறு பெயர் குறிப்பிட்டுச் சொல்வது இல்லை. இம்முறையைப் பயன் படுத்துவதற்கு, குறித்த கட்டிடப் பொருள் அல்லது முறைமை தொடர்பான தொழில்நுட்ப அம்சங்களை வடிவமைப்பாளர்கள் அறிந்திருக்க வேண்டும். தற்காலத்தில், பல புதிய பொருட்கள் கட்டுமானச் சந்தையில் அறிமுகமாவதாலும், இவற்றுட் பல உயர் தொழில்நுட்பங்களுடன் தொடர்புபட்டிருப்பதாலும், இது முழுமையாகச் சாத்தியம் இல்லை. இதனால், வேறு உகந்த முறைகளையும் பயன்படுத்துவது அவசியமாகிறது.

செயற்பாட்டு முறை[தொகு]

பயன்படுத்த வேண்டிய பொருட்களையும், முறைமைகளையும் பற்றி விரிவாக விளக்காமல், அவற்றில் இருந்து என்ன செயற்பாடு எதிர்பார்க்கப்படுகிறது என்பதை மட்டும் விளக்கி உகந்த பொருட்களையும் முறைமைகளையும் கட்டுனரே தெரிவு செய்துகொள்ள வழிவகுப்பது இந்த முறையாகும். இது புதியனவும், செயற்றிறன் மிக்கனவுமான முறைகள் பயன்படுத்தப்படுவதை ஊக்குவிக்கிறது.

குறிப்புகள்[தொகு]

  1. "Dictionary of Construction.com இல் கட்டுமான விபரக்கூற்றுக்கான வரைவிலக்கணம்". Archived from the original on 2014-07-13. பார்க்கப்பட்ட நாள் 2014-06-12.
  2. Rosen, Harold. J. et all, Construction Specification Writing, Principles and Procedures, John Wiley & Sons Inc., New Jercy, 2010. p.5.
  3. Construction Specification Institute, The Project Resource Manual, MacGraw-Hill, New York, 2004 (Fifth Edition), p.xxvii
  4. Construction Specification Institute, The Project Resource Manual, MacGraw-Hill, New York, 2004 (Fifth Edition), p.xxvii
  5. Construction Specification Institute, The Project Resource Manual, MacGraw-Hill, New York, 2004 (Fifth Edition), p. 5.34, 5.35.
  6. Design Buildings Wiki
  7. Construction Specification Institute, The Project Resource Manual, MacGraw-Hill, New York, 2004 (Fifth Edition), p.5.58 - 5.68

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டுமான_விபரக்கூற்று&oldid=3547434" இலிருந்து மீள்விக்கப்பட்டது