விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஆகத்து 15, 2010

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ச. வையாபுரிப்பிள்ளை (அக்டோபர் 12, 1891 - பெப்ரவரி 17, 1956) இருபதாம் நூற்றாண்டின் முதன்மை தமிழ் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர். தமிழ் நூற்பதிப்புத் துறையில் சிறந்த பதிப்பாசிரியராக விளங்கியவர். வழக்கறிஞரான இவர் தமிழில் சிறந்த புலமை உள்ளவர்; ஆய்வுக் கட்டுரையாளர், திறனாய்வாளர், கால மொழி ஆராய்ச்சியாளர், மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர் கதை கவிதைகள் புனையும் திறம் படைத்தவர் என பல்முக பரிமாணங்களைக் கொண்டவர். சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட பேரகராதியின் ஆக்கக் குழுத் தலைவராக செயற்பட்டவர். நாற்பதுக்கும் அதிகமான நூல்களையும் நூற்றுக்கணக்கான ஆய்வுகளையும் கட்டுரைகளையும் எழுதிக் குவித்தார். உ.வே.சாமிநாதய்யருக்குப் பிறகு பழந்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து, ஆய்வு செய்து வெளியிட்ட பெருமை எஸ். வையாபுரிப் பிள்ளையைத் தான் சாரும். ஓலைச் சுவடிகளைப் பதிப்பித்ததுடன் நிற்காமல் அந்த இலக்கியங்களுக்குக் கால நிர்ணயம் செய்ததிலும் வையாபுரிப் பிள்ளைக்குப் பெரும் பங்கு உண்டு. மேலும்..


நல்லூர் கந்தசுவாமி கோயில் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற இந்துக் கோயில்களுள் முக்கியமானது. இது இலங்கையின் வடபகுதியில், யாழ்ப்பாண நகரத்திலிருந்து இரண்டு மைல் தொலைவிலுள்ள நல்லூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. நல்லூர் 12ம் நூற்றாண்டு தொடக்கம் 17ம் நூற்றாண்டின் முற்பகுதிவரை இருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாக இருந்தது. இக்கோயிலின் தோற்றம் பற்றிச் சரியான தெளிவு இல்லையெனினும், யாழ்ப்பாண அரசு காலத்தில் மிகவும் முக்கியமான ஒரு கோயிலாக இருந்தது என்பதில் ஐயமில்லை. யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது அரசனான கூழங்கைச் சக்கரவர்த்தியின் அமைச்சனொருவனான புவனேகவாகு என்பவனால் இக் கோயில் கட்டுவிக்கப்பட்டதென யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கீசத் தளபதியான பிலிப்பே டி ஒலிவேரா, 1620ல் அரசின் தலை நகரத்தை யாழ்ப்பாணத்துக்கு மாற்றியபோது நல்லூர்க் கோயிலை இடித்துத் தரைமட்டமாக்கும்படி உத்தரவிட்டான். இதிலிருந்து பெறப்பட்ட கற்கள் யாழ்ப்பாணத்தில் புதிய கோட்டை கட்டுவதில் பயன்பட்டதாகத் தெரிகின்றது.மேலும்..