குரு கோவிந்த் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரு கோபிந்த் சிங்
பிறப்புகோபிந்த் ராய்ஜி
22 திசம்பர் 1666
பாட்னா,இந்தியா
இறப்பு7 அக்டோபர் 1708 (வயது 41)
நாண்டெட்,இந்தியா
மற்ற பெயர்கள்பத்தாம் குரு,
அறியப்படுவதுகல்ஸ தோற்றுவித்தவர்
முன்னிருந்தவர்குரு தேக் பகதூர்
பின்வந்தவர்குரு கிரந்த சாகிப்
பெற்றோர்குரு தேக் பகதூர், மாதா குஜ்ரி
வாழ்க்கைத்
துணை
மாதா சுந்தர் கெளவுர்
பிள்ளைகள்சாகிப்ஜடா அஜித் சிங்,சாகிப்ஜடா ஜுகார் சிங்,சாகிப்ஜடா ஜராவர் சிங்,சாகிப்ஜடா பாட்டே சிங்

குரு கோவிந்த் சிங் (Guru Gobind Singh, பஞ்சாபி: ਗੁਰੂ ਗੋਬਿੰਦ ਸਿੰਘ, டிசம்பர் 22, 1666 - அக்டோபர் 7, 1708) சீக்கிய மதத்தவரின் பத்து குருக்களில் பத்தாவது குருவும் அவர்களது இறுதி மனித குருவுமாவார்.இவரே பிற்காலச் சீக்கிய மதக் கோட்பாடுகளுக்கு வித்திட்டவர் ஆவார். குரு கோவிந்த் சிங் சீக்கியத்தின் பல கூறுகளை உறுதிப்படுத்தியதுடன் சீக்கிய மதநூலான குரு கிரந்த் சாகிப்பைச் சீக்கிய மதத்தின் வாழும் குருவாக்கினார்.

இவர் அரபி, பெர்சியன், சமற்கிருதம் போன்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். குதிரைச் சவாரி, பலவகைத் துப்பாக்கிகள், ஆயுதங்கள் முதலியவற்றைக் கையாள்வதில் சிறப்புப் பெற்று விளங்கினார்.

பிறப்பு மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

ஒன்பதாவது சீக்கிய குருவான குருதேக் பகதூரின் மகனான இவர் இந்தியாவின் பீகாரில் பாட்னாவில் பிறந்தவர். இவரது தாய் மாதா குஜ்ரி ஆவார்[1]. இவரது தந்தை அஸ்ஸாம் மாநிலத்திற்கு மதத்தைப் பரப்ப சென்ற போது இவர் பிறந்தார்.

தனது தாயார் மற்றும் தாய் வழிப் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். சிறுவயதிலேயே கோவிந்த் சிங் தைரியம், சுதந்திரம் போன்ற நற்குணங்களை வெளிப்படுத்தினார்.ஒருமுறை தமது நண்பர் குழாமோடு விளையாடிக்கொண்டு இருந்த போது,நவாப் யானை மேல் அவ்வழியாகப் போனார். குழந்தைகள் அவரை வணங்கச் சொல்லப்பட்டார்கள். அதனால் எரிச்சலடைந்த கோவிந்த் சிங் தமது நண்பர்களிடம் நவாபைப் பார்த்து சிரிக்கச் சொன்னார். கோபமடைந்த நவாபைக் கண்டு துளியும் அச்சப்படாமல், தங்கள் கூட்டத்தை சுட்டிக் காட்டி, இவர்கள் உங்களிடமிருந்து அரசாங்கத்தை மீட்பார்கள் என்று கூறினார்.[2]

பாட்னாவிலிருந்து வெளியேற காரணமான சம்பவம்[தொகு]

வழக்கமான தனது குறும்புச் செயல் போல, ஒருநாள் குளத்தில் தண்ணீர் எடுக்க வந்த ஒரு பெண்ணின் குடத்தை உடைக்க முயன்ற போது,கல் தவறுதலாக அவரது நெற்றியில் பட்டுக் காயத்தை ஏற்படுத்தியது. அவர் ஒரு முகமதிய பெண்மணி. மகனின் செயலைக் கண்ட கோவிந்த் சிங்கின் தாயார் உடனடியாக வந்து கடுமையாக கண்டித்தார். தான் வேண்டுமென்றே செய்யவில்லை என்றும் தனது தவறுக்கு வருந்துவதாகவும் கோவிந்த் தெரிவித்தார். அதற்கு தாயார், ’நீ என்ன செய்திருக்கிறாய்? வெளியாட்களின் ஆட்சியில் நாம் இருப்பது தெரியாதா? இதில் அந்த மதத்தினர் காயம் பட்டது மன்னருக்குத் தெரிந்தால் நமக்கு அழிவு காலம் வரும்’ என்று வருந்தினார்.இந்த பாகுபாட்டைக் கேட்ட கோவிந்த் சிங் கோபம் கொண்டார்.தாய் மற்றும் பாட்டியாரின் சமாதான வார்த்தைகளைக் கண்டு கொள்ளாமல், உறுதியோடு ’இந்த நாட்டில் இனியும் இருக்க மாட்டேன். எனது தந்தையின் நாட்டுக்குச் செல்வேன்’ என்று கூறி பஞ்சாப் சென்றார்.[2]

டெல்லி சிறையிலிருந்த தமது தந்தை குருதேக் பகதூர்க்கு உற்சாகமூட்டும்படி கடிதங்கள் எழுதினார் கோவிந்த் சிங். தமது மகனின் மீது நம்பிக்கை கொண்ட தந்தை ஒரு இளநீரையும் சில நாணயங்களையும் தமது குருசக்தியை மகனுக்கு தருவதின் சங்கல்பமாக நம்பிக்கைக்குரிய சீடரிடம் கொடுத்து அனுப்பினார்.[3]

1675 முதல் இறப்பு வரை சீக்கியரின் குருவாக இருந்தார். மொகாலயப் பேரரசர் அவுரங்கசீப்புடனான சீக்கியரின் மதப்போரில் தனது தந்தை, தாய், நான்கு மகன்களை இழந்தார். ஒன்பதாவது சீக்கிய குருவான குருதேக் பகதூர் இஸ்லாம் மதம் மாற எதிர்த்ததால் துண்டு துண்டாக வெட்டப்பட்டு , இந்துக்களும் சீக்கியர்களும் வாழும் குடியிருப்புப் பகுதிகளில் தொங்கவிடப்பட்டார்.[4]."நான் எனது தலையைத் தருவேன்; மதத்தையல்ல" என்று தமது கழுத்தில் எழுதி வைத்திருந்த வாசகம் அப்போது சீக்கியர்களிடையே பிரபலமடைந்தது. ஒரு சீக்கியர், அவரது அறுபட்ட தலையுடன் அனந்தபூருக்கு தப்பிச் சென்றார்.[3] இதனால் பாதிக்கப்பட்ட சிறுவன் குரு கோவிந்த் சிங் சீக்கியர்களை வலிமையுடைய மதமாக மாற்ற வழிவகை செய்தார்.

1685 , ஏப்ரல் மாதம் இவர் சிர்மௌர் மாவட்டத்திற்குக் குடிபெயர்ந்தார். இவர் மூன்றுமுறை திருமணம் செய்து கொண்டார்[5][6][7][8]. 1677 ஆம் ஆண்டில் ஜூடோஜி என்பவரையும், 1684 ஆம் ஆண்டில் சுந்தரிஜி என்பவரை இரண்டாவதாகவும், அதன் பின்னர் சாஹிப் கௌர் என்பவரை மூன்றாவதாகவும் திருமணம் செய்து கொண்டார். 1684 ஆம் ஆண்டில் பஞ்சாபி மொழியில் “சாண்டி தி -வார்” எனும் நூலினை எழுதிய இவர் 1685 ஆம் ஆண்டில் “பாண்டா சாஹிப்” எனும் மத வழிபாட்டு இடத்தை நிறுவினார். இங்கு மத போதனை, ஆயுதப்பயிற்சி மற்றும் இந்தி, பெர்சியன், பஞ்சாபி மொழிகளைக் கற்பித்தார். ஆனந்த்பூர் சாகிப் வட்டாரத்தில் கேஷ்கர், ஃபாதேகர், லாப்கர் மற்றும் ஆனந்த்கர் என்னும் நான்கு கோட்டைகளைக் கட்டினார். இங்கு ஆயுதத் தயாரிப்பு மற்றும் ஆயுதப் பாதுகாப்பு போன்றவற்றுக்கான இடங்களையும் நிறுவினார்.

மதத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள்[தொகு]

எதிரிகளிடமிருந்து சீக்கியர்களைக் காத்துக்கொள்ளும் வலிமையுடைய சமயமாக மாற்றினார். அவ்வமைப்பிற்கு கல்ச (தூய்மை) என்று பெயர் சூட்டினார்[9].இவ்வமைப்பில் சேருபவரை அகாலி என்று அழைத்தார். அகாலி என்பதற்கு இறவாதவன் என்று பொருள். கடவுளின் சார்புள்ளவானாகப் பிறந்து பூமியில் அறத்தினை நிலைநாட்டுவதே முதன்மையான நோக்கம் என்று கூறினார். சீக்கியர் அனைவரும் சிங்கத்தினைப் போன்ற பலமும், அரசனைப் போன்ற சக்தியும்,சுயமரியாதையும் உடையவர்கள் என்று குருகோவிந்த் சிங் முழங்கினார்.முன்பு வழக்கமாயிருந்த சரண்பாஹுல் எனும் ஞானஸ்நானம் வழங்கும் சடங்கினை மாற்றி அம்ருத்பாஹீல் எனும் புதிய சட்டத்தினைக் கொண்டுவந்தார்.இந்த சடங்கினைச் செய்த பின்னரே அவர்கள் சீக்கியர்களாக மாறுவர் என்று சட்டங்கள் இயற்றினார்.இச்சடங்கு முடித்த ஆண் தன் பெயரின்பின் சிங் (சிங்கம்) என்றும் பெண் கெளர் (பெண்சிங்கம்) என்றும் பெயரின் பின் இணைத்துக்கொள்ள வேண்டுமெனக் கட்டாயமாக்கினார்.

மத குரு[தொகு]

சீக்கிய குரு பதவிக்காக அவ்வப்போது ஏற்பட்ட மதப் பூசல்களைத் தடுப்பதற்காக ஒற்றை குரு முறையை குருகோவிந் சிங் அகற்றினார். அவருக்குப் பின் சீக்கிய மதப் புனித நூலான குரு கிரந்த சாஹிபே குரு என்று அறிவித்தார்.குரு கிரந்த சாஹிபின் கடைசிப்பகுதியான 'தஸ' எனும் பாகத்தை இவரே எழுதினார்.ராமாயணம்,மகாபாரதம் ஆகியவற்றின் சில பகுதிகளும், சண்டி சரிதர்,பகவதி தீவார், ராம் அவதார்,துர்க ஸப்தஸதி ஆகிய இந்து நூல்களையும் பஞ்சாபி மொழிக்கு மொழிப் பெயர்த்தார்.

”1698 ஆம் ஆண்டில் பச்சிட்டார் நாடக்” எனும் தன் வரலாற்று நூலை எழுதிய இவர் 1699 ஆம் ஆண்டில் சாதி, மத, இன மற்றும் பால்வழிப் பாகுபாடுகளையும் பிரித்து ஆள்வதையும் முடிவுக்குக் கொண்டு வர “கால்சா” எனும் அமைப்பை நிறுவினார்.

கோட்பாடுகள்[தொகு]

சீக்கியத்தில் மாற்றம் ஏற்படுத்திய குரு கோவிந்த் சிங் சில கோட்பாடுகளை வகுத்தார்.அதன் படி ஒவ்வொரு சீக்கிய ஆணும் கடவுளின் பிள்ளைகள் என்று உணர்வதற்காகத் தலைப்பாகையும் பஞ்ச 'க' வையும் வைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.

பஞ்ச் 'க'[தொகு]

இந்தி மொழியில் பஞ்ச் என்றால் ஐந்து.க- எனும் எழுத்து ஐந்து ககர எழுத்துக்களை முதன்மையாகக் கொண்ட செற்களைக் குறிக்கின்றது.

  • கேஸ-(நீண்ட தலை முடி,தாடி) கடவுள் தன்னை எப்படி படைத்தாரோ அப்படியே ஏற்றுக் கொள்ள,
  • கங்க-(சீப்பு)ஒருவரின் மனதினையும் , ஆன்மாவினையும் தூய்மையாக வைத்திருப்பதற்கு,
  • கிர்ப்பான்-(குத்துவாள்)தன்னையும் மற்ற மக்களையும் பாதுகாக்க,
  • கச்-(அரைக்காற்சட்டை)ஒரு நல்ல வாழ்க்கை வாழ,
  • கர-(எஃகு காப்பு) நல்ல விஷயங்களைச் செய்யத் தூண்ட
கல்ஸவின் பிறப்பிடம்
கல்ஸவின் பிறப்பிடம்

ஐந்தும் முறையே தியாகம்,தூய்மை,ஆன்ம சுத்தி,புலனடக்கம்,நேர்மை ஆகியவற்றின் சின்னங்கள் என்று கூறினார்.

கடமை[தொகு]

சீக்கியர் மது அருந்துதல், புகை பிடித்தல் கூடாது.நாள் தோறும் ஐந்துமுறை வழிபடுதல் வருமானத்தில் பத்தில் ஒரு பங்கு தானம் வட்டி வாங்காமை ஆகியவற்றை அவர்கள் கடைபிடித்துவருதலைக் கட்டாயமாக்கினார்.

இறப்பு[தொகு]

மகாராட்டிர மாநிலத்திலுள்ள நாண்டெட் என்னும் இடத்தில் அக்டோபர் 7, 1708இல் மரணமடைந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Destinations :: Patna". Archived from the original on 2014-09-18. பார்க்கப்பட்ட நாள் 2013-11-26.
  2. 2.0 2.1 வேதாந்த கேசரி; ஜீலை 2012; பக்கம் 10,11[தொடர்பிழந்த இணைப்பு]
  3. 3.0 3.1 வேதாந்த கேசரி; ஜீலை 2012; பக்கம் 12[தொடர்பிழந்த இணைப்பு]
  4. முனைவர் பெ.சுயம்பு எழுதிய இந்தியாவில் சமயங்கள் புத்தகம்,பக்கம் 161
  5. "Prominent Sikh Women". Archived from the original on 2018-06-27. பார்க்கப்பட்ட நாள் 2011-07-30. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  6. W. H. McLeod. The A to Z of Sikhism. Scarecrow Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8108-6828-8. http://books.google.com/books?id=amDuB0HDv5QC&pg=PA103&dq=guru+gobind+singh+three+wives&hl=en&ei=8ri0To_TCsKIrAfqpInoAw&sa=X&oi=book_result&ct=result&resnum=3&ved=0CDoQ6AEwAg#v=onepage&q=guru%20gobind%20singh%20three%20wives&f=false. 
  7. Constance Jones, James D. Ryan. Encyclopedia of Hinduism. Facts on File. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8160-5458-4. http://books.google.com/books?id=OgMmceadQ3gC&pg=PA417&dq=guru+gobind+singh+three+wives&hl=en&ei=8ri0To_TCsKIrAfqpInoAw&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CDQQ6AEwAQ#v=onepage&q=guru%20gobind%20singh%20three%20wives&f=false. 
  8. Dalbir Singh Dhillon (1988). Sikhism Origin and Development. Atlantic Publishers & Distributors. http://books.google.com/books?id=osnkLKPMWykC&pg=PA144&dq=guru+gobind+singh+%22three+wives%22#v=onepage&q=guru%20gobind%20singh%20%22three%20wives%22&f=false. பார்த்த நாள்: 2011-07-30. 
  9. Mahmood, Cynthia Keppley (1996). Fighting for faith and nation dialogues with Sikh militants. Philadelphia: University of Pennsylvania Press. பக். 43–45. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8122-1592-2. இணையக் கணினி நூலக மையம்:44966032. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குரு_கோவிந்த்_சிங்&oldid=3550631" இலிருந்து மீள்விக்கப்பட்டது