ஈன்றிக் வொன் இசுட்டீபன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈன்றிக் வொன் இசுட்டீபன்
மோல்டோவா வெளியிட்ட அஞ்சல்தலை

ஐன்றிக் வொன் இசுட்டீபன் (இடாய்ச்சு மொழி: Ernst Heinrich Wilhelm Stephan, ஆங்கில மொழி: Heinrich von Stephan சனவரி 7, 1831 - ஏப்ரல் 8, 1897) செருமன் பேரரசின் பொது அஞ்சல் இயக்குனராகப் பதவி வகித்தவர். செருமனியின் அஞ்சல் சேவையை ஒழுங்கமைத்தவர் இவரே. 1874 ஆம் ஆண்டில் அனைத்துலக அஞ்சல் ஒன்றியத்தை நிறுவுவதிலும் பெரும்பங்கு இவருக்கு உண்டு. 1877 ஆம் ஆண்டில் செருமனியில் தொலைபேசிச் சேவையை இவர் அறிமுகப்படுத்தினார்.[1]

பிறப்பு[தொகு]

இசுட்டீபன் பிரசிய இராச்சியத்தின் பொமெரேனியாவில் உள்ள இசுட்டால்ப் (Stolp) என்னும் இடத்தில் 1831 ஆம் ஆண்டு சனவரி மாதம் ஏழாம் தேதி பிறந்தார்.

பொறுப்புகள்[தொகு]

1849 ஆம் ஆண்டில் இவர் பிரசிய அஞ்சல் சேவையில், உள்ளூர் அஞ்சல் அலுவலராகப் பணியில் சேர்ந்தார். 1866 ஆம் ஆண்டில், நீண்டகாலமாகத் தனியாரால் நடத்தப்பட்டு வந்த அஞ்சல் சேவையை அரசுடமை ஆக்குவதற்கான திட்டத்துக்குப் பொறுப்பாக இவர் அரசினால் நியமிக்கப்பட்டார். 1870ல் வட செருமன் கூட்டமைப்புக்கான அஞ்சல்சேவை இயக்குனராக நியமிக்கப்பட்டர். தொடர்ந்து வேகமாகப் பல பதவி உயர்வுகள் இவரை நாடி வந்தன.

1876 ஆம் ஆண்டில் பிரசியப் பேரரசின் அஞ்சல்துறைத் தலைமை ஆளுனராக நியமிக்கப்பட்ட இவர், 1880ல் அஞ்சல் சேவைகளுக்குப் பொறுப்பான நேருதவிச் செயலர் ஆனார். 1895 ஆம் ஆண்டில் செருமனியின் அஞ்சல் சேவைகள் அமைச்சராகப் பதவியேற்றார்.

பணிகள்[தொகு]

தொடக்கத்தில் இசுட்டீபன் அஞ்சல் சேவைப் பணியாளராக இருந்த காலத்தில், செருமனி 17 பிரிவுகளாகப் பிரிந்து இருந்தது. இவற்றின் அஞ்சல் சேவைகள் தனித்தனியான கொள்கைகளைக் கொண்டிருந்ததோடு கட்டணங்களும் வெவ்வேறாக இருந்தன. முதலில், அஞ்சல்கள் அனுப்புவதை இலகுவாக்குவதற்காக, செருமனி முழுவதற்கும் ஒரே கட்டண விகிதத்தை அறிமுகப்படுத்துவதில் இவர் கவனம் செலுத்தினார்.

அஞ்சல் சேவையைத் தரப்படுத்துவதும், அனைத்துலக மட்டத்தில் ஒழுங்கமைப்பதும் இவரது இலக்குகளாக இருந்தன. இந்த முயற்சியில், செருமனியின் அஞ்சல், தொலைபேசிச் சேவைகளை ஒன்றிணைத்ததுடன், 1874ல், பேர்ன் நகரில் நடந்த பன்னாட்டு அஞ்சல் மாநாட்டை ஒழுங்கு செய்வதிலும் முன்னின்று உழைத்தார். இந்த மாநாட்டிலேயே அனைத்துலக அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்டது. 1865 ஆம் ஆண்டிலேயே, செருமனியில் தபால் அட்டையை அறிமுகப்படுத்த வேண்டும் என்னும் இவரது முன்மொழிவை இவர் 1870ல் அஞ்சல் சேவைகள் இயக்குனராகப் பதவியேற்ற பின்னரே நடைமுறைப்படுத்தினர்.

1870 - 71 காலகட்டத்தில் நடைபெற்ற பிரான்சு-பிரசியப் போர்க்காலத்தில், களத்தில் இருந்த படைப்பிரிவுகளிடையே தொடர்புகளுக்கான ஒரு வழியாக அஞ்சல் அட்டைகள் பரவலாகப் பயன்பட்டன. செருமனியில் தொலைபேசியை அறிமுகப் படுத்தியமைக்காகவும் இவரை மக்கள் நினைவுகூருகின்றனர்.

தொலைத்தொடர்பு, அஞ்சல் சேவை ஆகிய துறைகளில் தூய செருமன் மொழிக் கலைச்சொற்களை உருவாக்குவதிலும் இவர் முனைப்பாகச் செயல்பட்டார். இதன் பின்னரே தொலைபேசி, அஞ்சல்தலை, முகவரி போன்றவற்றுக்கான தூய செருமன் மொழிச் சொற்கள் கிடைத்தன. இவ்வாறு உருவாக்கப்பட்ட சொற்கள் இசுட்டீபனால் ஏற்றுக்கொள்ளப்பட்டு 1870களில் பயன்பாட்டுக்கு விடப்பட்டன.

இறப்பு[தொகு]

உலக அளவில் அஞ்சல் சேவையையைத் தரப்படுத்துவதில் முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்திய இசுட்டீபன் 1897 ஆம் ஆண்டு பெர்லினில் காலமானார்.

குறிப்புகள்[தொகு]

  1. ஆண்டன் ஹூர்தமான் (2003) தொலைதொடர்புகளின் உலகளாவிய வரலாறு (ஆங்கில மொழியில்) வைலி-ஐஇஇஇ, நியூ யார்க், பக்கங்கள் 169–171, ISBN 0-471-20505-2

உசாத்துணைகள்[தொகு]

  • Beyrer, Klaus and Behringer, Wolfgang (1997) Kommunikation im Kaiserreich: der Generalpostmeister Heinrich von Stephan (Communication in the German Empire: the Postmaster General Heinrich von Stephan) Museum für Post und Kommunikation, Braus, Heidelberg, ISBN 3-89466-211-5, in German
  • Eckhardt, Carl Conrad (1941) Heinrich von Stephan, Founder of the Universal Postal Union University of Colorado, Boulder, Colorado, இணையக் கணினி நூலக மையம் 16793710
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈன்றிக்_வொன்_இசுட்டீபன்&oldid=2713361" இலிருந்து மீள்விக்கப்பட்டது