தீர்வை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொருளியல் தொடர்பில், தீர்வை என்பது, வருமானம் ஈட்டுவதற்காக நாடொன்றினால் விதிக்கப்படுகின்ற ஒரு வகை வரி ஆகும். இது பொதுவாக ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவை தொடர்பில் விதிக்கப்படுகின்றது. இவற்றையே சுங்கத் தீர்வை எனக் குறிப்பிடுகின்றனர். தீர்வை வருமானம் ஈட்டுவதற்காக விதிக்கப்படுவது ஆயினும், வேறு சில இலக்குகளை அடைவதற்காகவும் தீர்வையைப் பயன்படுத்துவது உண்டு. குறிப்பிட்ட பொருட்களின் ஏற்றுமதியையோ இறக்குமதியையோ கட்டுப்படுத்தல், உள்ளூர் உற்பத்திகளுக்கு ஊக்கம் கொடுத்தல், நாட்டின் கல்வி, தொழில்துறை போன்ற துறைகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக அவசியமான பொருட்களின் இறக்குமதியை ஊக்குவித்தல் போன்ற தேவைகளுக்காக குறிப்பிட்ட சில பொருட்கள் மீதான தீர்வைகளைக் குறைப்பதும், கூட்டுவதும் உண்டு. பல வளர்முக நாடுகள் ஆடம்பரப் பொருட்கள் மீது கூடிய தீர்வைகளை விதிப்பதன் மூலம் நாட்டுக்கு மிகத் தேவையான அந்நியச் செலவாணி விரயத்தைக் கட்டுப்படுத்த முயல்கின்றன.

சுங்கத் தீர்வை[தொகு]

பன்னாட்டு வணிகத்தில், ஏற்றிமதி, இறக்குமதி என்பன தொடர்பில் விதிக்கப்படுகின்ற மறைமுக வரியே "சுங்கத்தீர்வை". பொருளியல் அடிப்படையில், சுங்கவரியும் ஒரு நுகர்வு வரி ஆகும். பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் தீர்வை இறக்குமதித் தீவை எனப்படும். அதேபோல, வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள் மீதான தீர்வை ஏற்றுமதித் தீர்வை ஆகும். துறைமுகங்களிலும், வானூர்தி நிலையங்களிலும் அமைந்துள்ள சுங்க அலுவலகங்களில் ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்யப்படும் பொருட்களைச் சோதனை செய்து தீர்வை அறவிடப்படுகிறது.

சுங்கத்தீர்வை கணிப்பு[தொகு]

பெறுமானத்தின் அடிப்படையில் தீர்வை விதிக்கப்படும் பொருள்களுக்கான தீர்வை மதிப்பிடத்தக்க பெறுமானத்தின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. சில வேளைகளில், ஒத்திசைந்த சுங்கத் தீர்வை முறையின் அடிப்படையில் தீர்வை கணிக்கப்படுவது உண்டு. இல்லாவிட்டால், தீர்வை கணிப்பதற்குப் பொருட்களின் பரிமாற்றத்துக்குரிய பெறுமானம் அடிப்படையாக அமைகிறது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=தீர்வை&oldid=3406009" இலிருந்து மீள்விக்கப்பட்டது