விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சனவரி 2, 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுங்கிங் மென்சன் ஹொங்கொங்கில் கவுலூண் தீபகற்ப நிலப்பரப்பின் முனையில் சிம் சா சுயி எனும் இடத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான கட்டடமாகும். ஹொங்கொங் வாழ் மக்கள் மத்தியில் மட்டுமன்றி, சுற்றுலா மற்றும் வணிக ரீதியாக ஹொங்கொங் வந்து செல்லும் பயணிகள் மத்தியில் நன்கு புகழ் பெற்ற கட்டடமாகும். ஹொங்கொங்கில் எங்குமே இல்லாத வகையில் ஒரே கட்டடத் தொகுதிக்குள் உலகின் பல்வேறு நாட்டு உணவு வகைகளும், ஹொங்கொங்கிலேயே மிகவும் மலிவான தங்குமிட இல்லங்களும் இந்த கட்டிடத்திலேயே உள்ளன. இந்த ஒரே கட்டடத்துக்குள் கிட்டத்தட்ட 80க்கும் அதிகமான தங்குமிட இல்லங்கள் உள்ளன. தமிழர்களின் உணவகங்கள் இக்கட்டிடத்தில் மட்டுமே உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. 1961 இல் கட்டப்பட்ட இக்கட்டடம் 17 அடுக்கு மாடிகளை கொண்டுள்ளது. தமிழர்கள், ஹொங்கொங்கில் வெவ்வேறு இடங்களில் வசித்து வந்தாலும், அதிகமானோர் இந்த கட்டடத்தின் அருகிலேயே வசிக்கின்றனர். சிலர் இக்கட்டத்தின் மேல் மாடிகளிலும் வசிக்கின்றனர். அத்துடன் பல்வேறு இடங்களில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருப்போரும் அடிக்கடி ஒன்று கூடும் இடமாகவும் இக்கட்டடமே திகழ்கிறது. மேலும்..


டி. என். தீர்த்தகிரி (1880-1953) தர்மபுரியைச் சார்ந்த விடுதலை போராட்ட வீரர். இவர் கள்ளுக்கடை மறியல், சட்டமறுப்பு, உப்பு சத்தியாகிரகம், நீல் சிலையை அகற்றும் போராட்டங்களின்போது பல்வேறு கட்டங்களில் 8 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டார். தீர்த்தகிரியார் 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் புரட்சி வழியில் செயல்பட்ட தலைவர்களான வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, பாரதியார், வாஞ்சிநாதன் ஆகியோரது அணியில் அவர்களின் தோழராக இருந்தார். ஆஷ் துரையின் படுகொலையாளியைத் தேர்வு செய்ய சீட்டு குலுக்கி போடப்பட்ட பெயர்களில் தீர்த்தகிரியாரின் பெயரும் ஒன்று. இவர் ஒரு இடதுசாரி சிந்தனையாளர். அதனால் முதலில் சுதந்திரம் நமது பிறப்புரிமையென்று குரல்கொடுத்த திலகரின் வழியில் சென்றவர். ஆயினும் காந்தியடிகளின் அகிம்சை நெறியே அரசியல் வழக்கானபோது அதனை ஏற்றுத் தொண்டனாக சுதந்திரப்போரில் பங்கேற்றார். சிறைக்கு வெளியே வாழ்ந்த காலத்தில் சுதந்திரப் போராட்டத்தை பரப்ப நாடகம் சிறந்த உத்தியாகயிருந்தது. இவர் பலமுறை வள்ளித் திருமணம், கோவலன், சதாரம் போன்ற நாடகங்களைத் தானே எழுதியும், நடித்தும் அரங்கேற்றினார். மேலும்..