பண்பாட்டுப் பேரரசுவாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பண்பாட்டுப் பேரரசுவாதம் (cultural Imperialism) என்பது, ஒரு நாட்டினத்தின் பண்பாட்டை இன்னொரு நாட்டினத்திடம் செல்வாக்குச் செலுத்தச் செய்யும் அல்லது செயற்கையாகத் திணிக்கும் ஒரு நடைமுறை ஆகும். பொதுவாக முதல் நாட்டினம், இரண்டாவதைவிடப் பெரிதாகவோ, பொருளியல் அல்லது படை பலத்தில் மேம்பட்டதாகவோ இருக்கும். இரண்டாவது நாட்டினம் சிறிதாகவோ அல்லது வலுக்குறைந்ததாகவோ இருக்கும். பண்பாட்டுப் பேரரசுவாதம், தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும் முறையானதொரு கொள்கையாகவோ, ஒரு பொதுவான மனப்போக்காகவோ இருக்கலாம். இச் சொல் பொதுவாக இந்த நடைமுறையை இழிவுபடுத்தும் நோக்கில், பெரும்பாலும் வெளிநாட்டுச் செல்வாக்கை எதிர்க்கும் நடவடிக்கைகள் தொடர்பிலேயே பயன்படுத்தப்படுகிறது.

தொடக்க வரலாறு[தொகு]

ஒரு காலத்தில் கிரேக்கப் பண்பாட்டினர், தாங்கள் கைப்பற்றிய நாடுகளில் உடற்பயிற்சிக் கூடங்களையும், அரங்குகளையும், பொதுக் குளியல் மண்டபங்களையும் கட்டி அந் நாட்டினரைத் தமது பண்பாட்டினுள் அமிழ்ந்துபோகச் செய்தனர். பொதுக் கிரேக்க மொழியின் பரவலும் இதற்கு ஒரு காரணமாக அமைந்தது. சீனப் பண்பாடு அதன் வல்லரசுகள் ஊடாக மங்கோலியா, யப்பான், வியட்நாம் மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்குப் பரவியது.அமெரிக்காக் கண்டங்களில் ஐரோப்பியக் குடியேற்றம் வளர்ச்சியுற்றபோது, ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், போர்த்துக்கல், பிரான்ஸ், நெதர்லாந்து போன்ற நாடுகள், தமது பொருளாதார வளத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக அங்கே நாடு பிடிக்கும் செயல்களில் ஈடுபட்டனர். இவ்வாறு கைப்பற்றிய குடியேற்ற நாடுகளில் தமது மொழிகளையும், பண்பாடுகளையும் திணித்தனர். இது போலவே 19 ஆம் நூற்றாண்டில் ரஷ்யப் பேரரசின் கீழ் இருந்த பகுதிகளில் ரஷ்யப் பண்பாடு திணிக்கப்பட்டது. பண்பாட்டுப் பேரரசுவாதத்தின் விளைவால் எழுந்த முக்கிய நிகழ்வுகளில் ஒன்று 1549 ஆம் ஆண்டில் இடம்பெற்ற வழிபாட்டு நூல் கலகம் ஆகும். இதில், பொது வழிபாட்டுக்கான ஆங்கில மொழி நூல்களை அறிமுகப்படுத்தியதன் மூலம், ஆங்கில அரசு பிற மொழிகளை அடக்க முயன்றது. இலத்தீனுக்குப் பதிலாக ஆங்கிலத்தைக் கொண்டு வருவதற்கும், கத்தோலிக்க மதத்தை மக்களுடைய மொழியாக ஆக்குவதற்குமான முயற்சியில் ஆங்கிலம் தேவாலய மொழியாகத் திணிக்கப்பட்டது.

முஸ்லிம் படைகளால் கைப்பற்றப்பட்ட நாடுகளில் அரபி மொழியும், இஸ்லாமியப் பண்பாடும் நிலை பெற்றது. மொரோக்கோவில் இருந்து இந்தோனீசியா வரையான பல இடங்களில் உள்ளூர் மொழிகளிலும், சமயங்களிலும், கட்டிடக்கலை, வழக்கங்கள் ஆகியவற்றிலும், பெயர்களிலும்கூட அராபிய இஸ்லாமிய மரபுகள் கலந்துவிட்டன. எனினும், இவற்றுள், இஸ்லாமிய நாடுகளல்லாத பிற நாடுகளுடன் தொடர்புகளைக் கொண்டிருந்த பகுதிகள் பலவற்றில் உள்ளூர் மரபுகளைத் தக்கவைத்துக் கொள்ளவும் முடிந்திருக்கிறது. எடுத்துக் காட்டாக, இஸ்லாமிய வழக்கங்களுக்குப் பொருந்தாத வயிறு குலுக்கும் ஆட்டம், இன்றும் மத்தியகிழக்கின் முஸ்லீம் நாடுகளில் வழங்கிவருவதைக் கூறலாம்.

16 ஆம் நூற்றாண்டில் பல ஆசிய நாடுகளைக் கைப்பற்றிய போத்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர் முதலியோர் பல்வேறு சலுகைகளை வழங்கியதன் மூலமும், பலவந்தமாகவும் உள்ளூர் மக்களிடையே தமது மதங்களையும் அதன் மூலம் பண்பாடுகளையும் புகுத்தினர். இந் நோக்கங்களுக்காக உள்ளூர் மத வழிபாட்டிடங்களை அழித்ததுடன், அம் மதங்கள் தொடர்பான நடவடிக்கைகளைத் தடையும் செய்தனர்.

கோட்பாடும் விவாதமும்[தொகு]

பண்பாட்டுப் பேரரசுவாதம் என்பது உள்ளூர் மக்கள் மீதான பலவந்தமான பண்பாட்டுப்பேறையோ (acculturation), தனிப்பட்டவர்கள் தாமாகவே விரும்பிப் பிற பண்பாடுகளைத் தழுவிக் கொள்வதையோ குறிக்கலாம். இவை இரண்டும் இரு வேறு பொருட் குறிப்புக் கொண்டிருப்பதால் இச்சொல்லின் ஏற்புடைமை குறித்து ஐயங்களும் உள்ளன. பண்பாட்டுப் பேரரசுவாதம் என்பதற்குச் சில துறைகளில் வேறுவிதமாகவும் பொருள் கொள்கிறார்கள் (எ.கா: ஊடகப் பேரரசுவாதம்).

பண்பாட்டுச் செல்வாக்கை அச் செல்வாக்குக்கு உட்படும் பண்பாடுகள் ஒரு பயமுறுத்தலாகவோ, அல்லது தமது பண்பாட்டு அடையாளங்களை வளப்படுத்தும் ஒன்றாகவோ நோக்கக்கூடும்.