டன்கிர்க் முற்றுகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டன்கிர்க் முற்றுகை
சிக்ஃபிரைட் கோடு போர்த்தொடரின் பகுதி
நாள் 15 செப்டம்பர் 1944 – 8 மே 1945
இடம் டன்கிர்க், பிரான்சு
ஜெர்மானியப் படைகள் சரணடைந்தன
பிரிவினர்
கனடா கனடா
 ஐக்கிய இராச்சியம்
செக்கஸ்லோவாக்கியா
பிரான்சு பிரான்சு
பெல்ஜியம் பெல்ஜிய எதிர்ப்பு படைகள்
 நாசி ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
Alois Liška அலோய் லிஸ்கா வொல்ஃப்காங் வான் குளூக்[1], பிரடரிக் ஃபிரீசியஸ்

டன்கிர்க் முற்றுகை (Siege of Dunkirk) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நடந்த ஒரு முற்றுகைச் சண்டை. இது சிக்ஃபிரைட் கோடு போர்த்தொடரின் ஒரு பகுதி. 1944ல் நாசி ஜெர்மனியின் கட்டுப்பாட்டிலிருந்த பிரான்சின் டன்கிர்க் துறைமுக நகரை நேசநாட்டுப் படைகள் முற்றுகையிட்டன. 1945ஆம் ஆண்டு ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடியும் வரை இந்த முற்றுகை நீடித்தது.

கனடியப் படைகள் ஆங்கிலக் கால்வாய் கடற்கரையில் அமைந்திருந்த பிரான்சு நாட்டுத் துறைமுகங்களை நாசி ஜெர்மனியிடமிருந்து கைப்பற்ற முயன்றன. டியப், லே ஆவர், போலோன், கலே ஆகிய துறைமுகங்களைக் கைப்பற்றிய பின் டன்கிர்க் துறைமுகத்தை அணுகின. ஹிட்லர் “கோட்டைகள்” என அறிவித்திருந்த துறைமுகங்களில் டன்கிர்க்கும் ஒன்று. அவற்றில் உள்ள ஜெர்மானியப் படைகள் சரணடையவோ காலி செய்யவோ கூடாதென்று உத்தரவிட்டிருந்தார். இதனால் டன்கிர்க் துறைமுகத்திலுள்ள ஜெர்மானியப் படைகள் பின்வாங்காமல் நேசநாட்டுப் படைகளை எதிர்த்தன.

டன்கிர்க் துறைமுகத்தைக் கைப்பற்ற ஒரு முழு அளவு நேரடித் தாக்குதல் தேவை என்பதை உணர்ந்த நேச நாட்டு தளபதிகள் அதனை முற்றுகை மட்டும் இட முடிவு செய்தனர். கால்வாய்க் கடற்கரை துறைமுகங்களைக் கைப்பற்றுவதை விட ஆண்ட்வெர்ப் துறைமுகத்தை விடுவிப்பதே நேசநாட்டு தளவாட இறக்குமதிக்கு உதவும் என்பதை அவர்கள் உணர்ந்ததே இதற்கு காரணம். கலே போன்ற பிற துறைமுகங்களில் அமைந்திருந்த கடற்கரை பீரங்கிக் குழுமங்கள் ஆங்கிலக் கால்வாயில் நேச நாட்டுக் கப்பல் போக்குவரத்துக்கு அபாயமாக இருந்ததால் அத்துறைமுகங்களைக் கைப்பற்ற வேண்டியிருந்தது. ஆனால் டன்கிர்கில் அத்தகைய பீரங்கிகள் இல்லாததால் டன்கிர்க்கை கைப்பற்ற அவசியமற்று போனது. செப்டம்பர் 15, 1944ல் டன்கிர்க் சுற்றி வளைக்கப்பட்டு முற்றுகை தொடங்கியது. பின் சில வாரங்களில் முற்றுகையில் ஈடுப்பட்டிருந்த பல படைப்பிரிவுகள் ஷெல்ட் சண்டையில் பங்கேற்கச் சென்று விட்டன. செக்கஸ்லோவாக்கிய நாடுகடந்த அரசின் 1வது கவச பிரிகேட் மட்டும் டன்கிர்க் முற்றுகையைத் தொடர்ந்தது. அடுத்த பல மாதங்களுக்கு இரு தரப்புகளுக்குமிடையே அவ்வப்போது சிறு சிறு மோதல்கள் நடந்து வந்தன. ஆனால் டன்கிர்க்கைக் கைப்பற்ற நேசநாட்டுப் படைகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தேவையான அளவு உணவு மற்றும் பிற தளவாடப் பொருட்கள் இருந்ததால், டன்கிர்க்கின் ஜெர்மானியப் பாதுகாவலர்கள் எளிதில் முற்றுகையைச் சமாளித்தனர். இம்முற்றுகை 1945, மே 7ம் தேதி ஜெர்மனி நேசநாட்டுப் படைகளிடம் சரணடைவது வரை நீடித்தது. அதற்கு மறுநாள் டன்கிர்கிலிருந்த ஜெர்மானியப் படைகளும் சரணடைந்தன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ammentorp, Steen (2000 - 2009). "von Kluge, Wolfgang, Lieutenant-General". The Generals of WWII. பார்க்கப்பட்ட நாள் 12 திசம்பர் 2009. {{cite web}}: Check date values in: |date= (help); Cite has empty unknown parameter: |coauthors= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=டன்கிர்க்_முற்றுகை&oldid=3930498" இலிருந்து மீள்விக்கப்பட்டது