பக்கீர்பைத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மரபு ரீதியான இஸ்லாமிய இசைகளுள் பக்கீர்பைத் எனும் இசையும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. இதனை நாடோடிப் பாடல்கள் என்றும் தமிழில் பொருள் கொள்ளலாம்.


இந்தியா முஸ்லிம்களின் இசை வடிவம்[தொகு]

இந்தியாவில் முஸ்லிம்கள் மத்தியில் காணப்பட்ட இந்த இசை இலங்கையிலும், இந்தியப் பரம்பரையினூடாகப் பிரபல்யம் பெற்றது. இன்று இலங்கையில் மிகவும் அருகிவரும் ஓர் இசைக் கலையாக 'பக்கீர்பைத்' காணப்படுகிறது.

இந்த இசைக்கலை கிழக்கு மாகாணத்திலும், புத்தளம், மன்னார் போன்ற பகுதியிலும் காணப்பட்டது. அதேநேரம், தென்மாகாணத்திலும் இந்த பக்கீர்பைத்துகளைப் பாடக்கூடியவர்கள் இருந்துள்ளனர்.

பைத்துக்கள்:[தொகு]

‘பைத்’துக்கள் என்பதன் தமிழ் மொழிப் பதம் 'கவிதைகள்' அல்லது ‘பா’க்கள் என்று பொருள் கொள்ளப்படும்.

இசைக் கருவிகள்[தொகு]

அராபிய இசைக்கலையில் ஒரு பக்கம் திறந்த இசைக் கருவிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ‘ரபான்’ போன்ற இசைக்கருவிகளே இலங்கையில் முஸ்லிம்களால் பயன்படுத்தப்பட்டது.

'தாயிலா ரபான்'[தொகு]

'பக்கீர்பைத்”துக்கள் இசைக்கப்படும்போது 'தாயிலா ரபான்' எனப்படும் ரபான் வகை அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. இலங்கையில் சிங்களவர் மத்தியிலும் அருகிவரும் ‘விருது கீ’ எனப்படும் விருதுப் பாடல்களுக்கும் இத்தகைய ரபான்களே பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலும் ஆண்களே 'பக்கீர்பைத்”துக்களை பாடுவர்.

கருப்பொருள்[தொகு]

பக்கீர் பைத்துக்களில் காணப்படும் கருப்பொருள் பெரும்பாலும் ஒன்றைப் பற்றிப் புகழ்வதாகவே அமைந்திருக்கும். இலங்கையில் ஆரம்ப காலத்தில் பக்கீர் பைத்துக்கள் அரபி மொழியிலேயே பாடப்பட்டன. பிற்காலத்தில் தமிழ் மொழியிலும் பைத்துக்கள் பாடப்பட்டன.

பிரபல்யமான பக்கீர் பைத்துக்கள்[தொகு]

நூறு மசாலா, காட்டுபாவா சரித்திரம், திருவெண்ட அரசன் சரித்திரம், தாய் மகளுக்கு உபதேசிக்கும் 'பீர்சா உம்மா சரித்திரம்', பாத்திமா நாயகி தன் கணவருக்குச் செய்த 'வசியத்து நாமம்'

பக்கீர் பைத்துக்கள் பற்றிய ஆய்வு[தொகு]

இலங்கையில் “பக்கீர்பைத்”துக்கள் என்ற இசைவடிவம் மிகவும் அருகிவிட்டது. நவீன இசைக்கருவிகளின் வளர்ச்சியுடன் இத்தகைய மரபு ரீதியான கவிதை முறை ஒருசில வயதானவர்கள் மத்தியில் மாத்திரம் காணப்படுகின்றதே அன்றி புதிய தலைமுறையினரிடம் இது காவப்படவில்லை.

1990ம் ஆண்டுகளில் இலங்கையில் முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் முஸ்லிம்கள் மத்தியில் அருகிவரும் கலைகளை புத்தூக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இவைகள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த மரபு வழிக் கவிஞர்கள் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தினால் நடத்தப்பட்ட ‘வாழ்வோரை வாழ்த்துவோம்’ விருது வழங்கும் நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டனர்.

இக்கலையில் ஈடுபடுவோர்.[தொகு]

சில வரலாற்றுப் பதிவுகளின்படி இந்தியாவிலிருந்து இக்கலை இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட காலங்களில் குடும்பத்தினர் மத்தியில் குடும்பத்தினரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக இசைக்கப்பட்டதாகவும், முஸ்லிம்கள் சார்ந்த வைபவங்களிலும், விழாக்களிலும் பாடப்பட்டதாகவும் அறியமுடிகின்றது. மேலும், முஸ்லிம்கள் நோன்பு நோற்கும் மாதமான ரமழான் மாதத்தில் அதிகாலையிலேயே மக்களைத் துயிலெழுப்புவதற்காக வேண்டியும் இந்த பக்கீர்பைத் பயன்படுத்தப்பட்டது.

பின்பு வறுமைக்கோட்டின் கீழ் வாழும் சில முஸ்லிம்கள் (இவர்கள் ‘பக்கீர்’ என்று அழைக்கப்படுகின்றனர்) இடம் விட்டு இடம் நகர்ந்து தெருத்தெருவாக பைத்துக்களை இசைத்து தமது ஜீவானோபாயத்துக்காக வேண்டி பயன்படுத்தியுள்ளனர். இக்கலை விரைவாக அருகியமைக்கு இதுவும் ஒரு காரணமாகக் கூறப்படுகின்றது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்கீர்பைத்&oldid=2062901" இலிருந்து மீள்விக்கப்பட்டது