வாயிலார் நாயனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாயிலார் நாயனார்
பெயர்:வாயிலார் நாயனார்
குலம்:வேளாளர்
பூசை நாள்:மார்கழி ரேவதி
அவதாரத் தலம்:திருமயிலை
முக்தித் தலம்:திருமயிலை [1]

வாயிலார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்.

இவர் நாயன்மார் சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தவர்[2][3].

காலம்[தொகு]

இவர் எப்பொழுது வாழ்ந்தார் என்று திட்டவட்டமாகத் தெரியவில்லை. இவரைப்பற்றி 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேக்கிழார் அவர்கள் தம்முடைய பெரியபுராணத்திலும், 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயன்மார், அவருடைய திருத்தொண்டத் தொகையில் "தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்" என்று கூறியிருப்பதாலும், இவர் 8 ஆம் நூற்றாண்டுக்கும் முன்னர் வாழ்ந்த சிவனடியார் என்பது புலப்படும்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

இவர் வாழ்க்கையின் வரலாறு மிகவும் சுருக்கமானது. இவர் சிவபெருமானையே எப்பொழுதும் மனத்திலே வைத்துத் தொழுது ஏதும் பேசாமலே அன்பு செய்து இறைபதம் எய்தினார் என்பதே. இவர் தொல்குடியில் பிறந்த வேளாளர் என்பதை பெரிய புராணத்தில்,

மன்னு சீர்மயி லைத்திரு மாநகர்த்
தொன்மை நீடிய சூத்திரத் தொல்குல
நன்மைசான்ற நலம்பெறத் தோன்றினார்;
தன்மை வாயிலார் என்னும் தபோதனர்

கூறுகின்றார். இதில் "தன்மை வாயிலார் என்னும் தபோதனர்" என்னும் தொடர் மிகவும் இன்றியமையாதது. வாயிலார் என்னும் பெயர் அவர் பேசாமல், மௌனமாய் சிவன் பால் அன்பு வழிபாடு செய்தவர் என்னும் பொருளோடு, அவர் என்றும் "நான்" என்னும் அகந்தை எழாத அரும் தன்மையைப் பெற்றிருந்தார் என்பதை "தன்மை வாயிலார்" என்பது குறிக்கும். தன்மை என்பது "நான்" என்பதைக் குறிப்பது.

வாயிலார் தொண்டைநாட்டைச் சேர்ந்த ஆறு நாயன்மார்களில் ஒருவர். இவர் தற்போதைய இந்தியாவின் சென்னை நகரத்தில் உள்ள மயிலாப்பூரில் பிறந்து வேளாளராக வாழ்ந்தார். இவரது பெயரைக் கொண்டே பேசும் திறனற்ற மாற்றுத்திறனாளி என்கின்றனர்.

மானசீக வழிபாடு[தொகு]

வழிபாடு மற்றும் சடங்குகளின் மீது நம்பிக்கையற்றவராக இருந்தார். அதனால் தான் விரும்புகின்ற ஈசனை மானசீக வழிபாடு செய்தார். தன் கற்பனையால் சிவனுக்குக் கோயில் எழுப்பினார். கோயில் வெவ்வேறு உலோகங்களால் செய்யப்பட்ட ஐந்து சுவர்களைக் கொண்டதாக விவரிக்கப்பட்டுள்ளது.

சிவாலயமானது பல தங்கக் கோபுரங்களைக் கொண்டதாகவும், வெள்ளி சுவர்கள், தங்கத் தூண்கள் மற்றும் வைரம் மற்றும் மாணிக்கங்கள் போன்ற விலையுயர்ந்த நகைகள் பதிக்கப்பட்டதாகும் இருந்துள்ளது. கோயிலின் உள்ளே கண்ணாடியாலும், வைரங்களாலும் ஒளி பரவின. கருவரையில் அழகான சிவலிங்கம் உள்ளது. அந்த சிவலிங்கத்தினை கற்பகவிருட்ச மலர்கள் அலங்கரித்தன.


தனிச் சன்னதி[தொகு]

வாயிலார் நாயன்மாருக்கு திருமையிலை கபாலீசுவரர்-கற்பகாம்பாள் கோயிலில் முருகன் உண்ணாழிகைக்கு அருகில் தனி உண்ணாழிகை (சன்னதி) உண்டு.

குருபூசை[தொகு]

மார்கழியில் இரேவதி நாள்மீன் கூடும் நாளில் குருபூசை என்னும் வழக்கம் உண்டு[4][5] 2008 ஆண்டில் வாயிலாரின் திருநட்சத்திரம் மார்கழி 29 (ஜனவரி 14) ஆம் நாள் வந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "நாயன்மார் பெருமக்கள் அவதாரத் தலங்கள் மற்றும் முக்தித் தலங்கள்". Archived from the original on 2015-02-24. பார்க்கப்பட்ட நாள் 2015-03-02.
  2. மகான்கள், தொகுப்பாசிரியர் (30 ஜூலை 2010). நாயன்மார்கள். தினமலர் நாளிதழ். https://m.dinamalar.com/temple_detail.php?id=39. 
  3. 63 நாயன்மார்கள், தொகுப்பாசிரியர் (20 ஜனவரி 2011). வாயிலார் நாயனார். தினமலர் நாளிதழ். https://m.dinamalar.com/temple_detail.php?id=1393. 
  4. தமிழ்ப் பஞ்சாங்கம். எ.கா வாசன் சுத்த திருக்கணித பஞ்சாங்கம்; வாக்கிய பஞ்சாங்கம்
  5. அ. ச. ஞானசம்பந்தன், சித்திர பெரியபுராணம் 2 ஆம் பதிப்பு, இராமிலிங்கர் பணி மன்றம், 102, அண்ணா சாலை, கிண்டி, சென்னை 600 032 பக் 194 (மொத்த பக்கம் 248) ஆண்டு 1991 ?
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாயிலார்_நாயனார்&oldid=3693381" இலிருந்து மீள்விக்கப்பட்டது