பஞ்சரங்க தலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பஞ்சரங்க தலங்கள் அல்லது பஞ்சரங்க ஷேத்திரங்கள் என்பன காவிரி பாயும் பரப்பின் கரையில் அரங்கநாதரின் (திருமால்) கோவில்கள் அமைந்துள்ள ஐந்து மேடான நதித்தீவுகள் அல்லது நதித்திட்டுக்கள் ஆகும். ரங்கம் என்றால் ஆறு பிரியுமிடத்தில் உள்ள மேடான பகுதி என்று பொருள்படும்[1]. ரங்கம் என்றால் அரங்கம், அதாவது மண்டபம், சபை என்றும் பொருள் படும் [2]


தமிழகம், கர்நாடக[தொகு]

ஆதிரங்கம், மத்தியரங்கம், அப்பாலரங்கம், சதுர்த்தரங்கம், பஞ்சரங்கம் என ஐந்தும் பஞ்சரங்கதலங்கள் என்று சொல்லப்படுகின்றன. இவற்றில் ஒன்று கர்நாடகாவிலும் மற்ற நான்கும் தமிழ்நாட்டிலும் உள்ளன.

  1. ஆதிரங்கம் - ஸ்ரீரங்கப்பட்டணம் (கர்நாடக மாநிலம்)
  2. மத்தியரங்கம் - ஸ்ரீரங்கம் (தமிழ்நாடு)
  3. அப்பாலரங்கம் - திருப்பேர்நகர் என்ற கோவிலடி (தமிழ்நாடு)
  4. சதுர்த்தரங்கம் - சாரங்கபாணி கோவில், கும்பகோணம் (தமிழ்நாடு)
  5. பஞ்சரங்கம் - பரிமள ரங்கநாதர் கோவில் திருஇந்தளூர், மாயவரம் (தமிழ்நாடு)

ஆதிரங்கம்[தொகு]

அரங்கநாதசுவாமி கோவில், ஸ்ரீரங்கப்பட்டணம்

காவிரிநதியின் முதல் தீவு கர்நாடக மாநிலம், ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உருவாகிறது. இங்கு அரங்கநாதருக்கு மாலையிட்டது போல, காவிரி நதி இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேர்கிறது. எனவே இது ஆதிரங்கம் எனப்படுகிறது ஸ்ரீரங்கப்பட்டணத்தில் அமைந்துள்ளது அரங்கநாதசுவாமி கோவில். சப்தரிஷிகளில் ஒருவரான கவுதமர், இங்கு வந்து பெருமாளின் தரிசனம் வேண்டி தவமிருந்தார். பெருமாள் அவருக்கு புஜங்க சயன திருக்கோலத்தில் காட்சி தந்தார். பெருமாளிடம் அதே கோலத்தில் இங்கு எழுந்தருளும்படி வேண்டிக் கொண்டார். இக்கோவில் 9 ஆம் நூற்றாண்டில் கங்கர் வம்ச அரசர்களால் கட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஹோய்சாள மற்றும் விசயநகர மன்னர்களாலும் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரி நதி மீண்டும் இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேருமிடம் சிவசமுத்திரம் ஆகும். இங்கு அமைந்துள்ள பெருமாள் கோவில் மத்தியரங்கம் என்று ஒரு சிலரால் அழைக்கப்படுகிறது.

மத்தியரங்கம்[தொகு]

அரங்கநாதசுவாமி கோவில், ஸ்ரீரங்கம்
அரங்கநாதசுவாமி

தமிழ்நாட்டில் காவிரி நதி திருச்சிராப்பள்ளி அருகே மீண்டும் இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேருமிடம் ஸ்ரீரங்கம் ஆகும். இது மத்தியரங்கம் என்று பெயர் பெறுகிறது சிலர் இதை அனந்தரங்கம் என்ற பெயரிலும் அழைக்கிறார்கள். முதல் திவ்ய தேசமான ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில் காவேரிக் கரையில் அமைந்த, பஞ்சரங்க க்ஷேத்திரங்களில் ஒன்று. ஸ்ரீரங்கம் 21 கோபுரங்களும் 7 சுற்று பிரகாரங்களும் உடைய ஒரு சுயம்புத் தலம். இங்கு பெருமாள் தங்கத்தால் வேயப்பட்ட விமானத்தின் கீழே புஜங்க சயனத் திருக்கோலத்தில் தெற்கு நோக்கியபடி காட்சி தருகிறார். மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம்.

அப்பாலரங்கம்[தொகு]

அப்பக்குடத்தான் (அப்பலா ரங்கநாதர்) கோவில், திருப்பேர்நகர் என்ற கோவிலடி

பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்றாகவும், பஞ்சரங்க தலங்ளில் அப்பாலரங்கம் என்று சொல்லப்படும் திருப்பேர்நகர் என்ற கோவிலடி அப்பால ரெங்கநாதர் கோயில் கொள்ளிடம் இரண்டாகப் பிரியுமிடத்தில் இந்திரகிரி என்று அழைக்கப்படும் சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது. திருச்சிராப்பள்ளி|திருச்சிக்கு]] அருகில், லால்குடியிலிருந்து சுமார் 10 கிமீ தொலைவில், கொள்ளிடத்தின் தெற்குக் கரையில் அமைந்துள்ள இந்த தலத்திற்கு திருச்சியிலிருந்து (25 கி.மீ.) கல்லணை சென்று அங்கிருந்து கோவிலடி செல்லவேண்டும். இந்திரகிரி மற்றும் பலாசவனம் என்ற புராதனப் பெயர்களாலும் அறியப்படும் இந்த திவ்யதேசம் ஸ்ரீரங்கத்திற்கும் முன்னதாக ஏற்பட்டது என்று நம்பப்படுகிறது. உபமன்யுவிடமிருந்து பெருமாள் அப்பக்குடத்தை பெற்றதால் இவருக்கு அப்பக்குடத்தான் (அப்பலா ரங்கநாதர்) என்ற பெயர் வழங்கலாயிற்று. இங்கு பெருமாள் மேற்கு நோக்கிய கோலத்தில், புஜங்க சயனத்தில் அருள்பாலிக்கிறார். பெருமாள், இந்திரனுக்குக் கர்வம் போக்கியும், மார்க்கண்டேய முனிவருக்கு எம பயம் நீக்கியும், உபரிசிரவசு மன்னனுக்கு சாபம் மற்றும் பாவம் போக்கியும் அருளிய தலம்.[3] தாயாரின் திருப்பெயர்கள் இந்திரதேவி மற்றும் கமலவல்லி என்பனவாகும்.

சதுர்த்தரங்கம்[தொகு]

சாரங்கபாணி கோவில்,கும்பகோணம்

பெருமாளின் 108 திருப்பதிகளுள் (உபய பிரதான திவ்யதேசம்) ஒன்றாகவும், பஞ்சரங்க தலங்களில் சதுர்த்தரங்கம் என்று சொல்லப்படும் சாரங்கபாணி கோவில், காவிரி நதி - காவிரி, அரசலாறு என்று - இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேரும் இடமான கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இந்த திவ்யதேசத்தில் பெருமாள் சன்னதி ஒரு தேர் போன்ற அமைப்பில் இருக்கிறது. தேரின் இருபுறங்களிலும் உத்ராயண, தெட்சிணாயன வாசல்கள் உள்ளன. பெருமாள் வைதிக விமானத்தின் கீழ் சங்கு, சக்கரம் மற்றும் சாரங்கம் என்னும் வில்லும் ஏந்தியவாறு கிழக்கு நோக்கி உத்தான சயன திருக்கோலத்தில் அருள் புரிகிறார். எனவே இவர் சாரங்கபாணி என்று பெயர் பெற்றுள்ளார் இத்தலத்தில் பெருமாளை ஏழு ஆழ்வார்கள் மங்களாசாஸனம் செய்துள்ளார்கள். [4]

பஞ்சரங்கம்[தொகு]

காவிரியின் வடகரையில் அமைந்துள்ள திருஇந்தளூர் திருத்தலம் பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. பஞ்சரங்க தலங்களில் பஞ்சரங்கம் மற்றும் அந்தரங்கம் என்று சொல்லப்படுகிறது. வேதசக்ர விமானத்தின் கீழ் பரிமளரங்கநாதர் சதுர் புஜங்களுடன் ஆதிசேஷன் மீது கிழக்கு முகமாக வீரசயன திருக்கோலத்தில் அருள்புரிகிறார். பெருமாள் சந்நிதியின் இருபுறங்களிலும் ஸ்ரீதேவி கங்கையாகவும், பூதேவி காவிரியாகவும் காட்சியளிப்பது இத்தலத்தின் சிறப்பாகும். பரிமளரங்கநாதர் திருவடிகளில் யமதர்மராஜரும், அம்பரீஷ சக்ரவர்த்தியும் அமர்ந்து இரவும், பகலும் பூஜித்துக் கொண்டிருக்கிறார்கள். தாயாரின் திருப்பெயர் பரிமளரங்கநாயகி ஆகும். சந்திரன், சந்திர புஷ்கரிணி தீர்த்தத்தில் நீராடித் தன் சாபம் நீங்கப்பெற்றமையால் இவ்வூர் திருஇந்தளூர் எனப்பெயர் பெற்றது. [5][6]

மேற்கோள்கள்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சரங்க_தலங்கள்&oldid=3733549" இலிருந்து மீள்விக்கப்பட்டது