செங்கண்ணனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செங்கண்ணனார் சங்ககாலப் புலவர். இரண்டு பாடல்கள் இவர் பாடியனவாக உள்ளன. அவை: அகநானூறு 39, நற்றிசை 122.

செங்கணான் எனபவன் சோழ அரசன். செங்கண்ணனார், செங்கணான் என்னும் தமிழ்ப்பெயரை வடமொழியாளர் 'ருத்திரன்' என்பர். இது சிவனைக் குறிக்கும் பெயர்களில் ஒன்று.

பாடல் சொல்லும் செய்தி[தொகு]

நிலங்கிளை நிலை[தொகு]

அவன் பொருளீட்டிக்கொண்டு திரும்பிவிட்டான். கழன்ற அவளது வளையல் தோளில் செறிந்து நிற்கலாயிற்று. அவள் நிலத்தில் காலால் கீறிக்கொண்டு நின்றாள். செல்லும் வழியில் என்னை நினைத்தேனும் பார்த்ததுண்டா என்றாள். நீ நொதுமல் மொழி பேசாதே. உன்னை மறப்பேனோ என்றான். அப்போது அவளது முள்ளெயிற்றுத் துவர்வாயில் முறுவல் அரும்பியது. அவன் அவளை இன்முகத்தோடு பார்த்து நகைத்தான். ஊடலா என்றான். அவன் நெற்றியை நீவிக் கூந்தலைக் கோதினான். உன்னை விட்டுவிட்டுப் பிரிந்ததால் நீ புலவி கொள்வது சரிதான் என்றான். நான் சென்ற வழியை நினைத்துப்பார் என்று பாலைநில வழி பற்றிச் சொல்கிறான்.

மூங்கிலில் பற்றிய தீ காடெல்லாம் பரவி எரிந்துவிட்டது. அதனால் சாத்துக் கூட்டத்துக்கே வழி தெரியவில்லை. புலிக்குப் பயந்து யானைக் கூட்டமே தடுமாறிக்கொண்டிருந்தது. வெயிலைத் தாங்க முடியாமல் மானினம் நிழலை நோக்கித் தாவிக்கொண்டிருந்தது. (இப்படிப்பட்ட வழியில் உன்னையும் அழைத்துச் சென்றிருந்தால் என்ன பாடு படுவாய்?) என்றான். (அகம் 39)

நீயே சூழ்தல் வேண்டும்[தொகு]

தினை அறுவடை ஆகிவிட்டது. ஊரில் மௌவல் (=மரமல்லிகை) பூத்துக் குலுங்குகிறது. வரையக நாடன் வருவானோ என்று அன்னையும் அமராக் கண்ணோடு முகம் காட்டுகிறாள். இந்த நிலையில் நீ என்ன செய்யவேண்டும் என்பதை நீதான் எண்ணிப் பார்த்துக்கொள்ளவேண்டும் - என்று தோழி தலைவனுக்குக் கூறுகிறாள். (நற்றிணை 122)

"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்கண்ணனார்&oldid=2718044" இலிருந்து மீள்விக்கப்பட்டது